அக்டோபர் 10, 2026 அன்று உலக மனநல தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த ஆண்டின் அதிகாரப்பூர்வக் கருப்பொருள், "Lived experiences Heard: Real voices, Real change (வாழ்வியல் அனுபவங்களைக் கேட்போம்: உண்மையான குரல்கள், உண்மையான மாற்றங்கள்)" என்பதாகும். உடலுக்குப் பருமன் ஏற்படுவது போல, மூளைக்கும் 'மனப் பருமன்' (Mental Obesity) ஏற்படும் அபாயம் உள்ளது.
வயதாகும்போது உங்கள் மூளையை ஆரோக்கியமாகவும் கூர்மையாகவும் வைத்திருக்க இரண்டு அடிப்படை விஷயங்கள் தேவை: 'மாற்றம்' மற்றும் 'ஆர்வம்'. நீங்கள் செய்யும் எந்தவொரு செயலும் உங்களுக்கு மிகவும் பழகிப்போய்விட்டால், அங்கு ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்ற ஆர்வமே உங்கள் மூளையை வேகமாகவும் திறமையாகவும் இயங்க வைக்கும். மனநலத்தை மேம்படுத்த இதோ 10 எளிய வழிகள்:
1. புதிய புத்தகங்கள் படியுங்கள்: எப்போதும் ஒரே மாதிரியான புத்தகங்களைப் படிக்காமல், உங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத புதிய தலைப்புகளில் படியுங்கள். பொருளியல் பற்றியோ அல்லது வெளிநாட்டு நாவல்களையோ படியுங்கள். இது உங்கள் மூளையின் கற்பனைத் திறனைத் தூண்டி, புதிய சிந்தனைகளை உருவாக்கும்.
2. மூளைக்கான விளையாட்டுகள்: சுடோகு (Sudoku), குறுக்கெழுத்துப் போட்டிகள் போன்ற விளையாட்டுகள் நம் மூளையின் வேகம் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும். இதற்காக மணிக்கணக்கில் செலவிடாமல், தினமும் வெறும் 15 நிமிடங்கள் விளையாடினாலே போதும்.
3. மறுகையைப் பயன்படுத்துங்கள்: நீங்கள் வலது கை பழக்கம் உள்ளவர் என்றால், கதவைத் திறக்கவோ அல்லது சாவியைப் பயன்படுத்தவோ உங்களின் இடது கையைப் பயன்படுத்திப் பாருங்கள். இந்தச் சிறிய மாற்றம், உங்கள் மூளையில் புதிய நரம்புப் பாதைகளை உருவாக்கும். இதை நினைவூட்ட உங்கள் கைக்கடிகாரத்தை மறுகையில் கட்டிக்கொள்ளுங்கள்.
4. மொபைல் எண்களை மனப்பாடம் செய்யுங்கள்: இன்று எல்லாமே ஸ்மார்ட்போனில் பதிவாகிவிடுவதால் நாம் எண்களை மனப்பாடம் செய்வதை விட்டுவிட்டோம். உங்கள் நினைவாற்றலைச் சோதிக்க, தினமும் ஒரு புதிய மொபைல் எண்ணையாவது மனப்பாடம் செய்யப் பழகுங்கள்.
5. மூளைக்கான உணவுகள்: உங்கள் மூளைக்கு ஆரோக்கியமான கொழுப்பு தேவை. சால்மன் மீன், வால்நட், ஆளிவிதை மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். கெட்ட கொழுப்புகள் உள்ள துரித உணவுகளை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுங்கள்.
6. வழக்கத்தை மாற்றுங்கள்: ஒரே மாதிரியான அன்றாடப் பழக்கவழக்கங்கள் மூளையை மந்தமாக்கிவிடும். கடைக்குச் செல்லும் வழியை மாற்றுவது, டெசர்ட்டை முதலில் சாப்பிடுவது போன்ற சிறு மாற்றங்கள் உங்கள் மூளையைத் தட்டியெழுப்பி விழிப்புடன் செயல்பட வைக்கும்.
7. புதிய பாதையில் பயணியுங்கள்: தினமும் செல்லும் பாதையில் செல்லாமல், மாற்றுப் பாதையிலோ அல்லது குறுக்குத் தெருக்களிலோ சென்று பாருங்கள். இது மூளையின் திசை அறியும் திறனை (Spatial Memory) மேம்படுத்தும்.
8. புதிய திறனைக் கற்றுக்கொள்ளுங்கள்: புதிதாக ஒன்றை சமைக்கக் கற்றுக்கொள்வது அல்லது ஒரு புதிய கலையைக் கற்பது மூளையின் பல்வேறு பகுதிகளை ஒரே நேரத்தில் வேலை செய்ய வைக்கும்.
9. பட்டியல் இடுங்கள்: நீங்கள் சென்ற ஊர்கள், சாப்பிட்ட சுவையான உணவுகள் எனப் பட்டியல் இடுங்கள். இது பழைய நினைவுகளை மீட்டெடுக்க உதவும். மளிகைப் பட்டியல் எழுதினாலும், அதை மனதிலேயே வைத்துப் பொருட்கள் வாங்கப் பழகுங்கள்.
10. புதிய பொழுதுபோக்கு: வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய புகைப்படம் எடுத்தல், வரைதல், இசைக்கருவி வாசித்தல் அல்லது எழுதுதல் போன்ற புதிய பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுத்து உங்கள் மனதை உற்சாகமாக வைத்திருங்கள்.
நம் உடலை ஜிம்மிற்குச் சென்று ஃபிட்டாக வைத்துக்கொள்வது போல, மூளைக்கும் பயிற்சிகள் கொடுத்து ஃபிட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த 10 எளிய வழிகளைப் பின்பற்றி, மனப் பருமனைத் தவிர்த்து, கூர்மையான மற்றும் சுறுசுறுப்பான மூளையைப் பெறுவோம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!