

குழந்தைக்கு திடீரெனக் காய்ச்சல். உணவு சாப்பிட மறுப்பு. வாய்க்குள் சிறு புண்கள். உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் சிவப்புப் புள்ளிகள் அல்லது சிறிய கொப்புளங்கள். இதைப் பார்த்தவுடன் பெற்றோருக்கு பதற்றம் ஏற்படுவது இயல்பு. ஆனால், இவை பெரும்பாலும் கை–கால்–வாய் நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். இது குழந்தைகளிடம், குறிப்பாக ஐந்து வயதுக்குட்பட்டவர்களிடம், அதிகமாகக் காணப்படும் ஒரு வைரஸ் தொற்று. பெரும்பாலான குழந்தைகள் எந்தப் பெரிய சிக்கலும் இல்லாமல் குணமடைந்து விடுகிறார்கள்.
கை–கால்–வாய் நோய் எதனால் வருகிறது?
காக்சாக்கி வைரஸ் (Coxsackievirus) வகைகளும், குடல் வைரஸ் வகைகளும் இதற்குக் காரணமாகின்றன. குழந்தைகளிடம் அதிகமாகக் காணப்படும் ஒரு வகை காக்சாக்கி வைரஸ் ஆகும். வெவ்வேறு வைரஸ் வகைகளால் இந்த நோய் ஏற்படுவதால், ஒருமுறை வந்த குழந்தைக்கு மீண்டும் வருவதற்கும் வாய்ப்பு உண்டு.
கை–கால்–வாய் நோயின் முக்கிய அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், தொண்டை வலி, உணவு விருப்பம் குறைதல் ஆகியவை ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். பின்னர் நாக்கு, ஈறுகள், கன்னத்தின் உட்புறம் போன்ற இடங்களில் வலி தரும் சிறு புண்கள் தோன்றும். உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், கால்கள், சில நேரங்களில் புட்டப்பகுதியிலும் சிவப்புப் புள்ளிகள் அல்லது கொப்புளங்கள் தோன்றலாம்.
ஒரு குழந்தையிடமிருந்து இன்னொரு குழந்தைக்கு எப்படி பரவுகிறது? பள்ளியில் இந்த நோய் எளிதில் பரவுவதற்கு காரணம் என்ன?
பாதிக்கப்பட்ட குழந்தையின் உமிழ்நீர், மூக்கு மற்றும் தொண்டைச் சுரப்புகள், கொப்புளங்களில் உள்ள திரவம், மலம் ஆகியவற்றின் மூலம் வைரஸ் பரவலாம். குழந்தைகள் ஒரே பொம்மையைப் பகிர்ந்து கொள்வது, ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக இருப்பது, கைகளைச் சுத்தம் செய்யாமல் முகத்தைத் தொடுவது போன்றவற்றாலும் தொற்று பரவக்கூடும்.
வீட்டில் குழந்தையை எப்படி கவனிப்பது?
இந்த நோய்க்கென்று தனிப்பட்ட வைரஸ் எதிர்ப்பு மருந்து கிடையாது. காய்ச்சல் மற்றும் வலியைக் குறைக்க குழந்தையின் வயதுக்கும் எடைக்கும் ஏற்ற மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம். மிக முக்கியமானது நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது. வாய்ப்புண் காரணமாக தண்ணீர் குடிக்க மறுக்கும் குழந்தைக்கு அடிக்கடி சிறிது சிறிதாக திரவ உணவுகளை வழங்கலாம்.
பெற்றோர் தவிர்க்க வேண்டியவை என்ன?
தோலில் தோன்றிய கொப்புளங்களை உடைக்கவோ கீறவோ கூடாது. மருத்துவரின் ஆலோசனையின்றி நோய் எதிர்ப்பு மருந்துகள், கிருமி எதிர்ப்பு மருந்துகள் அல்லது வேறு பல மருந்துகளைத் தன்னிச்சையாகக் கொடுக்கக் கூடாது. வைரஸ் தொற்றுக்கு கிருமி எதிர்ப்பு மருந்துகள் பொதுவாகப் பயன் தராது.
குழந்தையை உடனடியாகப் பள்ளிக்கு அனுப்பலாமா?
காய்ச்சல் இருக்கும் போதும், குழந்தை சோர்வாகவோ உணவு மற்றும் திரவங்களை உட்கொள்ள முடியாமலோ இருக்கும் போதும் பள்ளிக்கு அனுப்பக் கூடாது. உடல்நிலை நன்றாகி, காய்ச்சல் இல்லாமல் வழக்கமான செயல்களில் ஈடுபடக்கூடிய நிலையில் வந்த பிறகு பள்ளிக்குத் திரும்பலாம். பள்ளியில் தொற்று தடுப்பு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? எந்த அறிகுறிகள் ஆபத்தானவை?
குழந்தை தண்ணீர் அல்லது திரவ உணவுகளை அருந்த முடியாமல் இருப்பது, சிறுநீர் குறைவது, வாய் மற்றும் நாக்கு மிகவும் வறண்டு காணப்படுவது போன்ற நீர்ச்சத்து இழப்பு அறிகுறிகள் இருந்தால் கவனம் தேவை. மூன்று நாட்களுக்கும் மேலாகக் காய்ச்சல் நீடித்தல், தொடர்ந்து வாந்தி, அதிகமான சோர்வு, தலைவலி, கழுத்து இறுக்கம், மயக்கம் அல்லது வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். அரிதாக மூளை மற்றும் மூளை உறைகளைப் பாதிக்கும் சிக்கல்கள் ஏற்படலாம்.
வீட்டிலும் பள்ளியிலும் தொற்று பரவாமல் எப்படி தடுப்பது?
சோப்பும் தண்ணீரும் கொண்டு கைகளை முறையாகக் கழுவுவது மிக முக்கியம். கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், குழந்தையின் மலம் அல்லது டயப்பரைக் கையாண்ட பிறகும் கைகளைக் கழுவ வேண்டும். பொம்மைகள், கதவுக் கைப்பிடிகள், மேசைகள் போன்ற அடிக்கடி தொடப்படும் பொருட்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையின் உணவுப் பாத்திரம், குடிநீர் பாட்டில், துண்டு போன்றவற்றைப் பகிர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
கை–கால்–வாய் நோய் பெரும்பாலான குழந்தைகளுக்கு தானாகவே சரியாகி விடும் ஒரு வைரஸ் தொற்றுதான்.
பயப்பட வேண்டாம்… அலட்சியமும் வேண்டாம்.
குழந்தையின் உடல்நிலையை கனிவுடன் கவனித்து, நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொண்டு, தொற்று மற்றவர்களுக்குப் பரவாமல் தடுப்பதே சிறந்த செயல்களாகும்.