

'டாக்டர்… என் மகன் பள்ளி முடிந்து வந்ததும் கைப்பேசியுடன் அமர்ந்துவிடுகிறான். விளையாடுவதில் ஆர்வமில்லை. உடல் எடையும் அதிகரித்து வருகிறது. இரவில் தாமதமாகத் தூங்குகிறான். சிறு வயதிலேயே இதயத்தைப் பாதுகாக்க வேண்டுமா? உடற்பயிற்சி, உணவுப் பழக்கம், தூக்கம் ஆகியவற்றில் எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?' என்று ஒரு தாய் என்னிடம் கேட்டார்.
இதயத்தைப் பாதுகாப்பது முதுமையில் தொடங்க வேண்டிய முயற்சி அல்ல. குழந்தைப் பருவத்திலேயே உருவாக்க வேண்டிய வாழ்நாள் பயிற்சி!
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 29 அன்று கடைப்பிடிக்கப்படும் உலக இதய நாளின் 2026ஆம் ஆண்டு கருப்பொருள், 'இதய நோய் வெளிப்படையாகத் தெரியாமல் கூட இருக்கலாம், இதயத்தின் எச்சரிக்கைத் துடிப்பைத் தவறவிடாதீர்கள்' என்பதாகும்.
இதய ஆரோக்கியம் குழந்தைப் பருவத்திலேயே தொடங்குகிறது!
இதயம் உடல் முழுவதும் இரத்தத்தை எடுத்துச் செல்லும் உயிர்நாடி. குழந்தைப் பருவத்தில் உருவாகும் உணவு, உடற்பயிற்சி, தூக்கம் போன்ற பழக்கங்கள் எதிர்கால இதய நலனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற ஆபத்துக் காரணிகளை வராமல் தடுப்பது அவசியம். எப்படி?
உடல் எடையைத் தொடர்ந்து கண்காணிப்போம்!
குழந்தையின் எடை அதிகரிப்பதை மட்டும் வைத்து உடல் பருமனைத் தீர்மானிக்க முடியாது. வயது மற்றும் பாலினத்திற்கேற்ற உயரம், எடை, உடல் நிறைக் குறியீடு ஆகியவற்றை வளர்ச்சி அட்டவணையில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையுடன் காலமுறைப்படி கண்காணிப்பது தேவையற்ற எடை அதிகரிப்பைத் தடுக்க உதவும். வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைக்கு திடீர் உணவுக் கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியமில்லை. ஆனால் உடல் எடையைக் கண்காணிப்பது முக்கியம்.
இதயத்தை வலுப்படுத்தும் உடற்பயிற்சி!
ஓடுதல், வேக நடை, மிதிவண்டி ஓட்டுதல், நீச்சல், நடனம், கால்பந்து போன்றவை இதயத்துடிப்பை அதிகரித்து இதயத்தின் செயல்திறனை மேம்படுத்துகின்றன. ஆறு முதல் பதினேழு வயதுடைய குழந்தைகள் தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் உடல் இயக்கத்தில் ஈடுபட வேண்டும்.
தசை வலிமையும் எலும்பு உறுதியும்!
இதய ஆரோக்கியத்திற்கு ஓட்டம் மட்டுமல்ல, தசை வலிமையும் முக்கியம். வயதுக்கேற்ற கயிறு தாண்டுதல், ஏறுதல், தாவுதல், உடல் எடையைப் பயன்படுத்திச் செய்யும் எளிய பயிற்சிகள் தசைகளையும் எலும்புகளையும் வலுப்படுத்துகின்றன. யோகாசனங்கள் உடல் நெகிழ்வுத்தன்மை, சமநிலை, சுவாசக் கட்டுப்பாடு ஆகியவற்றை மேம்படுத்த உதவுகின்றன. தியானமும் மூச்சுப் பயிற்சியும் மன அழுத்தத்தைக் கையாளும் திறனை அளிக்கும். இவை விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு மாற்றாக செய்யாமல், அவற்றுடன் இணைந்த துணைப் பயிற்சிகளாக செய்ய வேண்டும்.
இதயத்துக்கு உகந்த உணவுத் தட்டு!
காய்கறிகள், பழங்கள், முழுத்தானியங்கள், பருப்பு வகைகள், பயறு, கொட்டைகள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். தேவையான புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் கிடைப்பதை உறுதிசெய்யுங்கள். வீட்டில் தயாரிக்கும் சத்தான சிற்றுண்டிகளை அறிமுகப்படுத்துங்கள். குழந்தைகள் தாகத்திற்கு நீரைத் தேர்ந்தெடுக்கவும், உணவின் சுவையைவிட அதன் சத்துமதிப்பைக் கவனிக்கவும் பழக்கப்படுத்துங்கள்.
துரித உணவுகளைக் குறைப்போம்!
சிப்ஸ், பாக்கெட் சிற்றுண்டிகள், சர்க்கரை மிகுந்த குளிர்பானங்கள், அதிக எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றை அன்றாட உணவாக மாற்றிவிடக் கூடாது. அதிக உப்பு, சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு கொண்ட உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வது இதய நலனுக்கு உகந்ததல்ல.
தூக்கமும் இதய நலனின் ஒரு பகுதியே!
போதுமான தூக்கம் குழந்தையின் சீரான வளர்ச்சி, சரியான உடல் எடை, சீரிய மனநலம் ஆகியவற்றுக்கு அவசியம். வயதுக்கேற்ற தூக்க நேரத்தை உறுதிசெய்து, தினமும் ஒரே நேரத்தில் படுக்கச் செல்வதையும் அதிகாலையில் எழுவதையும் பழக்கமாக்குங்கள். படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே கைப்பேசி, தொலைக்காட்சி போன்ற திரைகளை அணைத்துவிடுவது நல்லது. அமைதியான, இருட்டான, வசதியான படுக்கையறை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். மகிழ்வான மனநிலையோடு தூங்குவதற்கு ஏதுவாக கற்பனைக் கதைகள், நீதிக் கதைகள் என சொல்லி குழந்தைகளை தூங்க வையுங்கள்.
எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!
விளையாடும்போது வழக்கத்திற்கு மாறான மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மயக்கம், படபடப்பு அல்லது திடீர் சோர்வு ஏற்பட்டால் மருத்துவப் பரிசோதனை அவசியம். குடும்பத்தில் இளம் வயதிலேயே இதய நோய் அல்லது திடீர் மரணம் ஏற்பட்ட வரலாறு இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். குழந்தைகளுக்கான இதயப் பரிசோதனைகள் அவர்களின் அறிகுறிகளுக்கும், குடும்ப வரலாற்றுக்கும் ஏற்ப தீர்மானிக்கப்பட வேண்டும்.
இதயத்தைப் பாதுகாப்பது ஒரு நாள் விழிப்புணர்வில் முடிவதல்ல. இளம் வயதிலேயே தொடங்கி, தினமும் நாம் தேர்ந்தெடுக்கும் உணவு, உடற்பயிற்சி, தூக்கம், ஓய்வு ஆகியவற்றில் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் துடிப்பாக நம்மை வைத்திருப்பதே.