தினமும் 30 நிமிடம் போதும்! குழந்தைகளை ஓடி ஆட விடுங்கள்; நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்!

வைட்டமின் டி குறைபாட்டைப் போக்க கட்டணமில்லா இயற்கை தீர்வு; பெற்றோர்களே உடனே செயல்படுங்கள்!
Children Playing | வைட்டமின் டி
Children Playing | வைட்டமின் டி
Dr K. Ravanan M.D, Paediatrics

டாக்டர். க. இராவணன் அவர்கள் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் M.B.B.S. பட்டப்படிப்பினையும் சென்னை மருத்துவக் கல்லூரியில் குழந்தை நல மருத்துவத்தில் M.D (Paed) உயர் பட்டப்படிப்பினையும் படித்தவர். குழந்தைகள் நல மருத்துவத்தில் 28 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். தற்போது அரக்கோணத்தில் Dr. RAV’s Child Clinic என்ற பெயரில் குழந்தைகளுக்கான மருத்துவமனையினை நடத்தி வருகிறார். Indian Medical Association, Indian Academy of Pediatrics & Infectious Disease Chapter IAP முதலான அமைப்புகளின் வாழ்நாள் உறுப்பினராவார். தமிழ் இலக்கியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நடைப்பெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெற்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கரங்களால் முதல் பரிசினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய நூல்கள் ‘குழந்தை நலம்’ மற்றும் 'ஒரு குழந்தை நல மருத்துவரின் டைரி குறிப்புகள்' ஆகும்.

Updated on: 

இன்றைய குழந்தைகள் நான்கு சுவர்களுக்குள் சிக்கி, வைட்டமின் டி குறைபாட்டால் எலும்பு, தசை பலவீனம், நோய் எதிர்ப்பு குறைவு போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. காலை அல்லது மாலை நேர சூரிய ஒளியில் தினமும் 20–30 நிமிடம் ஓடி விளையாடச் செய்தால், வைட்டமின் டி இயற்கையாக உருவாகி, எலும்புகள் உறுதியாகி, மனநலம், தூக்கம், கவனக்குவிப்பு, தன்னம்பிக்கை அனைத்தும் மேம்படும் என விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் க. ராவணன் M.D

Q

சூரிய ஒளி ஏன் குழந்தைகளின் முதல் இயற்கை மருந்து?

A

குழந்தைகள் வீட்டிற்குள் வளர்க்கப்படும் செடிகள் அல்ல; சூரிய ஒளியிலும், மண்ணிலும், காற்றிலும் வளரும் உயிர்கள்.

Childrens playing | வைட்டமின் டி
Childrens playing | வைட்டமின் டி

இன்றைய குழந்தைகளின் வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள் சுருங்கிவிட்டது. பள்ளி, பயிற்சி வகுப்புகள், தொலைக்காட்சி, கைப்பேசி, மின்னணு விளையாட்டுகள் என பெரும்பாலான நேரம் வீட்டுக்குள்ளேயே கழிகிறது. இதன் விளைவாக, வைட்டமின் டி குறைபாடு உலகளவில் வேகமாக அதிகரித்து வரும் ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது. ஆனால் தினமும் சிறிது நேரம் இயற்கைச் சூரிய ஒளியில் விளையாடுவது, குழந்தையின் உடல் மற்றும் மனநலத்திற்கு விலைமதிப்பற்ற ஒன்றாகும்.

சூரிய ஒளி – வைட்டமின் டியின் இயற்கை தொழிற்சாலை

நமது தோலில் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் (UV rays) படும்போது, உடலே வைட்டமின் டி₃-ஐ உருவாக்கத் தொடங்குகிறது. உணவில் மட்டும் கிடைக்கும் அளவு போதுமானதல்ல. அதனால்தான் சூரிய ஒளியை 'இயற்கையின் இலவச மருந்து' என்று அழைக்கிறோம்.

உறுதியான எலும்புகளின் அடித்தளம் D3 

வைட்டமின் டி இல்லாமல், உணவில் இருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் முழுமையாக உடலில் உறிஞ்சப்படாது. இதன் விளைவாக எலும்புகள் வலுவிழக்கின்றன. சிறுவர்களில் ரிக்கெட்ஸ் (எலும்பு மெலிவு நோய்), வளர்ச்சி தாமதம், கால்கள் வளைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

தசைகளின் சக்தியை அதிகரிக்கும்

எலும்புகள் மட்டுமல்ல; தசைகளும் வைட்டமின் டியை நம்பியே செயல்படுகின்றன. போதுமான அளவு இருந்தால் குழந்தைகள் வேகமாக ஓடவும், குதிக்கவும், சமநிலையுடன் விளையாடவும் முடியும். குறைபாடு இருந்தால் தசை பலவீனம், அடிக்கடி விழுதல், சோர்வு போன்றவை ஏற்படலாம்.

