
காலிஃபிளவர், முட்டைக்கோஸ் மற்றும் புரோக்கொல்லி போன்ற க்ரூஸிஃபெரஸ் காய்கறிகளை ஜீரணிக்க உங்கள் வயிறு சிரமப்படுகிறதா? அஜீரணம், வயிறு வீக்கம் போன்ற கோளாறுகள் அடிக்கடி உண்டாகிறதா? அப்படியென்றால் உடனடியாக நீங்கள் உட்கொள்ளும் காய்கறிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சரியான நேரம் இதுவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
நம்மில் பலரும் க்ரூஸிஃபெரஸ் காய்கறிகள் சூப்பர் ஃபுட் என எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவை எப்பொழுதும் எல்லோருக்கும் நன்மை தருவதாக இருப்பதில்லை. இதில் நார்ச்சத்து மற்றும் குளுக்கோசினோலேட்ஸ் (Glucosinolates) என்ற கூட்டுப்பொருள் அடங்கிய சல்ஃபரும் அதிகம் உள்ளது.
பொதுவாக இந்தக் காய்கறிகளில் கேன்சரை எதிர்த்துப் போராடவும், நச்சுக்களை வெளியேற்றவும் உதவக் கூடிய குணங்கள் உள்ளன. இருந்தாலும், ஏற்கனவே சென்சிடிவ் வயிறு உள்ளவர்கள் மற்றும் ஜீரண செயல்பாடுகளை மிக மெதுவாக செயல்படுத்தும் தன்மை கொண்ட வயிறு உடையவர்கள் இக்காய்கறிகளை உட்கொள்ளும்போது அவை வயிற்றிலேயே நொதிக்க ஆரம்பித்து விடும்.
வயிற்று வலி, வீக்கம் உண்டாக்கக் கூடிய இரிட்டபிள் பௌல் சிண்ட்ரோம் (Irritable Bowel Syndrome) மற்றும் மந்தமான ஜீரண சக்தி உள்ளவர்கள் இக் காய்கறிகளை வேக வைக்காமல் அல்லது அதிகளவில் உட்கொள்ளும்போது வயிறு அதை ஜீரணிக்க முடியாமல் கோளாறுகளை உண்டு பண்ண ஆரம்பிக்கும்.
வயிற்றின் ஆரோக்கியம் காக்க, க்ரூஸிஃபெரஸ் காய்களைத் தவிர்த்து அதற்குப் பதில் மிருதுவான தன்மை கொண்ட, அதிகளவு நீர்ச்சத்து உடைய காய்களை உட்கொள்ள ஆரம்பிப்பது நலம். அவ்வாறான காய்களில் நார்ச்சத்து குறைவு, மேலும் அவை குறைந்த FODMAP புரஃபைல் கொண்டவை. அதன் காரணமாக குடலில் உணவுகள் நொதிப்பதற்கு வாய்ப்பிருக்காது.
வாய்வு உற்பத்தியின்றி குடல் அமைதியாக பணியாற்ற முடியும். உடலில் நீரேற்றம் குறையாது. வெள்ளரிக்காய், சுரைக்காய், சுச்சினி, வெள்ளைப் பூசணி, பீர்க்கங்காய், மஞ்சள் பூசணி போன்ற காய்கறிகள் நீரேற்றம் நிறைந்த காய்கள் பட்டியலில் இடம் பெறும். இவை, குறிப்பாக கோடை காலங்களில், இரைப்பை குடல் இயக்கப் பாதையை நீரேற்றத்துடன் வைத்து, ஜீரணம் சிறக்கவும், வீக்கங்களைக் குறைக்கவும் உதவும்.
க்ரூஸிஃபெரஸ் காய்களை உட்கொள்ள விரும்புபவர்கள், அவற்றை ஆவியில் வேக வைத்து, உப்பு மிளகுத் தூள் சேர்த்து, குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதில் ஆபத்தில்லை எனலாம். அதையும் ஒரு முறை பரிசோதித்துப் பார்த்து, வயிற்றில் கோளாறு ஏதும் உண்டாகாமல் இருந்தால் மட்டும் தொடரலாம்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.