கிழங்கு வகைகளில் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரே கிழங்கு உருளைக்கிழங்குதான். காரணம், இதன் ருசியும் பலவிதமான சமையல் செய்முறைகளும்தான். ஆனால், உருளையைப் போலவே ஆரோக்கியம் தரும் மேலும் சில கிழங்கு வகைகளையும் தவிர்க்காமல் உணவில் சேர்த்து வருவது உடலுக்கு நல்லது. அந்த வகையில் சேப்பங்கிழங்கு பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சேப்பங்கிழங்கின் அறிவியல் பெயர் கொலோகாசியா ஆகும். இது தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைக்கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட அரேசியே குடும்பத்தில் பூக்கும் தாவர இனமாகும். இதன் சில இனங்கள் வெப்பமண்டலம் மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகப் பயிரிடப்பட்டு உணவாகிறது.
சற்றே வழுவழுப்புத் தன்மை கொண்ட சேப்பங்கிழங்கில் உடலுக்கு நலன் தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன. 132 கிராம் வேகவைத்த சேப்பங்கிழங்கில் 187 கலோரிகள் இருகிறது. இதிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் இ சருமப் பாதிப்பை தடுக்கிறது. வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட்கள் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்து உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடெண்ட் இந்த சேப்பங்கிழங்கில் உள்ளதால், கண்புரை ஏற்படுவதைத் தடுத்து கண் பார்வைத் திறனுக்கு உதவுகிறது. இதில் உடல் நலம் காக்கும் இயற்கையாக உள்ள 20 அமினோ அமிலங்களில் சுமார் 17 அமிலங்களும் மற்றும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும் உள்ளன . இவை கெட்ட கொழுப்பை கரைப்பதற்கும் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவியாக உள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் எலும்புகள், தசைகள், நரம்புகளுக்கு வலு தந்து சீரான உடல் செயல்பாட்டுக்கு உதவுகிறது.
இதில் குர்செடின் எனப்படும் ஆக்சிஜனேற்றிகள் உள்ளதால் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாத்து, புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் திறன் இருப்பதாகக் கருதப்படுகிறது. சேப்பங்கிழங்கை வைத்து அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு ஆய்வில் இதில் உள்ள கிரிப்டோக்சாந்தின், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைப்பதாக கண்டறிந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சேப்பங்கிழங்கைப் போல அதன் இலைகளிலும் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் மருத்துவத்துக்கு இந்த இலைகளும் பயன்படுகின்றன. பாம்புக்கடி, தேள்கடி போன்ற நச்சுத்துன்மையை முறிக்கும் தன்மை இந்த இலைக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது.
சேப்பங்கிழங்கில் இத்தனை நன்மைகள் இருந்தாலும் இதில் கால்ஷியம் ஆக்சிலேட் ரெண்டு கசப்புச் சுவையுள்ள சேர்மம் இருப்பதால் சிலருக்கு வாய் மற்றும் தொண்டையில் அரிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஒவ்வாமை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள். வயிற்றிலுள்ள பூச்சிகளை ஒழிக்க இந்த கிழங்கு துணைபுரிகிறது என்றாலும் அரிப்பு, அலர்ஜி போன்ற சருமப் பிரச்னைகள் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், இரைப்பை பிரச்னைகள், இதய பாதிப்புகள், பக்கவாத பாதிப்பு உள்ளவர்களும் மருத்துவர் ஆலோசனை பெற்று சேப்பங்கிழங்கை உண்பது நல்லது.