நோய் எதிர்ப்பின் இயற்கை நண்பன்

வைட்டமின் டி, உடலின் நோய் எதிர்ப்பு அணுக்களை சுறுசுறுப்பாகச் செயல்பட உதவுகிறது. சில ஆய்வுகள், போதுமான அளவு வைட்டமின் டி உள்ள குழந்தைகளுக்கு சில சுவாசத் தொற்றுகள் மற்றும் சில ஒவ்வாமை நோய்களின் தாக்கம் குறையக்கூடும் எனக் காட்டுகின்றன. இது உடலின் பாதுகாப்பு அமைப்பைச் செழுமைப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது.

Children Playing | வைட்டமின் டி
Children Playing | வைட்டமின் டி

மனமும் மூளையும் மலரச்சியாக இருக்க உதவுகிறது

மாலை நேரத்தில் வெளியில் விளையாடும் குழந்தைகள் அதிக மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருப்பதை பெற்றோர் உணரலாம். இயற்கை ஒளி உடலின் உயிரியல் கடிகாரத்தை ஒழுங்குபடுத்தி, நல்ல தூக்கத்திற்கும், மன உற்சாகத்திற்கும், கவனக்குவிப்பிற்கும் உதவுகிறது. திறந்த வெளியில் விளையாடுவது மனஅழுத்தத்தையும் குறைக்கிறது.

மாலை விளையாட்டு – உடற்பயிற்சியும் நட்பும்

மாலைச் சூரிய ஒளியில் நண்பர்களுடன் ஓடி விளையாடுவது ஒரு முழுமையான உடற்பயிற்சி. இதனால் இதய நலம், உடல் எடை கட்டுப்பாடு, நுரையீரல் திறன், சமூகத் திறன், தன்னம்பிக்கை ஆகியவை வளர்கின்றன. எந்த மின்னணு விளையாட்டும் இதற்கு ஈடாக முடியாது.

இதையும் படியுங்கள்:
10 நிமிட இயற்கை சிகிச்சை: மன அழுத்தத்தைப் போக்கி இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் எளிய வழி!
Children Playing | வைட்டமின் டி
Q

எவ்வளவு நேரம் சூரிய ஒளி போதும்?

A

பொதுவாக வாரத்தில் பல நாட்கள், மாலை அல்லது காலை நேரங்களில், முகம், கைகள், கால்கள் போன்ற பகுதிகளில் 20–30 நிமிடங்கள் சூரிய ஒளி படுவது பல குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும். ஆனால் தோலின் நிறம், வயது, வாழும் இடம், பருவநிலை போன்ற காரணிகளால் தேவைகள் மாறுபடும். சில குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின்படி வைட்டமின் டி மருந்தும் தேவைப்படலாம்.

Q

பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

A

ஒவ்வொரு நாளும் குழந்தைக்கு குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வெளியில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள். பூங்கா, விளையாட்டு மைதானம், வீட்டுத் தோட்டம்—எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த நேரத்தில் கைப்பேசி வேண்டாம்; மண், மரம், காற்று, சூரிய ஒளி, நண்பர்கள் மட்டும் போதும். அது குழந்தையின் உடலையும், மனதையும், எதிர்காலத்தையும் வளமாக்கும்.

இதையும் படியுங்கள்:
மெல்லக் கொல்லும் பாக்கெட் பால்? ஆரோக்கியம் தரும் தூய பசும்பால்!
Children Playing | வைட்டமின் டி

இன்று உலகம் முழுவதும் குழந்தை மருத்துவர்களும் எலும்பியல் நிபுணர்களும் கூறும் செய்தி ஒன்றே - வைட்டமின் டி குறைபாடு அதிகரித்து வருகிறது; ஆனால் அதன் தீர்வு நம் வீட்டின் வாசலுக்கு வெளியிலேயே உள்ளது.

குழந்தைகளை மாலைச் சூரியனுடன் நண்பர்களாக்குங்கள்.

ஏனெனில்…

'சூரிய ஒளியில் தினமும் விளையாடும் குழந்தைகள், வைட்டமின் டி மட்டுமல்ல வலிமையான எலும்புகளும், உறுதியான தசைகளும், சுறுசுறுப்பான செயலும், நல்ல நோய் எதிர்ப்பும், மகிழ்ச்சியான மனமும் கொண்டு ஆரோக்கியமாக திகழ்கின்றனர்.'

logo
Kalki Online
kalkionline.com