

சமையலறையில் சமைக்கும் பொழுது, சூடான திரவங்களைக் கையாளும் பொழுது, மின்சாதனங்களை பயன்படுத்தும் பொழுது அல்லது நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை கையாளும் பொழுது தீ விபத்து நொடிப்பொழுதில் ஏற்படலாம். சில தீக்காயங்கள் சிறியவையாகவும் அடிப்படை பராமரிப்பிலேயே குணமாகக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் சில சருமத்திற்கும், அதன் கீழுள்ள திசுக்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உடனடியாக மருத்துவ கவனிப்பு தேவைப்படும். தீக்காயம் ஏற்பட்ட பிறகு முதல் ஐந்து நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. சரியான முதல் உதவி செய்வது வலியைக் குறைத்து, திசு சேதத்தைக் கட்டுப்படுத்தி தொற்று அபாயத்தையும் குறைக்கும்.
தீக்காயம் ஏற்பட்ட முதல் ஐந்து நிமிடங்களில் பதற்றம் அடையாமல் உடனடியாகச் செய்ய வேண்டிய சில முக்கியமான முதலுதவிகள் உள்ளன. பாதிக்கப்பட்ட நபர் ஓடாமல் ஒரே இடத்தில் இருக்கச் செய்ய வேண்டும். நெருப்பு இன்னும் அனையவில்லை என்றால் படுத்து உருளச் செய்யலாம். முதலில் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவரை தீ, நீராவி அல்லது வெப்ப மூலத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும்.
குளிர்ந்த ஓடும் நீரில் காண்பிக்கவும்:
தீக்காயம் பட்ட இடத்தை உடனே அறை வெப்பநிலையில் உள்ள சுத்தமான ஓடும் நீரில் (Running tap water) 5 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து காண்பிக்க வேண்டும். இது காயத்தின் வெப்பத்தைக் குறைத்து, காயம் ஆழமாவதைத் தடுப்பதுடன் வலியையும் குறைக்கும். முக்கியமாக ஐஸ் கட்டிகளையோ அல்லது ஐஸ் தண்ணீரையோ பயன்படுத்தக் கூடாது.
நெருக்கமான பொருட்களை அகற்றவும்:
காயம் பட்ட இடத்தில் வீக்கம் ஏற்படுவதற்குள் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மோதிரம், வளையல், கைக்கடிகாரம் அல்லது இறுக்கமான ஆடைகள் போன்றவற்றை மெதுவாகக் கழற்றிவிட வேண்டும்.
ஆடைகளை வலுக்கட்டாயமாக இழுக்கக் கூடாது:
தீக்காயம் பட்ட இடத்தில் உள்ள ஆடைகளை கவனமாக அகற்ற வேண்டும். ஆனால் தீக்காயத்தின் மீது ஆடைகள் கருகி தோலோடு ஒட்டிப் போயிருந்தால் அதை எடுக்க முயற்சிக்கவோ அல்லது வலுக்கட்டாயமாக இழுத்து அகற்றவோ கூடாது. ஒட்டாமல் இருக்கும் ஆடைகளை மட்டும் மெதுவாக அகற்றலாம்.
காயத்தை மூடுதல்:
குளிர்ந்த நீரில் காட்டிய பிறகு சுத்தமான, ஈரமில்லாத பருத்தித் துணி அல்லது ஒட்டாத பாண்டேஜ் (Sterile non- stick dressing) கொண்டு காயத்தை லேசாக மூட வேண்டும். இப்படி தீக்காயத்தை மூடுவது வெளியில் உள்ள கிருமிகள், பாக்டீரியா மற்றும் அழுக்குகள் காயத்திற்குள் செல்வதைத் தடுத்து தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதுடன் காற்றுப்படுவதால் ஏற்படும் வலியையும் குறைக்கும்.
காயம் ஆறுவதற்கு காற்று தேவை என்பது தவறான புரிதல் ஆகும். திறந்த காற்று காயத்தை உலரச் செய்து புதிய செல்கள் வளருவதைத் தாமதப்படுத்தும். காயத்தை மூடி வைப்பது தோல் செல்கள் உயிரோடு இருக்கத் தேவையான இயற்கை ஈரப்பதத்தை பராமரிக்கிறது. அத்துடன் துணிகள் அல்லது பிற பொருட்கள் காயத்தின் மீது உரசுவதைத் தடுப்பதன் மூலம் காயத்தின் மேல் உருவாகும் புதிய தோல் அடுக்குகள் சேதம் அடையாமல் பாதுகாக்கப்படுகிறது.
மருத்துவ உதவி:
தீக்காயம் பெரியதாக இருந்தாலோ, காயம் முகம், கைகள், பிறப்புறுப்பு போன்ற உணர்திறன் மிக்க இடங்களில் ஏற்பட்டிருந்தாலோ அல்லது காயம் பெரிதாகவும் ஆழமாகவும் இருந்தாலோ முதலுதவி செய்த உடனேயே தாமதிக்காமல் அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.
செய்யக்கூடாதவை:
காயம் பட்ட இடத்தில் ஐஸ் கட்டிகளை நேரடியாக வைக்கக் கூடாது. இது தோலின் திசுக்களை மேலும் சேதப்படுத்திவிடும். வீட்டு வைத்தியமாக காயத்தின் மீது டூத் பேஸ்ட், வெண்ணெய், எண்ணெய், மை அல்லது மஞ்சள் போன்ற வீட்டுப் பொருட்களை காயத்தின் மேல் தடவக்கூடாது. இவை வெப்பத்தை உள்ளேயே தேக்கி வைத்து, கிருமித் தொற்றை (Infection) உண்டாக்கி விடும். கொப்புளங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அவற்றை உடைக்கக் கூடாது. அவை உடைந்தால் கிருமித்தொற்று மிக எளிதாக ஏற்படும்.