

மேலை நாடுகளை அச்சுறுத்தி வந்த புற்றுநோய், இன்றைக்கு நமது வாழ்வியல் மற்றும் உணவு முறை மாற்றங்களால் இந்தியாவிலும் அனைத்து வயதினரையும் தீவிரமாகப் பாதித்து வருகிறது. துரித உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட பொருட்களையும் தேடிச் செல்லும் நவீன வாழ்க்கையில், நமது பாரம்பரிய உணவுகளின் மருத்துவக் குணங்களை நாம் மறந்துவிட்டோம். இயற்கையாகவே புற்றுநோய் செல்களை அழிக்கும் வல்லமை படைத்த காய்கறிகள், பழங்கள் மற்றும் அஞ்சறைப் பெட்டி மசாலாப் பொருட்களை தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் இந்நோயை ஆரம்பத்திலேயே தடுத்து, ஆரோக்கியமான வாழ்வைப் பெற முடியும் என விளக்குகிறார் பொதுநல மருத்துவர். பிரகதீஷ், MBBS
மேலை நாடுகளில் மட்டுமே இருந்த பலவித நோய்கள் நம் நாட்டிலும் வரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இப்போது புற்றுநோய்கள் அதிகம் பேரை பாதிக்கிறது. இந்தியாவில் புற்றுநோய் தீவிரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரத் தொடங்கியுள்ளது.
மேலை நாட்டினர் நம் உணவு முறைக்கு மாறி தங்கள் ஆரோக்கியத்தை காக்க முயற்சி செய்து கொண்டுள்ளனர். ஆனால் நம் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பர்கர், பீட்சா, ஜங்க் ஃபுட்ஸ் என நார்ச்சத்து அதிகம் இல்லாத கடின உணவுகளை சாப்பிட பழகுகிறோம்.
காலம் காலமாக நாம் சாப்பிட்டு வந்த உணவுப் பழக்கத்திலிருந்து மாறியதன் விளைவாக புற்றுநோய் தீவிரம் அதிகரித்துள்ளது. அதிலும் பெரும்பாலான கடைகளில், காய்ந்த சிகப்பு மிளகாய் வற்றலை அரைத்து பயன்படுத்துவதால் நேரடியாக புற்றுநோய்க்கு வழிவகுக்கிறோம்.
கோஸ், பீன்ஸ், கேரட், பொரியலில் கூட வெள்ளையாக இருக்க வேண்டுமென மஞ்சள் தூளை உபயோகிப்பதில்லை. உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும், பதப்படுத்தப் பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகளை அதிகம் பயன்படுத்துகிறோம். இது உடல்நலத்திற்கு கேடு விளைவித்து ஆரோக்கியத்தையே சீர்குலைக்கிறது.
நம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தி குறையும் போது தான் நோய்கள் தாக்குகின்றன. அதிலும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள அதை குணப்படுத்துவது எளிது.
உணவுப் பழக்கத்தால் சிறு வயதிலிருந்தே ஆரோக்கியத்தை பேண உறுதி கொண்டால் புற்றுநோய் முதற்கொண்டு பல வித நோய்களை தவிர்த்து விடலாம். மருத்துவ குணம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யலாம்.
அடர் நிறப் பழங்களில் ஃப்ரீ ராடிக்கல்ஸை வெளியேற்றும் ஆற்றல் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சிவப்பு, நீலம், பர்பிள் நிறப் பழங்களில் அந்தோசைனின் (Anthocyanin) என்ற நிறமி சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும்.
பெரிய நெல்லிக்காய், நாவல் பழம், சீதாப் பழத்தின் ஒரு வகையான ராம் சீதா போன்ற பழங்கள் புற்றுநோயை தடுக்க வல்லது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிட்ரஸ் பழங்களில் நார்ச்சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும்.
கருப்பு திராட்சை, மாதுளை, செர்ரி, மாம்பழம், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிகப்பு தக்காளி, கேரட், கரும் பச்சை இலைகளை கொண்ட காய்கறிகள், சில கீரை வகைகள், சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன் புற்றுநோயிலிருந்தும் நம்மை காக்கும்.
நம் உடலில் உள்ள வைட்டமின் குறைபாட்டுக்கும், புற்றுநோய் செல்களின் பெருக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வைட்டமின் ஏ சத்தில் உள்ள அதிகப்படியான ரெட்டினாயிக் அமிலம் புற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டு வருகிறது.
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி, புற்றுநோயைத் தடுக்கும் லைகோபைன் (Lycopene) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் புற்றுநோயால் செல்கள் பாதிப்படைவதை தடுக்கும்.
காலிபிளவர், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவற்றில் இன்டோல் 3 கார்பினால் (Lndole 3 carbinol) அதிகம் இருப்பதால், இந்த காய்கறிகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கின்றன.
காளானை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து எலும்புகள் வலுவடையும்.
மணமூட்டிகள்வகையில் மஞ்சள் தூள் கிருமிகளை அழிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் உள்ள மூலக்கூறுகள் பக்கவிளைவுகள் ஏதும் இல்லாமல் புற்றுநோய் செல்லின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
இலவங்கப்பட்டை, கறிவேப்பிலை, அன்னாசிப் பூ, கருஞ்சீரகம், பூண்டு, கொத்தமல்லி விதை, வெந்தயம், இஞ்சி, மிளகு போன்றவை புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் ஆற்றல் கொண்டவை.
பூண்டில் இருக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட், டியூமர் செல்களை அழிப்பதுடன் புற்றுநோயை எதிர்த்து போராடி உடலைப் பாதுகாக்கும்.
க்ரீன் டீயில் மிக அதிகமாக ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது கொழுப்பை குறைக்க வல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினமும் கிரீன் டீயை குடிக்கலாம்.
நட்ஸ் வகைகளில் வால்நட், ஃப்ளாக்ஸ் சீட்டில் ஒமேகா 3 இருப்பதால் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும்.
இயற்கையான உணவுகள், காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய் செல்களை அழித்து விடலாம்.
எந்த நோயும் நம்மை நெருங்காமல் இருக்க உணவில் கூடுதல் கவனம் தேவை.
புற்றுநோயிலிருந்து மீண்ட ஒருவராக, எனது மகனும் பொது மருத்துவருமான டாக்டர் பிரகதீஷ் (MBBS) வழங்கிய அறிவுரைகளை நான் பின்பற்றி வருகிறேன்; அவற்றை இங்கே பதிவு செய்துள்ளேன்.