குழந்தைகள் தூக்கத்தில் பல் கடிப்பது குடல் புழுக்களாலா? உண்மை பின்னணி இதோ!

மனஅழுத்தம், தூக்கக் கோளாறு மற்றும் பற்கள் வளர்ச்சி காரணமாக ஏற்படும் 'ப்ரக்சிசம்' (Bruxism) காரணம்.
குழந்தைகள் பல் கடிப்பது
குழந்தைகள் பல் கடிப்பது
Updated on

'கட்… கட்…' அல்லது 'நற… நற' என்று தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையிடமிருந்து பற்கள் உரசும் சத்தம் கேட்கும்போது பெற்றோர் பலருக்கும் தோன்றும் ஒரு சந்தேகம் 'குழந்தையின் வயிற்றில் புழுக்கள் இருப்பதால்தான் பல் கடிக்கிறதா?' என்று.

உண்மையில், தூக்கத்தில் பற்களை கடித்தல் அல்லது பல் இறுக்குதல் (Bruxism) எனப்படுகிறது. இது குழந்தைப் பருவத்தில் காணப்படும் பொதுவான நிகழ்வு தான். பல குழந்தைகளிடம் இது தற்காலிகமாக இருந்து, சற்று வளர்ந்தவுடன் குறைந்து விடுகிறது. ஆனால் தொடர்ந்து அல்லது தீவிரமாக இருந்தால் காரணத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.

மன அழுத்தமும் உணர்ச்சிகளும்

குழந்தைக்கும் மன அழுத்தம் இருக்குமா என்று நாம் ஆச்சரியப்படலாம். பள்ளிப் படிப்பு, தேர்வு, நண்பர்களுடனான பிரச்சினை, வீட்டில் ஏற்படும் மாற்றங்கள், பயம் அல்லது பதற்றம் போன்றவை சில குழந்தைகளில் தூக்கத்தின் போது பல் இறுக்குதலை அதிகரிக்கலாம். மனஅழுத்தம் (Stress), பதற்றம் (Anxiety) ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனை பெற்று சரி செய்ய வேண்டும்.

தூக்கத்தின் சில கோளாறுகள்

குறட்டை, மூக்கடைப்பு, வாய்வழியாகச் சுவாசித்தல் போன்றவை இருந்தால் குழந்தைக்கு நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் இருப்பதில்லை. குறிப்பாக தூக்கத்தில் மூச்சுத்தடை (Obstructive Sleep Apnea) உள்ள சில குழந்தைகளிடமும் பல் கடித்தல் காணப்படும். இரவில் அதிகமாகக் குறட்டை விடுதல், மூச்சடைப்பு போலத் திணறுதல், அமைதியற்ற தூக்கம், பகலில் அதிகத் தூக்கம் அல்லது கவனக்குறைவு இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

குழந்தைகள் பல் கடிப்பது
குழந்தைகள் பல் கடிப்பது

பற்களின் வளர்ச்சிப் பருவம்

பால் பற்கள் முளைக்கும் காலத்திலும், பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் உருவாகும் காலத்திலும், குழந்தைகள் பற்களை இறுக்கவோ உரசவோ செய்யலாம். பற்களின் அமைப்பு அல்லது கடித்தல் முறையில் உள்ள வேறுபாடுகள் சில குழந்தைகளில் பல் கடித்தலுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால் 'பற்கள் சரியாக இணையாததால்தான் எல்லா குழந்தைகளும் பல் கடிக்கின்றனர்' என எடுத்துக் கொள்ள கூடாது.

மரபியல் மற்றும் சில உடல் காரணிகள்

சில குழந்தைகளில் குடும்பத்தில் இதே பழக்கம் இருப்பது காணப்படுகிறது. தூக்கத்தின் இயல்பான மாற்றங்கள், நரம்பு மண்டலத்தின் செயல்பாடு மற்றும் சில மருந்துகள் உட்கொள்வது போன்றவை பல் கடித்தலுடன் தொடர்புடையதாக இருக்கலாம். எனவே ஒரே காரணத்தைத் தேடுவதற்குப் பதிலாக குழந்தையின் முழுமையான உடல்நிலையைப் பார்ப்பதே சரியான அணுகுமுறை.

இதையும் படியுங்கள்:
கொளுத்தும் வெயில்… குழந்தைகளை ஆட்டும் வெப்ப அதிர்ச்சி! பெற்றோர் தவிர்க்கக்கூடாத 8 விதிகள்!
குழந்தைகள் பல் கடிப்பது

புழுக்கள் காரணமா?

இதுதான் பெற்றோர் அதிகம் கேட்கும் கேள்வி. பல் கடிப்பதையும் குடல் புழுக்களையும் நேரடியாக இணைக்கும் வலுவான அறிவியல் ஆதாரம் இல்லை. குழந்தை தூக்கத்தில் பல் கடிக்கிறது என்பதற்காக மட்டும் புழு மருந்து கொடுப்பது ஒன்றே தீர்வாகாது. புழுத்தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

பல் கடிக்கும் குழந்தைக்கு என்ன செய்யலாம்?

முதலில் பதற்றப்பட வேண்டாம். குழந்தையின் தூக்க நேரத்தை ஒழுங்குபடுத்தி, இரவு நேரத்தில் அதிகமான திரை பயன்பாட்டைத் தவிர்த்து, அமைதியான தூக்கச் சூழலை உருவாக்கலாம். பகலில் குழந்தையுடன் பேசும்போது அதன் பயம், பதற்றம் அல்லது கல்வி அல்லது பள்ளி சம்பந்தமான சிக்கல்கள் ஏதேனும் உள்ளனவா என்பதையும் அன்புடன் அறிந்துகொள்ள வேண்டும்.

தொடர்ந்து பல் கடித்தல், பல் தேய்மானம், பல் அல்லது தாடை வலி, காலையில் தலைவலி, முகத் தசைகளில் வலி, தூக்கக் குறைபாடு போன்றவை இருந்தால் குழந்தை பல் மருத்துவரை (Pediatric Dentist) அணுகுவது நல்லது. தேவையானபோது தூக்கத்தைப் பற்றிய மருத்துவ ஆலோசனைகளும் தேவை.

இதையும் படியுங்கள்:
உடலில் திடீரென மச்சம் தோன்றுகிறதா? பிளாக் மச்சம் புற்றுநோயின் அறிகுறியா?
குழந்தைகள் பல் கடிப்பது

பற்கள் கடிப்பதை மட்டும் நிறுத்தினால் போதாது, அதன் காரணத்தை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிப்பதே சிறந்த தீர்வு.

logo
Kalki Online
kalkionline.com