நூறு வயது வரை வாழ இதோ ஒரு 'ப்ளூபிரின்ட்'! மிஸ் பண்ணாம படிங்க!

Medicine for healthy life and charaka samhita
Charaka samhita
Published on

நூறு ஆண்டுகள் நோய் நொடியில்லாமல் வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது? ஆனால், இன்றைய உலகில் நாம் காண்பது என்ன? இளம் வயதிலேயே ஏராளமானோர் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு மாண்டு விடுகிறார்கள். இத்தகைய சூழலில், மனித குலம் இன்பமுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுகிறார் மகரிஷி சரகர்.

சரகர் ஒரு மாபெரும் ரிஷி. அவர் வழங்கிய 'சரக சம்ஹிதை' (Charaka Samhita) எனும் மருத்துவக் களஞ்சியம், மனிதன் நலமுடன் வாழ்வதற்கான நெறிமுறைகளை எவ்விதக் கட்டணமுமின்றி (No Fee!) இலவசமாகவே வழங்குகிறது.

'சர' என்ற வார்த்தைக்கு 'சென்று கொண்டே இருப்பது' என்று பொருள். 'சரகர்' என்றால் நாடெங்கும் சுற்றிக் கொண்டிருப்பவர் என்று அர்த்தம். ஆம், பாரத நாடெங்கும் சுற்றித் திரிந்து, மக்கள் நலமாக வாழ்வதற்கான வழிகளை அவர் கற்பித்தார். குறிப்பாக, நோயாளிகள் அவரது வழிகாட்டுதலால் பிணிகளிலிருந்து விடுபட்டனர்.

மனித வாழ்வின் நான்கு நிலைகள்

சரகர் மனித வாழ்வை அதன் தன்மையைப் பொறுத்து நான்காகப் பிரிக்கிறார்:

  1. ஹித ஆயுள்: பயனுள்ளதாகவும், இதமாகவும் வாழ்பவர்கள்.

  2. அஹித ஆயுள்: கெடுதல் எண்ணங்களுடன் கேடு புரிபவர்கள்.

  3. சுக ஆயுள்: சுகமாகவும், சந்தோஷமாகவும் வாழ்பவர்கள்.

  4. துக்க ஆயுள்: எப்போதும் துயரத்துடன் வாழ்பவர்கள்.

சரகரின் கூற்றுப்படி, அனைவரும் 'சுக' மற்றும் 'ஹித' வாழ்வையே வாழ வேண்டும். ஒரு மனிதனின் முழுமையான ஆயுள் என்பது நூறு ஆண்டுகள் ஆகும். இந்தத் தீர்க்க ஆயுளுடன் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிக்க அவர் 'ஆயுர்வேதத்தை' நமக்கு அளித்தார்.

'ஆயுர்' என்பது உடல், இந்திரியங்கள் (புலன்கள்), மனம் மற்றும் ஆன்மாவைக் குறிக்கும். எது நல்லது, எது கெட்டது, எது மகிழ்ச்சியான தீர்க்கமான ஆயுளை அளிக்கும் என்பதைச் சொல்லும் வேதமே ஆயுர்வேதமாகும். சுருக்கமாகச் சொன்னால், இது ஒரு 'வாழ்க்கை அறிவியல்' (Science of Life). உலகெங்கும் உள்ள அறிஞர்கள் இந்த அற்புதமான நூலைப் போற்றி வருகின்றனர். நல்ல வாழ்க்கையை அமைத்துத் தரும் பரிசை விடச் சிறந்த பரிசு உலகில் வேறு ஏதேனும் உண்டா?

சந்தோஷகரமான வாழ்வு என்றால் என்ன?

எது உண்மையான மகிழ்ச்சியான வாழ்வு என்பதையும் அவரே விளக்குகிறார்:

"உடல் மற்றும் மன வியாதிகள் இன்றி, உற்சாகம், வலிமை, மரியாதை, பன்முகத்தன்மை கொண்ட வாழ்க்கை, மனத்திண்மை, தைரியம், கலைகளில் வல்லமை, புலன்களை அடக்கி ஆளும் திறன், கூரிய அறிவு, செல்வம் மற்றும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய இன்பங்கள் ஆகியவற்றுடன், நீண்ட ஆயுள் பெற்று வாழ்வதே சந்தோஷகரமான வாழ்வு."

மற்றவை எல்லாம் ஒருவகையில் துக்ககரமான வாழ்வே என்கிறார் சரகர்.

இயற்கையோடு இணைந்த மருத்துவம்

இந்த ஆயுர்வேதத்திற்குத் தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. இது இயற்கையோடு இயைந்தது. இயற்கை எப்படி முடிவற்றதோ, அதுபோலவே ஆயுர்வேதமும் முடிவற்றது.

இதையும் படியுங்கள்:
காரணமே இல்லாமல் உள்ளங்கையில் வியர்க்கிறதா? உங்க உடம்பு சொல்லும் ரகசியம் இதுதான்!
Medicine for healthy life and charaka samhita

சரகர் தனது நூலில் உடலமைப்பு, நோய்களின் தன்மைகள், நோய்களுக்கான மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை மிக விரிவாக விளக்குகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, 'வியாதியே வராமல் வாழ்வதற்கான' தடுப்பு முறைகளைத் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார். ஒரு சிறந்த மருத்துவர் யார், அவருக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள் என்ன என்பதையும் அவர் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்.

120 அத்தியாயங்களைக் கொண்ட 'சரக சம்ஹிதை' எனும் இந்தப் பொக்கிஷத்தைப் படிப்பவர்கள் பாக்கியவான்கள் என்பதில் ஐயமே இல்லை!

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com