குளிரில் கை கால்கள் மட்டும் ஐஸ் போல் சில்லென்று ஆவது ஏன்? மறைந்திருக்கும் காரணம்!

சாதாரண குளிர்கால எதிர்வினை முதல் ரத்த ஓட்டப் பிரச்சனைகள் வரை கவனிக்க வேண்டிய மருத்துவ எச்சரிக்கைகள்.
Cold hands and feet | குளிர்ந்த கை கால்கள்
Cold hands and feet | குளிர்ந்த கை கால்கள்Image Credit: ChatGPT
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

குளிர்காலத்தில் கை கால்கள் மட்டும் ஐஸ் போல் ஜில்லென்று ஆவதற்கு உடல் தன் முக்கிய உறுப்புகளின் வெப்பத்தைத் தக்கவைக்க ரத்த நாளங்களைச் சுருக்குவதே முதன்மைக் காரணமாகும். வெப்பநிலை குறையும் பொழுது இதயம், மூளை மற்றும் நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளின் வெப்பத்தை தக்க வைக்க கை மற்றும் கால்களுக்குச் செல்லும் ரத்த நாளங்களைச் சுருக்குவதால் அவை ஐஸ் போல் சில்லென்று ஆகின்றன. இது குளிருக்கு எதிரான உடலின் இயல்பான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

கை கால்கள் ஜில்லென்று ஆவதற்கான காரணங்கள்:

இயற்கையான உடல் எதிர்வினை:

குளிரிலிருந்து உடலைப் பாதுகாக்கத் தோலுக்கு அடியில் உள்ள சிறிய ரத்த நாளங்கள் சுருங்குகின்றன. இதனால் உடலின் மையப் பகுதியிலிருந்து தொலைவில் உள்ள கை, கால் விரல்களுக்குச் செல்லும் வெதுவெதுப்பான ரத்தத்தின் அளவு குறைந்து அவை குளிர்ச்சி அடைகின்றன.

ரத்த சோகை:

உடலில் இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி12 குறையும்போது திசுக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் சென்றடைவது பாதிக்கப்படுகிறது. இது கை, கால்களில் தொடர்ச்சியான குளிர்ச்சியையும் உடல் சோர்வையும் ஏற்படுத்தும்.

தைராய்டு குறைபாடு (Hypothyroidism):

தைராய்டு ஹார்மோன் குறைவாகச் சுரக்கும் போது உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism) மெதுவாகிறது. இதனால் உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யும் திறன் குறைந்து கை, கால்கள் அதிகக் குளிரை உணர்கின்றன.

ரேனாட் நிகழ்வு (Raynaud's Phenomenon):

குளிர் அல்லது மன அழுத்தத்தின் போது கை கால் விரல்களில் உள்ள ரத்த நாளங்கள் வழக்கத்தை விட மிக அதிகமாகச் சுருங்கும் ஒரு நிலையாகும். இதனால் விரல்கள் வெளிறிப் போகவோ அல்லது நீல நிறமாக மாறவோ கூடும்.

நீரிழிவு மற்றும் ரத்த ஓட்டப் பிரச்சனைகள்:

கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் அல்லது புற தமனி நோய் (Peripheral Artery Disease) உள்ளவர்களுக்கு ரத்த நாளங்கள் குறுகியோ அல்லது நரம்புகள் பாதிக்கப்பட்டோ இருக்கும். இது கை, கால்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்கும்.

மன அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை:

அதிகப்படியான பதற்றம், புகைபிடித்தல் மற்றும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருப்பது ஆகியவையும் ரத்த நாளங்களைச் சுருக்கி கை கால்களைக் குளிரச் செய்யும்.

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

சாதாரண குளிர்கால மாற்றமாக இருந்தால் கையுறைகள், காலுறைகள் அணிவது மற்றும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் இதனைச் சரி செய்து விடலாம். வெதுவெதுப்பான அறையில் இருக்கும் போதும் அல்லது சாக்ஸ், கையுறைகள் அணிந்த பிறகும் கை, கால்கள் தொடர்ந்து சில்லென்று இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

Cold feet | குளிர்ந்த பாதம்
Cold feet | குளிர்ந்த பாதம்

நிற மாற்றம்:

கை அல்லது கால் விரல்கள் வெளிறிப் போதல், நீலம் அல்லது ஊதா நிறமாக மாறுதல் என்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம்.

உணர்வின்மை மற்றும் வலி:

குளிர்ச்சியுடன் சேர்ந்து விரல்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு, மரத்துப் போகுதல் அல்லது கடுமையான வலி ஏற்படுதல் இருந்தால்.

ஆறாத புண்கள்:

விரல் நுனிகளிலோ அல்லது பாதங்களிலோ காயங்கள் அல்லது புண்கள் ஏற்பட்டு அவை ஆறுவதற்கு நீண்ட நாட்களானால்.

ஒரு பக்க பாதிப்பு:

இரண்டு கை அல்லது கால்களும் இல்லாமல் ஏதேனும் ஒரு கை அல்லது ஒரு கால் மட்டும் திடீரென மிகவும் குளிர்ச்சியாகவும், வலி மிகுந்ததாகவும் மாறினால் இதற்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையாக இருக்கலாம். எனவே உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
நடக்கும் போது முழங்கால் வலிக்கிறதா? அலட்சியம் வேண்டாம்.. 5 முக்கிய காரணங்கள் இதோ!
Cold hands and feet | குளிர்ந்த கை கால்கள்

பிற உடல் அறிகுறிகள்:

கை, கால் குளிர்ச்சியுடன் சேர்ந்து அதிகப்படியான சோர்வு, மூச்சுத் திணறல், தலைசுற்றல் அல்லது காரணம் இன்றி உடல் எடை கூடுதல் போன்றவை இருந்தால் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம்.

வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய தீர்வுகள்:

சாதாரண குளிரால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க கதகதப்பான கம்பளி ஆடைகள், சாக்ஸ் மற்றும் கையுறைகளை அணிந்து கை கால்களை மூடி வைக்கலாம்.

ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் அவ்வப்பொழுது எழுந்து நடப்பது, கைவிரல்களை மடக்கி நீட்டுவது, கால் விரல்களை அசைத்து ஆட்டுவது போன்றவை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

ஜில்லென்று இருக்கும் கை கால்களை நேரடியாக நெருப்பு அல்லது அதிக சூடான ஹீட்டரில் காட்டுவதைத் தவிர்க்கவும். இது சருமத்தில் தீக்காயங்களை ஏற்படுத்தலாம். எனவே வெதுவெதுப்பான (சூடான அல்ல) பாதக் குளியல் உடனடி நிவாரணம் தரும்.

யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம் போன்ற பயிற்சிகள் ரத்தநாள சுருக்கத்தைத் தூண்டும் மன அழுத்த எதிர்வினையை கட்டுப்படுத்த உதவும். 

இதையும் படியுங்கள்:
தினமும் காலையில் மலம் கழிக்க சிரமப்படுகிறீர்களா? 5 காரணங்களும் மருத்துவர் ஆலோசனையும்!
Cold hands and feet | குளிர்ந்த கை கால்கள்

Reference: