

க்ராக்ஸ் (Crocs) செருப்புகள் பார்ப்பதற்கு சற்று பெரிதாகவும் விசித்திரமாகவும் இருந்தாலும், அணிவதற்கு மிகவும் இலகுவானவை. குறுகிய நேரப் பயன்பாட்டிற்கு இது நல்லது என்றாலும், நீண்ட நேரம் தொடர்ந்து அணிவது பாதங்களில் வலி, கணுக்கால் நரம்பு வீக்கம் மற்றும் குதிகால் வலி போன்ற சில ஆபத்துகளையும் ஏற்படுத்திவிடும்.
க்ராக்ஸ் செருப்பின் நன்மைகள்:
அணிவதற்கு மிகவும் லேசாக இருக்கும். காலில் செருப்பு அணிந்திருப்பதே தெரியாத அளவிற்கு மிகக் குறைந்த எடையைக் கொண்டது. அணிவதற்கும் கழட்டுவதற்கும் மிகவும் எளிது. பல்வேறு நிறங்களில் கிடைக்கும் இவற்றை குறுகிய தூர பயணங்களுக்கும், வீட்டிற்கும் பயன்படுத்த உகந்தவை.
தண்ணீர் பட்டாலும் எளிதில் உலர்ந்து விடும். கழுவி துப்புரவு செய்வதும் எளிது.
குறுகிய தூரம் நடப்பதற்கு நல்ல மெத்தென்ற உணர்வைத் தரும். வெளியே எங்கு செல்லும் பொழுதும் சட்டென்று அணிந்து செல்வதற்கு வசதியானது.
கால்களில் வீக்கம் உள்ளவர்கள் அல்லது பாத அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தற்காலிகமாக அணிய தாராளமான இடவசதியைத் தருகிறது.
இவை பார்ப்பதற்கு அழகாகவும், அணிவதற்கு மிகவும் வசதியாகவும் இருந்தாலும், அவற்றை நாள் முழுவதும் தொடர்ந்து அணிவது கால்களுக்கு ஆபத்தானது என்று பாத மருத்துவ நிபுணர்கள் (Podiatrists) எச்சரிக்கின்றனர்.
க்ராக்ஸ் செருப்பால் ஏற்படும் ஆபத்துகள்:
குதிகால் பிடிமானம் இல்லாமை:
இந்த செருப்புகளில் குதிகால் பகுதியை உறுதியாகப் பிடித்துக் கொள்ள சரியான வடிவமைப்பு இல்லை. இதனால் நடக்கும் பொழுது செருப்பு கழன்று விடாமல் இருக்க நம் கால் விரல்கள் செருப்பை பலமாகப் பற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். இது தொடர்ந்து நீடித்தால் தசைநார் அழற்சி (Tendonitis), கால் விரல் சிதைவு மற்றும் நகப் பிரச்சினைகள் வரலாம்.
இவற்றின் மென்மையான ரப்பர் போன்ற அமைப்பு எஸ்கலேட்டர்களில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உண்டு.
காற்றோட்டம் குறைவாக இருப்பதால் பாதங்கள் அதிகமாக வியர்த்து துர்நாற்றம் வீச வாய்ப்புள்ளது.
பாத வளைவு ஆதரவு குறைவு (Minimal Arch Support):
பாதத்தின் வளைந்த பகுதிக்கு (Arch) இது போதிய சப்போர்ட் தருவதில்லை.
இதில் முறையான ஆர்ச் சப்போர்ட் இல்லாததால் பாதம் மற்றும் குதிகாலில் அழுத்தம் அதிகமாகும். நீண்ட நேரம் தொடர்ந்து அணிந்தால் பிளாண்டர் ஃபாச்சியிடிஸ் (Plantar fasciitis) எனப்படும் குதிகால் வலி மற்றும் தசை நார் பிரச்சனைகள் வரலாம். இதனால் குதிகால் வாதம் ஏற்பட்டு கடுமையான குதிகால் வலி உருவாகும்.
தடுமாறி விழும் அபாயம்:
இவை அகலமாகவும், காலில் இறுக்கமாக பிடிக்காமலும் இருப்பதால், வேகமாக நடக்கும்போதோ அல்லது வயதானவர்கள் அணியும் பொழுதோ நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்புள்ளது. குறிப்பாக எஸ்கலேட்டர்களில் இதன் மென்மையான ரப்பர் பகுதி சிக்கிக்கொண்டு விபத்துகள் ஏற்படுவதாக பதிவாகியுள்ளது.
வேர்வை மற்றும் தொற்று நோய்கள்:
இது காற்றோட்டத்திற்கான துளைகளைக் கொண்டிருந்தாலும், இதன் 'க்ராஸ்லைட்' (Croslite) பிளாஸ்டிக் / ரப்பர் போன்ற பொருள் வேர்வையை உறிஞ்சாது. இதனால் கால்களில் பாக்டீரியா, பூஞ்சை காளான் (Fungal infections) மற்றும் துர்நாற்றம் வீசக்கூடும்.
போலி செருப்புகளின் நச்சுத்தன்மை:
சந்தையில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் போலி க்ராக்ஸ் செருப்புகளில் ஆபத்தான நச்சு ரசாயனங்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளது. இது தோலில் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.
க்ராக்ஸ் செருப்பை எப்படி பயன்படுத்த வேண்டும்?
ஒரு நாளில் 1 முதல் 2 மணி நேரம் மட்டுமே இதைப் பயன்படுத்தலாம். அருகில் உள்ள கடைக்குச் செல்ல, தோட்டத்தில் சிறிது நடக்க என்று இதைப் பயன்படுத்தலாம்.
நீண்ட தூர நடைப்பயணம், உடற்பயிற்சி, ஓட்டப்பந்தயம் மற்றும் நாள் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்யும் போது இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளோ அல்லது பெரியவர்களோ இதை அணியும் பொழுது அதன் பின்னாடி இருக்கும் கயிற்றை (Sport Mode Strap) மாட்டிப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
முடிந்தவரை மலிவான போலி பிளாஸ்டிக் செருப்புகளைத் தவிர்த்து அசல் பிராண்ட் அல்லது நல்ல தரமான காலணிகளை வாங்குவது சிறப்பு.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference