பொதுவாகவே மணமூட்டிகள் அதிக ஜீரண சக்தியை கொடுக்கும். அதிலும் லவங்கப்பட்டை ஜீரண சக்தியை அதிகரிக்கும். எண்ணெய், காய்கறிகள், புலாவ் போன்ற உணவுகள் ஜீரணம் அடைய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதாலேயே அது போன்ற உணவுகளில் லவங்கப்பட்டை சேர்க்கப்படுகிறது.
லவங்கப் பட்டையில் மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், மங்கனீஸ், காப்பர், ஜிங்க், வைட்டமின்கள், நியாசின், தியமின் மற்றும் லைகோபீன் என எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
இதன் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இதை தேநீர், காபி தண்ணீர், பால், லஸ்ஸி, காய்கறிகள், சூப் மற்றும் தயிருடன் கலந்து சாப்பிடலாம். தினமும் காலையில் எழுந்ததும் இலவங்கப்பட்டை தூளை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து அருந்தினால் உங்கள் நாளை ஆரோக்கியமாக தொடங்கலாம். பழ சாலட்டுகளில் லவங்கப்பட்டை தூள் சேர்த்து சாப்பிடுவதால் அதன் சுவை அதிகரிக்கும். மேலும், இது நறுமணத்தையும் அதிகரிக்கிறது.
இலவங்கப்பட்டை தூள் அல்லது எண்ணெய் இருமல், சளி, ஆஸ்துமா, தலைவலி மற்றும் காசநோய்க்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும், நுரையீரலில் இருக்கும் சளியை கரைத்து வெளியேற்றும் தன்மையை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர ஜலதோஷம், இருமல், சைனஸ் தொல்லைகள் மறையும்.
இலவங்கப்பட்டை துண்டு 2, கிராம்பு 2 , ஏலக்காய் 1 இவற்றை ஒரு வெற்றிலையில் வைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா இளைப்பு கட்டுப்படும்.
இலவங்கப் பட்டை அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஆண்டி செப்டிக் விளைவுகளைக் கொண்டுள்ளது.
கற்கும் ஆற்றலை வளர்க்க லவங்கப்பட்டை உதவுகிறது. அதனால் படிக்கும் மாணவர்கள் அதை தினம் பயன்படுத்தி வர வேண்டும் என்கிறார்கள் ரஷ்ய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். தேர்வுகளில் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற பால் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் இலவங்க தூள் கலந்து சாப்பிடலாம். இது தவிர சாலட், ஜூஸ், தயிர், காய்கறிகள் அல்லது சூப் ஆகியவற்றிலும் சேர்த்துக் கொள்ளலாம்.
டைப்2 வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது லவங்கப்பட்டை. பல ஆண்டுகளாக ஆய்வு நடத்திய கலிபோர்னியா பல்கலைக்கழக மற்றும் அமெரிக்கா விவசாய துறை ஆராய்ச்சியாளர்கள், லவங்க பட்டை உணவுகளில் உள்ள குளுக்கோஸ்யை அதிகளவு சக்தியாக மாற்றும் தன்மை உடையது என்கிறார்கள்.
லவங்கப்பட்டையை தூள் செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் தேன் 2 ஸ்பூன் கலந்து வாய் கொப்பளித்து வர ஈறு, பற்களுக்கும் இடையே உள்ள கிருமிகளை அழிக்கும். இதனால் பல் சொத்தை மற்றும் ஈறுகளில் ஏற்படும் சிதைவு ஏற்படாமல் தடுக்க முடியும்.
லவங்கப்பட்டை பொடி100 கிராம், ஓமம் பொடி 100 கிராம் கலந்து ஒரு ஸ்பூன் வெந்நீரில் கலந்து குடித்தால் தலைவலி, வாயு கோளாறுகள் சரியாகும்.
வயிறு உப்புசம் குறைய காலையிலும் மாலையிலும் அரை ஸ்பூன் பட்டை பொடியை சூடான நீரில் போட்டு ஆறியதும் குடிக்க வேண்டும். தொந்தி குறைய எளிய வழி உங்கள் அன்றாட உணவில் லவங்கப்பட்டையை சேர்த்து கொள்வது தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். லவங்கப்பட்டையை பொடி செய்து நீங்கள் குடிக்கும் காபி அல்லது டீ யில் கலந்து குடித்தால் போதும் நாளடைவில் தொந்தி குறையும். ஒரு நாளைக்கு 4 கிராம் லவங்கப்பட்டை பொடி சாப்பிட 5 சதவீதம் தொப்பை குறையும்.
இதை தொடர்ந்து உட்கொள்வது காசநோய் (TB) நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
வயிற்றில் வரக்கூடிய அல்சரை குணப்படுத்த லவங்கப்பட்டை மிகவும் உதவியாக இருக்கும். வயிற்றுப்புண்கள், நீண்ட நாள் குடல் புண் அவதி, அஜீரண கோளாறு, வாய்வுத்தொல்லை போன்ற பல பிரச்சனைகளுக்கும் இந்த லவங்கபட்டை உதவியாக இருக்கும். இதனை அவ்வப்போது கொஞ்சம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே இது மாதிரியான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மேலும், அதிக ஆன்டி-ஆக்ஸிடண்ட் சத்து கொண்ட லவங்கப்பட்டை, உடலில் சேரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டது.
எனினும், லவங்கப் பட்டை அதிக சூடு மற்றும் காரத்தன்மை கொண்டது என்பதையும், இதை மிக அதிகமாக எடுத்துக் கொண்டால் பின்விளைவுகள் ஏற்படும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.