குழந்தையின் நகத்தில் இந்த அறிகுறிகளா? பெற்றோர் கவனிக்க வேண்டிய 9 விஷயங்கள்!

இரத்தம் சோகை, கை-கால்-வாய் நோய் மற்றும் ஆக்சிஜன் குறைபாட்டை உணர்த்தும் நக மாற்றங்கள்.
குழந்தையின் நகங்கள்
குழந்தையின் நகங்கள்
Updated on

நகங்கள் வெறும் அழகிற்கான உறுப்புகள் அல்ல. அவை கெராட்டின் எனப்படும் கடினமான புரதத்தால் ஆன பாதுகாப்பு அடுக்குகள். விரல் நகங்கள் ஒரு நாளில் சுமார் 0.1 மி.மீ. மட்டுமே வளர்கின்றன. அதனால் நகத்தில் தென்படும் மாற்றங்கள் உடலின் அன்றாட நிலையை மட்டுமல்லாமல், சில வாரங்களுக்கு முன்பு குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல், தொற்று அல்லது உடல் சார்ந்த அழுத்தங்களையும் வெளிப்படுத்தும் காலக் குறியீடாக அமைகின்றன.

நடுப்பகுதி குழிந்து காணப்படும் நகம்

நகத்தின் மையப்பகுதி உள்நோக்கி அமிழ்ந்து, பக்கவாட்டு விளிம்புகள் மேல்நோக்கி வளைந்து கரண்டி போன்ற வடிவம் பெறுவது சில குழந்தைகளிடம் காணப்படலாம். கைக்குழந்தைகளில் நகத்தின் கட்டமைப்பு இயற்கையாகவே மிகவும் மெல்லியதாக இருப்பதால், ஆரம்பத்தில் இது தற்காலிக உடலியல் மாற்றமாகத் தோன்றி பின்தானாகவே சரியாகிவிடும்.

இந்த வளைவு தொடர்ந்து நீடித்தால் அல்லது பெரிய குழந்தைகளிடம் காணப்பட்டால், அது உடலில் இரும்புச்சத்துக் குறைபாடு, இரத்தச்சோகை அல்லது குடலில் ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவதில் உள்ள குறைபாடுகளைக் குறிக்கலாம்.

நகத்தில் கிடைமட்டக் கோடுகள் மற்றும் பள்ளங்கள்

நகத்தின் வேர்ப்பகுதியில் புதிய செல்கள் உருவாகும் செயல்முறை சில நாட்கள் தடைபட்டால், நகத்தின் குறுக்கே பள்ளம் போன்ற கிடைமட்டக் கோடுகள்தோன்றுகின்றன. நகம் மெதுவாக வளர்வதால், குழந்தை நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்த சில வாரங்கள் கழித்தே இந்தக் கோடு கண்ணுக்குத் தெரியும்.

கடுமையான காய்ச்சல், கை-கால்-வாய் நோய் (HFMD) போன்ற வைரஸ் தொற்றுகள் அல்லது கவாசாகி நோய்க்குப் பிறகு இத்தகைய கோடுகள் ஏற்படுவது வழக்கம். வளர்ச்சித் தடை மிகக் கடுமையாக இருந்தால், பழைய நகம் அடியிலிருந்துவிடுபட்டு உதிர்ந்து, அதன் கீழ் புதிய நகம் வளரத் தொடங்கும்.

Nails - குழந்தையின் நகங்கள்
Nails - குழந்தையின் நகங்கள்

நகத்தின் மேற்பரப்பில் சிறுசிறு குழிகள்

நகத்தின் மேல் தையல் ஊசியால் ஆங்காங்கே குத்தியது போல நுண்ணியபள்ளங்கள் தோன்றுவது நகக் குழிவுகள் எனப்படும். நகம் உருவாகும் இடத்தில் செல் வளர்ச்சி சீரற்ற முறையில் நிகழ்வதே இதற்கு அடிப்படைக் காரணம்.

தோல் தடிப்பு அழற்சி (Psoriasis), தீவிர அரிப்புடன் கூடிய தோல் அழற்சி அல்லது சிலவகை முடி உதிர்தல் பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கு இத்தகைய குழிகள் தென்படலாம். சில சிறிய குழிகளை மட்டும் வைத்து முடிவெடுக்காமல் குழந்தையின் தலைமுடி மற்றும் உடலின் பிற தோல் பகுதிகளையும் ஆய்ந்து மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

நகம் அடுக்குகளாகப் பிளந்து உடைவது

நகத்தின் முனைகள் எளிதில் உடைந்து, மெல்லிய ஏடுகளாகப் பிரிந்து போவது குழந்தைகளிடம் அடிக்கடி காணப்படும் பொதுவான நிகழ்வு.

கைகளைத் திரும்பத் திரும்ப தண்ணீரில் நனைத்து உலர்த்துவது, விரல் சூப்பும் பழக்கம், நகம் கடிப்பது போன்ற புறக்காரணிகளால் நகத்தின் ஈரப்பதம் குறைந்து இது நிகழ்கிறது. அரிதாக சில குழந்தைகளுக்கு இரும்புச்சத்து அல்லது புரதக்குறைபாட்டினாலும் நகங்கள் பலவீனமடையலாம்.

நகத்தில் தோன்றும் வெள்ளைப் புள்ளிகள்

நகத்தின் மீது ஆங்காங்கே தோன்றும் தனித்தனி வெள்ளைப் புள்ளிகள் கால்சியம் குறைபாட்டின் அடையாளம் என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல.

நகத்தின் வேர்ப்பகுதியில் ஏற்படும் மிகச் சிறிய அழுத்தம், கதவில் இடுக்கி காயம் ஏற்படுவது அல்லது நகத்தைக் கிள்ளுவது போன்ற நுண் காயங்களால் கெராட்டின் செல்கள் சரியாக முதிர்ச்சியடையாமல் போவதே இப்புள்ளிகளுக்குக் காரணம். நகம் வளர வளர இவை முன்பக்கமாக நகர்ந்து தானாகவே மறைந்து விடும் என்பதால் சிறப்பு மருந்துகள் தேவையில்லை.

நகம் மஞ்சளாகி தடித்து நொறுங்குதல்

நகம் தனது இளஞ்சிவப்பு நிறத்தை இழந்து மஞ்சள், சாம்பல் அல்லது பழுப்பு நிறமாக மாறி, தடிமனாகி நொறுங்குவது பெரும்பாலும் பூஞ்சைத் தொற்றின்வெளிப்பாடாகும்.

Nail fungus - குழந்தையின் நகங்கள்
Nail fungus - குழந்தையின் நகங்கள்

சிறு குழந்தைகளில் இத்தகைய பூஞ்சைத் தொற்று ஏற்படுவது மிகவும் அரிது. அடிபடுதல் அல்லது தோல் அழற்சி நிலைகளும் இதே தோற்றத்தைக் கொடுக்கக் கூடும் என்பதால், நகத்தின் மாதிரியை ஆய்வகத்தில் பரிசோதித்தபின்னரே சரியான பூஞ்சைக் எதிர்ப்பு மருந்துகளைத் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைக்குக் காய்ச்சல், வாயில் புண்களா? கை-கால்-வாய் நோய் அறிகுறிகளும் தீர்வும்!
குழந்தையின் நகங்கள்

விரல் நகங்கள் நீல நிறமாக மாறுவது

நகத்தின் அடியில் இரத்த நாளங்கள் அடர்த்தியாக அமைந்திருப்பதால், இரத்தஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் நகத்தின் நிறத்தில் உடனடியாகப் பிரதிபலிக்கும். தீவிரக் குளிரில் விரல்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தற்காலிகமாகச் சுருங்குவதால் நகங்கள் லேசாக நீல நிறமாகத் தோன்றலாம். கைகளை கதகதப்பாக்கினால் இது சரியாகிவிடும்.

