நம் உடல் இயங்கத் தேவையான முதன்மையான சத்துக்களில் ஒன்றான புரதம் என்பது, 'முதல் இடத்தைப் பிடித்தல்' எனும் பொருள் தரும் 'புரோட்டீயோஸ்' என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வழங்கப்பட்டது. நம் உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கு உதவும் பல்வேறு ஹார்மோன்கள் அமினோ அமிலங்களால் ஆனது. இந்த ஹார்மோன்களின் சமநிலைக்கு உதவும் புரத வினையூக்கிகள் அனைத்து உயிரினங்களிலும் இருக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்தாகிறது.
உடலில் உள்ள உறுப்புகள், திசுக்கள், தசைகள் மற்றும் ஹார்மோன்களின் வளர்ச்சிக்கு புரதச்சத்து அவசியம் தேவை என்பதால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க 1 கிலோ உடல் எடையில் 1 கிராம் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.
புரதச்சத்து நிறைந்த உணவுகளால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். உதாரணமாக, சரியான அளவில் எடுக்கும் புரத உணவுகள் அதிகப்படியான உணவு உண்பதை தடுப்பதால் உடல் எடையை சீராக பராமரிக்க உதவுகிறது. சேதமடைந்த தசைகளை சரிசெய்து மீண்டும் வலுவாக வளர உதவுகிறது. உடலில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உறிஞ்சுதலை அதிகரிக்க உதவி எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. இதனால் எலும்பு முறிவுகள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது.
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவில் இருந்து புரதம் நிறைந்த உணவுக்கு மாறும்போது கொலஸ்ட்ரால் அளவு குறைந்து உடல் பருமனைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் இதயம் தொடர்பான பாதிப்புகளைத் தடுக்கிறது. புரதங்கள் மிகக் குறைந்த அளவாக இன்சுலினை கட்டுப்பாட்டில் வைப்பதால் சர்க்கரை அளவை சீராக்கவும் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் உதவுகிறது.
புரதங்கள் ஆரோக்கியமான மூளை நியூரான்களை உருவாக்கவும் அதன் செயல்பாடுகளை சீராக்கவும் செய்வதால் விஷயங்களைக் கற்றுக்கொள்வதையும், நினைவில் கொள்வதையும் ஊக்குவிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும், பல வகைகளில் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் புரதம் முதுமை நிலையை மெதுவாக்க உதவுகிறது என்கின்றனர்.
இப்படிப் பல நன்மைகள் இருந்தாலும் அதிகப்படியான புரதத்தை உட்கொள்வது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி நம் உடலுக்கு பாதிப்பு தரும் என்ற கருத்தும் உள்ளது. ஆனால், பெரும் சதவீதம் சிறுநீரக பாதிப்பு நீரிழிவு நோயினாலும் மீதமுள்ள சதவீதம் இரத்த அழுத்தம் காரணமாகவும் ஏற்படுகிறது எனக் குறிப்பிடும் மருத்துவர்கள் நல்ல புரதம் நிறைந்த உணவுகளை உட்கொண்டு, மாவுச்சத்துகளை குறைத்து சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாது என்றும் ஆலோசனை தருகின்றனர்.
மேலும், ஏற்கெனவே சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புரதத்தை சரியாக வெளியேற்றும் தன்மை குறைவாக இருக்கும் என்பதால் குறைவான அளவு புரத உணவுகளை அவர்கள் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
அமுதே என்றாலும் அளவுக்கு மிஞ்சும்போது விஷமாக மாறும். எனவே, நன்மை தருகிறது என்பதற்காக புரத உணவுகளை மட்டுமே எடுக்காமல் சமச்சீர் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொண்டு நன்மை அடைவோம்.