உணவு எடுத்துக்கொண்டதும் சிலருக்கு வயிற்றில் எரிச்சல் உணர்வு தோன்றும். ஏப்பம், குமட்டல், வாந்தி, மேல் வயிற்றில் எரியும் உணர்வு, நெஞ்செரிச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
வயிறு எரிச்சல் காரணங்கள்:
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (நெஞ்செரிச்சல்): வயிற்று அமிலம் மீண்டும் உணவுக் குழாயில் பாய்வது அமில ரிஃப்ளக்ஸ் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாகும். இது மார்பில் எரியும் உணர்வுக்கு வழிவகுக்கும். வயிற்றிலிருந்து உணவுக் குழாய்க்கு செல்லும் அமில ரிஃப்ளக்ஸ் காரணமாக தொடர்ந்து இருமல், விழுங்குவதில் சிரமம் மற்றும் வயிற்றில் அல்லது மார்பில் எரியும் உணர்வை ஏற்படுத்தும்.
இரைப்பை அழற்சி: வயிற்றுப் புறணி அழற்சியின் விளைவாக வயது எரியும் உணர்வு ஏற்படும். அடிக்கடி வயிற்று வலி, குமட்டல், வாந்தி போன்றவை உண்டாகும். குடல் நோய் அல்லது அஜீரணம் காரணமாக வயிற்றில் எரியும் உணர்வு ஏற்படலாம். வயிற்றில் புண்கள் இருந்தாலும், இரப்பை உணவுக் குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் இருந்தாலும் இம்மாதிரியான வயிற்று எரிச்சல் ஏற்படும்.
வயிற்றுப் புண்கள்: வயிறு அல்லது சிறுகுடலில் புண்கள் இருந்தாலும் எரியும் உணர்வை ஏற்படுத்தும். இவை அழற்சி எதிர்ப்பு மருந்து பயன்படுத்துவதன் மூலமும் உண்டாகலாம்.
காரமான எரிச்சலூட்டும் உணவுகள்: சில வகை உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக்கொள்ளும் பொழுது வயிற்றுப் புறணியை எரிச்சல் அடையச் செய்து எரியும் உணர்வை உண்டாக்கும். காரமான உணவுகள், அதிகப்படியான காஃபின், ஆல்கஹால் மற்றும் கொழுப்பு நிறைந்த அதிக உணவை உட்கொள்வதால் எரியும் உணர்வை ஏற்படுத்தும். உதாரணமாக, சாக்லேட், காஃபின் நிறைந்த பொருட்கள், வறுத்த உணவுகள், சிட்ரஸ் உணவுகள், காரமான உணவு போன்றவை வயிறு எரிச்சலை மேலும் மோசமாக்கிவிடும்.
தீர்வுகள்:
* உணவில் மாற்றங்கள் செய்வதன் மூலம், அதாவது காரமான, அதிகக் கொழுப்பு மிகுந்த, எரிச்சலூட்டும் உணவுகளை தவிர்ப்பதன் மூலம் வயிறு எரிவதை கட்டுப்படுத்தலாம்.
* புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம் இருந்தால் அவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது.
* அதிக மன அழுத்தம் வயிற்றில் எரிச்சலை அதிகரிக்கலாம். இதற்கு தியானம், பிராணாயாமம் போன்றவற்றை பயிற்சி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
* நாம் எடுத்துக்கொள்ளும் உணவை சரியாக மென்று சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கும் உறங்குவதற்கும் இடையே குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும். இரவில் நேரம் தவறி தாமதமாக உண்பதையும் தவிர்க்க வேண்டும்.
* எரியும் வயிற்றை தணிக்க தெளிவான சூப்புகள், காஃபின் நீக்கப்பட்ட தேநீர், திராட்சை, ஆப்பிள், செர்ரி போன்ற பழச்சாறுகள் எடுத்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
* சில வகை உணவுகள் வயிற்றில் எரியும் அறிகுறிகளை மோசமாக்காமல் நன்கு ஊட்டமளிக்க உதவும். காய்கறி சூப்புகள், பப்பாளி, ஓட்ஸ், முட்டை, பாதாம் பால் போன்றவை இதற்கு உதவும். காரமான உணவுகள், அமிலம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது வயிற்றில் அசௌரிகம் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.
* கடுமையான அல்லது தொடர்ந்து வயிற்றில் எரியும் உணர்வு இருந்தால் தகுந்த மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம் ஆகும்.