அன்றாடம் செய்யும் பணிகளையே உடற்பயிற்சியாக மாற்றி வாழலாமா?

Healthy exercises
Healthy exercises
Published on

நம்மில் பலர் ஜிம் முதலான இடங்களுக்குச் சென்று காசை செலவழித்து உடற்பயிற்சிகள் செய்தால் தான் உடலை கட்டுக் கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்புகின்றனர். இதற்காக மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் பணத்தையும் செலவழிக்கின்றனர். மேலும் இதற்காக காலையிலோ அல்லது மாலையிலோ பிரத்யேகமாக தினமும் இரண்டு மணி நேரம் ஒதுக்கியாக வேண்டும். ஆனால், நாம் அன்றாடம் செய்யும் நமது பணிகளையே உடற்பயிற்சியாக மாற்றி ஆரோக்கியமாக வாழலாம். அதை எப்படிச் செய்வது என்பதை இந்தப் பதிவில் நாம் தெரிந்துக் கொள்ளலாம்.

இன்றைக்குப் பலர் தெருமுனையில் உள்ள கடைக்குச் செல்ல வேண்டுமென்றாலும் கூட இரண்டு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தும் வழக்கத்திற்கு அடிமையாகி விட்டனர். நாம் நமது வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் சுற்றளவுள்ள கடைகள், வங்கிகள், பிற அலுவலகங்கள் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டுமானால் நடந்தே செல்லலாம். இதனால் வண்டிக்குச் செலவழிக்கும் பெட்ரோல் செலவு கணிசமாகக் குறையும். இப்படி சிறு தூரங்களுக்குச் செல்ல நாம் நடக்கும் வழக்கத்தைக் கடைபிடிப்பதன் மூலம் நமது உடலுக்கு நல்ல உடற்பயிற்சி கிடைத்தது போலவும் ஆகும். மனதில் ஒரு புத்துணர்ச்சியும் பிறக்கும்.

காய்கறிகளை மொத்தமாக வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்துப் பயன்படுத்தாமல் தேவையான காய்கறிகளை தினந்தோறும் கடைக்குச் சென்று வாங்கி பயன்படுத்தினால் புதிதாகவும் சுவையாகவும் இருக்கும். தினமும் நடந்து சென்று கடைக்குச் செல்வதால் கூடுதல் உடற்பயிற்சி செய்தது போலாகும்.

அலுவலகங்களுக்குச் செல்ல சைக்கிளைப் பயன்படுத்துவது நல்லது. நீங்கள் வீட்டிலிருந்து ரயிலிலோ அல்லது பேருந்திலோ பயணித்து அலுவலகம் செல்பவராக இருந்தால் காலையிலும், மாலையிலும் வீட்டிலிருந்து ரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையத்திற்கு சைக்கிளில் செல்லும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கலாம். அல்லது நடந்தும் செல்லலாம். இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உங்கள் அலுவலகம் அல்லது கடை அமைந்திருந்தால் வீட்டிலிருந்து சைக்கிளில் செல்லலாம். இதனால் உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும்.

அலுவலகம் அல்லது பலமாடிக் கட்டடங்களுக்குச் செல்லும் போது லிப்ட்டைப் பயன்படுத்தாமல், மாடிப்படிகளில் ஏறுவதும் இறங்குவதும் மிகச்சிறந்த உடற்பயிற்சியாகக் கருதப்படுகிறது.

தினமும் வீட்டை சுத்தப்படுத்தி வேக்யூம் க்ளீனரைப் பலர் பயன்படுத்துகிறார்கள். இதைத் தவிர்த்து ஒட்டடைக்குச்சியால் சுத்தப்படுத்தி வீட்டைப் பெருக்கினால் வீடும் சுத்தமாகும். நம் உடலுக்கும் இது சிறந்த உடற்பயிற்சியாக அமையும். நம் வீட்டை நாமே சுத்தம் செய்கிறோம் என்ற திருப்தியும் உண்டாகும்.

தினமும் நாம் பயன்படுத்தும் ஆடைகளை வாஷிங் மெஷினில் துவைக்காமல் நாமே கையினால் துவைத்துப் போடப் பழகிக் கொள்ள வேண்டும். இதுவும் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். இதனால் ஆடையும் சுத்தமாக்கும். மின்சார செலவும் கணிசமாகக் குறையும்.

துணிகளை கடைகளில் கொடுத்து அயர்ன் செய்யாமல் நாமே வீட்டில் அதைச் செய்யப் பழக வேண்டும். இதனால் பணமும் மிச்சமாகும். உடலுக்கும் சிறந்த உடற்பயிற்சியாக அமையும்.

வாரத்திற்கு ஒரு முறை உங்கள் பைக் மற்றும் சைக்கிளை நீங்களே சுத்தம் செய்து துடைப்பதும் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும்.

இதையும் படியுங்கள்:
தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கும் போது இந்த 5 தவறுகளை செய்யாதீங்க! முடி மேலும் மோசமாகும்!
Healthy exercises

அலுவலகத்திற்குப் பேருந்துகளில் செல்பவர்கள் அலுவலகத்திலிருந்து ஒரு ஸ்டாப்பிங் முன்னாலேயே இறங்கி நடந்து அலுவலகம் செல்லப் பழகலாம். இதுவும் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். மாலை வீட்டிற்குத் திரும்பும் போது ஒரு ஸ்டாப்பிங் முன்னாலேயே இறங்கி நடந்து வீட்டிற்குச் செல்லலாம்.

செய்தித் தாள்கள், பால் பாக்கெட்டுகளை வீட்டிற்கு வரவழைக்காமல் நீங்களே காலை வேலைகளில் நடந்து சென்று இரண்டையும் வாங்கி வரலாம். காலை நேரங்களில் இப்படி காலாற நடந்து சென்று இவற்றை வாங்கிக் கொண்டு வரும்போது மனதில் ஒரு புத்துணர்ச்சி பிறப்பதை நீங்கள் உணரலாம்.

எலெக்ட்ரிசிட்டி பில், மொபைல் ரீசார்ஜ் முதலானவற்றை ஆன்லைனில் கட்டாமல் நேரடியாகச் சென்று பணம் செலுத்தி விட்டு வரலாம்.

விடுமுறை நாட்களில் உயிரியில் பூங்கா முதலான இடங்களுக்குக் குடும்பத்தினருடன் சென்று அதற்குள் நீண்ட தூரம் காலாற நடந்து விலங்குகளையும், பறவைகளையும் கண்டு மகிழ்ந்து திரும்பலாம். இதனால் மனதிற்கு புத்துணர்ச்சியும் உடலுக்கு பயிற்சியும் இரண்டும் ஒரே சமயத்தில் கிடைக்கும்.

மேற்காணும் செயல்களை மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து பாருங்கள். நல்ல பலனை நிச்சயம் உணர்வீர்கள்.

இதையும் படியுங்கள்:
வாழைப்பழ வால்நட் பாயாசம் செய்யலாம் வாங்க! 
Healthy exercises

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com