

மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது 5 காரணங்களும்? இயற்கை உபாதையை சிரமம் இல்லாமல் கழித்து, சுறுசுறுப்புடன் இயங்க மருத்துவர் கூறும் 5 ஆலோசனைகளும்!
குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டிபடைப்பது தினமும் காலையில் மலம் கழிக்கச் சிரமப்படுவது (மலச்சிக்கல்/Constipation) தான். இது இன்றைய காலத்தில் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாகிவிட்டது. இது அன்றாடச் செயல்பாடுகளில் சோர்வையும், உடல் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.
கிராமத்தில் ஒருவர் முகத்தை பார்த்து விட்டே மலச்சிக்கல் வந்தவர் முகம் மாதிரி இருக்கிறது என்று கூறுவார்கள். அவர்களிடம் சென்று விசாரித்தால் அதற்கான உண்மை விளங்கும். அப்படி ஒரு மனிதனுக்கு பணச்சிக்கலை விட பெருஞ்சிக்கலை உண்டாக்குவது இந்த மலச்சிக்கல் தான்.
அந்த மலச்சிக்கல் ஏன் உண்டாகிறது? என்பதற்கான ஐந்து முக்கியக் காரணங்கள் மற்றும் அதைக் கையாள்வதற்காக மருத்துவர் கூறும் ஆலோசனைகள் பற்றி இப்பதிவில் காண்போம்:
மலச்சிக்கலுக்கான 5 முக்கியக் காரணங்கள்:
நார்ச்சத்து பற்றாக்குறை:
தொடர்ந்த, இட்லி தோசைக்கு பொடி, சட்னி மட்டும் தொட்டு சாப்பிட்டால் மலச்சிக்கல் வருவதை கவனிக்கலாம். தயிர்சாதம், ரசம் மற்றும் சித்ரா அன்னம் வகைகளுக்கு காய்கறிகளை தவிர்த்து மிக்சர், காராசேவ், முறுக்கு, சிப்ஸ் போன்ற வகைகளை தொட்டுக் கொண்டு சாப்பிட்டாலும் மலச்சிக்கல் வருவதை அனைவரும் அறிவர். குறிப்பாக குழந்தைகள் இதனால் பெரும் துயர் உறுவது உண்டு.
காரணம் நாம் உட்கொள்ளும் உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் குறைவாக இருந்தால், மலத்தின் அளவு குறைந்துவிடும். இதனால் மலம் குடலில் கடினமாகி, வெளியேறுவதில் சிரமம் ஏற்படும்.
நீர்ப்பற்றாக்குறை (Dehydration):
வீட்டை விட்டு வெளியில் சென்றாலும் பயணங்களிலோ பள்ளி மற்றும் மால் வகைகளுக்கு செல்லும் பொழுதும் அதிகமானோர் நீர் அருந்துவதை குறைத்து விடுவதை காணலாம். காரணம் நீர் அருந்தினால் சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதற்கு போதிய கழிப்பிட வசதிகள் ஆங்காங்கே இல்லாதது ஒரு பெரிய காரணம். அப்படியே இருந்தாலும் அதில் துப்புரவாக இருக்குமோ இருக்காதோ என்று நினைத்துக் கொண்டு சிறுநீரை அடக்கி வைப்பது பெரும்தொல்லையாக மாறிவிடுகிறது. மேலும் வீட்டில் தாகமாக இருக்கும் பொழுது மட்டும் தண்ணீர் அருந்தி விட்டு தாகம் இல்லாத போது அதை மறந்து விடுவதும், குளிர் மழை காலங்களில் அதிகம் குடிக்காமல் தவிர்ப்பது போன்ற காரணங்களால் உடலில் நீரின் அளவு குறையும் போது, பெருங்குடல் (Colon) மலத்தில் உள்ள தண்ணீரை உறிஞ்சிவிடுகிறது. இதன் காரணமாக மலம் மிகக் கடினமாகி (Hard Stools), வெளியேறுவது வேதனையானதாக மாறிவிடும்.
உடற்பயச்சியின்மை மற்றும் செயலற்ற வாழ்க்கைமுறை:
இப்பொழுதெல்லாம் பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் கணினி, மடிக்கணினி வைத்துக் கொண்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பாமல் நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது அல்லது உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது குடலின் இயற்கையான இயக்கத்தை (Peristalsis) மெதுவாக்கிவிடுவதைக் காண முடிகிறது.
மூளை நன்றாக உழைத்தாலும், உடம்பிற்கு வேண்டிய பயிற்சியை தந்தால் தான் மலச்சிக்கல் வருவதை தவிர்க்க முடியும். மேலும் சரியான நேரத்திற்கு உணவை சாப்பிடாமல் இரவில் காலம் தாழ்த்தி சாப்பிடுவது, காலை உணவை தவிர்ப்பது, மதிய உணவையும் வேலை நிமித்தமாக சீக்கிரம் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் அரைகுறையாக சாப்பிடுவது அல்லது நொறுக்குத் தீனியோடு நிறுத்திக் கொள்வது போன்ற காரணங்களாலும் மலச்சிக்கல் ஏற்படுவதும் உண்டு. இதனால் உணவு செரிமானம் தாமதமடைந்து மலச்சிக்கல் உண்டாகிறது.
