எச்சரிக்கை: பாதங்களில் எரிச்சலா? ஊசி குத்துவது போன்ற உணர்வு இருக்கா? உடனே கவனியுங்கள்!

Causes of tingling feet sensations
Causes of tingling feet sensationsImg credit: AI Image
Published on

நமது உடலில் ஏற்படும் ஒவ்வொரு சிறு மாற்றமும் ஏதோ ஒரு ஆரோக்கியக் குறைபாட்டின் எச்சரிக்கையாக இருக்கலாம். குறிப்பாக, பலருக்கும் பாதங்களில் அடிக்கடி எரிச்சல் அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுவதுண்டு. இது வெறும் களைப்பினால் ஏற்படுவது என்று நாம் கடந்துவிடக் கூடாது. மருத்துவ ரீதியாக இதற்குப் பின்னால் பல காரணங்கள் ஒளிந்துள்ளன.

1. பெரிபெரல் நியூரோபதி:

கால்களில் எரிச்சல் மற்றும் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நரம்பு சேதம் ஆகும். இது மருத்துவ ரீதியில் 'பெரிபெரல் நியூரோபதி' (Peripheral Neuropathy) என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலை உடலின் கால்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும்போது ஏற்படுகிறது.

2. நீரிழிவு நோய்:

பாத எரிச்சலுக்கு மிக முக்கியமான மற்றும் முதன்மையான காரணம் நீரிழிவு நோய். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீண்ட காலம் அதிகமாக இருக்கும்போது, அது கால்களில் உள்ள நரம்புகளைச் சேதப்படுத்துகிறது. சர்க்கரை அளவு நரம்புகளில் உள்ள சிறிய இரத்த நாளங்களைச் சிதைப்பதால், மூளைக்குச் செல்லும் உணர்ச்சி சமிக்ஞைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் எரிச்சல், மரத்துப்போதல் மற்றும் கடுமையான வலி ஏற்படக்கூடும்.

3. வைட்டமின் குறைபாடுகள்:

நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் B12, B6 மற்றும் B9 மிக அவசியமானவை. இந்த வைட்டமின்கள் நரம்புகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பு கவசமான 'மையிலின் சீத்' உருவாக உதவுகின்றன.

உணவில் போதுமான சத்துக்கள் இல்லாதபோது அல்லது உடல் இந்த வைட்டமின்களை உறிஞ்சாதபோது, நரம்புகள் பலவீனமடைந்து பாதங்களில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வைத் தருகின்றன.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டிற்குள் மறைந்திருக்கும் 'சைலண்ட் கில்லர்ஸ்': நாம் கவனிக்காத ஆரோக்கிய அச்சுறுத்தல்கள்!
Causes of tingling feet sensations

4. சிறுநீரக நோய்கள்:

சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படாதபோது, இரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுகள் முறையாக வெளியேற்றப்படுவதில்லை. இந்த நச்சுகள் உடலில் தங்கி நரம்புகளைப் பாதிக்கின்றன. இதனை 'யுரேமிக் நியூரோபதி' என்பார்கள். இதன் ஒரு முக்கிய அறிகுறியே பாதங்களில் ஏற்படும் தீராத எரிச்சல் ஆகும்.

5. தைராய்டு சுரப்பு குறைபாடு:

தைராய்டு ஹார்மோன் அளவு குறையும்போது, உடலில் நீர் தேக்கம் ஏற்படலாம். இந்தத் தேக்கம் நரம்புகள் மீது அழுத்தத்தைக் கொடுக்கும். குறிப்பாகக் கணுக்கால் பகுதியில் உள்ள நரம்புகள் அழுத்தப்படுவதால் பாதங்களில் எரிச்சல் மற்றும் உணர்வு இல்லாமை போன்றவை ஏற்படுகின்றன.

6. மதுப்பழக்கம்:

அதிகப்படியான மது அருந்துதல் நரம்புகளை நேரடியாகச் சிதைக்கும். மதுவில் உள்ள நச்சுத்தன்மை நரம்பு மண்டலத்தை வலுவிழக்கச் செய்து, எரிச்சல் உணர்வைத் தூண்டுகிறது.

தவிர்க்க என்ன செய்யலாம்?

  • நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைச் சீராக வைத்திருப்பது நரம்பு பாதிப்பைத் தடுக்க உதவும்.

  • வைட்டமின் B12 நிறைந்த முட்டை, பால் பொருட்கள் மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • தினமும் வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவி, தளர்வான காலணிகளை அணிய வேண்டும். கால்களை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். தினசரி நடைப்பயிற்சி செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
பாட்டி சொன்ன இந்த டிப்ஸ் போதும்... கோடை வெயில் உங்களை ஒன்றும் செய்யாது!
Causes of tingling feet sensations
  • புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் இரத்த ஓட்டத்தைப் பாதிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நலம்.

  • பாதங்களில் எரிச்சல் உணர்வு தொடர்ந்து சில வாரங்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக ஒரு நரம்பியல் நிபுணரை அணுகுவது அவசியம். ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்தால் நரம்பு பாதிப்புகளைத் தடுத்து விடலாம். குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com