ஆனால் நகங்களுடன் சேர்ந்து குழந்தையின் உதடு அல்லது நாக்கும் நீல நிறமாகமாறினால், அது இரத்தத்தில் பிராணவாயு (ஆக்சிஜன்) குறைவதைக் குறிக்கும் எச்சரிக்கை அறிகுறியாகும். தீவிர சுவாசக் கோளாறு அல்லது பிறவி இதயக்குறைபாடுகளின் வெளிப்பாடாக இது இருக்கக்கூடும் என்பதால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.

நீளவாக்கில் தோன்றும் கருப்பு அல்லது பழுப்பு கோடு

நகத்தின் அடிப்புறத்தில் தொடங்கி நுனி வரை ஒரே சீரான நீளக்கோடாக பழுப்புஅல்லது கருமை நிறம் தென்படுவது நிறமி செல்களின் செயல்பாட்டால்உருவாகிறது.

குழந்தைகளில் இது பெரும்பாலும் தோலில் தோன்றும் மச்சத்தைப் போன்ற தீங்கற்ற ஒரு மாற்றமே ஆகும். எனினும், அந்தக் கோடு குறுகிய காலத்தில் அகலமாவது, அடர் கருப்பாக மாறுவது அல்லது நகத்தைச் சுற்றியுள்ள விரல்தோலிலும் கருமை படர்வது போன்ற மாற்றங்கள் தென்பட்டால் தோல் மருத்துவரிடம் காட்டி ஆய்வு செய்வது அவசியம்.

இதையும் படியுங்கள்:
சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்கலாமா? - அறிவியல் உண்மைகளும், மூடநம்பிக்கைகளும் !
குழந்தையின் நகங்கள்

நகத்தைச் சுற்றி சிவந்து, வீங்கி சீழ் பிடித்தல்

நகத்தின் ஓரங்களில் உள்ள தோலை இழுப்பது, நகம் கடிப்பது அல்லது சிறிய கீறல்கள் வழியாக பாக்டீரியா கிருமிகள் உட்செல்லும் போது நகச்சுற்றுத் தொற்று உருவாகிறது.

பாதிக்கப்பட்ட விரல் பகுதி சிவந்து, வீங்கி, கடுமையான துடிப்புடன் கூடியவலியையும் சீழையும் உருவாக்கும். மேலும், விரல் சூப்பும் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்றுகளால் சிறு நீர்க்கொப்புளங்களும் தோன்றலாம். இவற்றைத் தானாக ஊசியால் குத்தவோ கீறவோ கூடாது. தகுந்த மருத்துவ வழிகாட்டலுடன் கிருமிநாசினி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரைவள்ளிக் கிழங்கு குழந்தைகளுக்கு நல்லதா? தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்!
குழந்தையின் நகங்கள்

நகத்தை மட்டும் வைத்து நோயை முடிவு செய்யலாமா?

கூடாது. நகங்கள் உடலின் ஒட்டுமொத்த நலனை உணர்த்தும் ஒரு துணைக் குறியீடு மட்டுமே தவிர, முழுமையான பரிசோதனை முடிவு அல்ல.

நகத்தில் தெரியும் மாற்றத்தைக் கண்டு உடனே சுயமாக வைட்டமின் அல்லது தாதுச்சத்து மருந்துகளைத் தொடங்கக் கூடாது. குழந்தையின் உணவுப் பழக்கம், ஒட்டுமொத்த வளர்ச்சி, உடல் சுறுசுறுப்பு, கடந்த கால உடல்நலக் குறைபாடுகள் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து மருத்துவர் எடுக்கும் முடிவே பாதுகாப்பானது.

logo
Kalki Online
kalkionline.com