குழந்தை குண்டாக இருந்தா ஆரோக்கியமா? ஊட்டச்சத்துக் குறைபாட்டின் மறைமுக ஆபத்தா?

செப்டம்பர் 1-7: தேசிய ஊட்டச்சத்து வாரம் - குழந்தையின் எடை மட்டுமல்ல; நுண் ஊட்டச்சத்து குறைபாடும் வளர்ச்சிக் குறைபாடே என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
Child Nutrition | ஊட்டச்சத்து குறைபாடு
Child Nutrition | ஊட்டச்சத்து குறைபாடு
Updated on
Q

குழந்தை நன்றாகச் சாப்பிடுகிறது… ஆனால் எடை ஏறவே இல்லை!

Q

என் குழந்தை குண்டாகத்தான் இருக்கிறது; சத்துக் குறைபாடு எப்படி இருக்கும்?

Q

பால், பிஸ்கட், சாக்லேட் எல்லாம் கொடுக்கிறோம். வேறு என்ன வேண்டும்?

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து பெற்றோரிடம் இருக்கும் சில தவறான புரிதல்கள் இவை. ஊட்டச்சத்துக் குறைபாடு என்றால் ஒல்லியாக இருப்பது மட்டுமல்ல, தேவையான சத்துகள் குறைவதும், தேவைக்கு அதிகமான ஆற்றல் கிடைப்பதும் இதில் அடங்கும். எனவே குழந்தையின் உணவைப் பற்றி பேசும்போது அளவையும், தரத்தையும், பல்வகைத் தன்மையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இவை குறித்து முழுமையாக விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் க. இராவணன் M.D.

Q

ஊட்டச்சத்துக் குறைபாடு என்றால் ஒல்லியாக இருப்பது மட்டும்தானா?

A

இல்லை. குழந்தையின் வயதுக்கேற்ற எடை மற்றும் உயரம் இல்லாமை ஒரு வெளிப்படையான அறிகுறி. அதே நேரத்தில், உடல் எடை அதிகமாக இருந்தாலும் இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின்கள் போன்ற நுண்ணூட்டச்சத்துகள் குறைபாடு இருக்கலாம். எனவே குழந்தையின் தோற்றத்தை வைத்து மட்டும் ஊட்டச்சத்தை மதிப்பிடக் கூடாது.

Q

குழந்தையின் வளர்ச்சியை எப்படி சரியாகக் கண்காணிப்பது?

A

வயதுக்கு ஏற்ப உயரம், எடை, உடல் எடை–உயர விகிதம் போன்றவற்றை வளர்ச்சி அட்டவணையில் தொடர்ந்து பதிவு செய்வது முக்கியம். ஒருமுறை எடை பார்த்து முடிவெடுப்பதைவிட, தொடர்ந்து குழந்தையின் வளர்ச்சி எந்தப் பாதையில் செல்கிறது என்பதே முக்கியமான தகவலைத் தரும்.

Q

முதல் ஆறு மாதங்களில் உணவு எப்படி இருக்க வேண்டும்?

A

பிறந்த முதல் ஆறு மாதங்களில், குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்குவது சிறந்தது. ஆறு மாதங்கள் நிறைவடைந்ததும் தாய்ப்பாலைத் தொடர்ந்து கொண்டே, குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான கூடுதல் உணவைத் தொடங்க வேண்டும். உணவைத் தாமதமாகத் தொடங்குவதும், நீண்ட காலம் பால் மட்டுமே கொடுப்பதும் சரியான அணுகுமுறை அல்ல.

Q

ஆறு மாதங்களுக்குப் பிறகு கஞ்சி மட்டும் போதுமா?

A

போதாது. குழந்தையின் உணவில் கஞ்சியில் ஆரம்பித்து படிப்படியாக தானியம், பருப்பு, முட்டை அல்லது பிற புரத உணவுகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் தேவையான எண்ணெய், நெய் ஆகியவை வயதுக்கேற்ப சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவு மென்மையாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும், படிப்படியாக அதிக அடர்த்தியுடனும் இருக்க வேண்டும்.

Q

பிஸ்கட், இனிப்பு, நொறுக்குத்தீனி ஏன் பிரச்சினையாகிறது?

A

குழந்தையின் வயிற்றின் அளவு சிறியது. பிஸ்கட், இனிப்பு பானங்கள், சிப்ஸ், கேக் போன்ற குறைந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுகள் வயிற்றை நிரப்பிவிட்டால், குழந்தை உண்மையான சத்துணவை சாப்பிடும் அளவு குறைந்து விடும். காலப்போக்கில் அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப் பழக்கம் உடல் பருமனுக்கும் வழிவகுக்கும்.

Baby | ஊட்டச்சத்து குறைபாடு
Baby | ஊட்டச்சத்து குறைபாடு
Q

'குண்டாக இருந்தால் ஆரோக்கியம்' என்று சொல்லலாமா?

A

அது பழைய நம்பிக்கை. குழந்தையின் ஆரோக்கியத்தை உடல் எடை மட்டும் தீர்மானிக்காது. சரியான உயர வளர்ச்சி, தசை வளர்ச்சி, செயல்பாடு, அறிவாற்றல், நோய் எதிர்ப்பு திறன் மற்றும் தேவையான நுண்ணூட்டச்சத்துகள் ஆகிய அனைத்தும் முக்கியம். அதிக உடல் எடையும் ஒரு வகையான ஊட்டச்சத்து சமநிலையின்மை தான்.

இதையும் படியுங்கள்:
காய்ச்சல் வந்தால் உடனே ஹாஸ்பிட்டல் ஓடணுமா? குழந்தைகளிடம் இந்த 7 அறிகுறிகள் இருந்தால் உஷார்!
Child Nutrition | ஊட்டச்சத்து குறைபாடு
Q

குழந்தை சாப்பிட மறுத்தால் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

A

“இன்னும் ஒரு வாய்… இதைச் சாப்பிட்டால் சாக்லேட் தருகிறேன்” என்று உணவை பேரம் பேசாதீர்கள். குழந்தையின் பசியை மதித்து, சிறிய அளவில் உணவு பரிமாறி, குடும்பத்தினருடன் சேர்ந்து அமைதியான சூழலில் சாப்பிடப் பழக்குங்கள். புதிய உணவை ஒருமுறை மறுத்துவிட்டால் அது பிடிக்காது என்று முடிவு செய்யாமல், வேறு நாளில் மீண்டும் அறிமுகப்படுத்தலாம்.

Q

பெற்றோர் எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

A

குழந்தையின் எடை தொடர்ந்து குறைந்தால் அல்லது அதிகரிக்காமல் இருந்தால், உயர வளர்ச்சி பாதிக்கப்பட்டால், உணவில் ஆர்வம் குறைந்தால், தொடர்ந்து வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி இருந்தால், அதிக சோர்வு அல்லது வெளிறிய தோற்றம் காணப்பட்டால் குழந்தை நல மருத்துவரை அணுக வேண்டும். தேவையானபோது ஊட்டச்சத்து மதிப்பீடு, வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் குறிப்பிட்ட நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளுக்கான ரத்தப் பரிசோதனைகள் மருத்துவர் பரிந்துரைப்பார்.

இதையும் படியுங்கள்:
குழந்தையின் திடீர் திக்குவாய்: பெற்றோர் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!
Child Nutrition | ஊட்டச்சத்து குறைபாடு

முடிவுரை:

குழந்தைக்கு விலை உயர்ந்த உணவுதான் சத்தான உணவு என்றில்லை.

நமது பாரம்பரிய சமையலறையிலேயே அரிசி, சிறுதானியங்கள், பருப்பு வகைகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் போன்ற ஏராளமான சத்தான உணவுகள் உள்ளன.

குழந்தையின் தட்டில் வீட்டு உணவின் வகைகள் பரவலாக இருக்கட்டும்...

வெளி உணவுகளின் அளவு குறையட்டும்...

நல்ல ஊட்டம் கொடுப்போம், குழந்தைகளின் வாட்டத்தைப் போக்கிடுவோம்.

logo
Kalki Online
kalkionline.com