மலத்தை அடக்கி வைத்தல்:
மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் வரும்போது விருந்தினர் வந்தாலோ, ஆட்டோ, வேன், டாக்ஸி போன்ற வாகனங்கள் வெளியில் நம்மை அழைத்துச் செல்ல வாசலில் வந்து நிற்பதாலோ கழிப்பறை செல்வதை தவிர்ப்பது, அவசரமான வேலைகள் இந்த வேலையை முடித்து விட்டு போகலாம் என்று நினைத்து தள்ளிப் போடுவது அல்லது அவகாசமின்மை காரணமாக மலம் கழிக்கும் உணர்வைத் தடுத்து நிறுத்துவதும் மூளைக்கும் குடலுக்கும் உள்ள இயற்கையான தொடர்பைப் பாதிக்கிறது. இதனால் நாளடைவில் குடல் உணர்விழந்து, மலம் கழிக்கும் உந்துதல் குறைந்துவிடும். அப்பொழுது மலம் கழிக்க சிரமப்படுவதை உணர முடியும்.
மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை:
பொதுவாக நாம் இரவில் தூங்க செல்லும் பொழுது தான் அன்றைக்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அலை அலையாக நம் மனதில் உருவெடுக்கும். நடந்து முடிந்து விட்ட ஏதாவது ஒரு நிகழ்வை நினைத்து மனதை வருத்திக் கொள்வது, எந்த ஒரு செயலுக்கும் சரியான தீர்வை எடுக்க முடியாமல் தவிப்பது, இந்த நேரத்துக்குள் இந்த வேலையை முடித்து விட வேண்டும் என்று திட்டமிட்டு அது நடக்காத போது மனது சஞ்சலப்படுவது போன்ற காரணங்களால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் முறையற்ற தூக்கம் ஆகியவை நமது நரம்பு மண்டலத்தைப் பாதித்துச் செரிமான மண்டலத்தின் இயக்கத்தைக் குழப்பிவிடும். இதுவும் மலச்சிக்கலுக்கு ஒரு முக்கிய மறைமுகக் காரணமாகும்.
இந்த மலச்சிக்கல் பிரச்சினையை சரிப்படுத்துவதற்காக மருத்துவர் உமா வெங்கட் MBBS, MD, Pathology கூறும் ஆலோசனைகள் இதோ:
மூன்று நாட்களுக்கு மேல் ஒருவர் மலம் கழிக்காமல் இருந்தாலோ அப்படியே கழித்தாலும் கஷ்டப்பட்டு கழிப்பது, இறுகிய நிலையில் மலம் வெளியேறுவது போன்றவற்றைத் தான் கடுமையான மலச்சிக்கல் என்கிறார் மருத்துவர் உமா வெங்கட் அவர்கள். அதற்கு தீர்வாக நாம் செய்ய வேண்டியவை.
நார்ச்சத்து நிறைந்த உணவு முறை: காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுங்கள். இரவு உணவை எட்டு மணிக்குள் முடித்து விடுங்கள். உங்கள் அன்றாட உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், கீரைகள், பப்பாளி, கொய்யா போன்ற பழங்கள் மற்றும் பாரம்பரிய தானியங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்.
போதுமான அளவு நீர் அருந்துதல்: நாள் முழுவதும் குறைந்தபட்சம் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீர் குடிப்பதும் குடல் இயக்கத்தைத் தூண்ட உதவும். அடிக்கடி மோர் குடிப்பது உணவில் தயிர் சேர்த்துக் கொள்வது மலச்சிக்கலை போக்கும். கோடை குளிர் காலத்துக்கு ஏற்ப ஜூஸ், சூப், ரசம் வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
உடற்பயிற்சி: தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி (Walking), யோகா அல்லது எளிய உடற்பயிற்சிகளைச் செய்வது குடலின் அசைவுகளைத் துரிதப்படுத்தும். வெளியில் நடக்க நேரமில்லை என்பவர்கள் மொட்டை மாடியில் நடக்கலாம். சமைக்கும் பொழுது அந்த அறையிலேயே நிற்கும் நேரத்தில் சுற்றி நடக்கலாம். தண்ணீர் குடத்தை தூரமாக வைத்துக் கொண்டு அதை குடிப்பதற்காக சிறிது தூரம் நடக்கலாம். மாடிப்படி ஏறி இறங்கலாம். ஸ்கிப்பிங் விளையாடலாம். நீந்தலாம். இவற்றில் எது முடியுமோ அதை செய்யுங்கள். இவை மலச்சிக்கலை தவிர்க்கும் என்று அறிவுறுத்துகிறார்.
மனப்பதற்றம் இல்லாதிருத்தல்:
எப்பொழுதும் டென்ஷன் டென்ஷன் என்று கூறுபவர்கள், தனக்கு பிடித்த கைத்தொழில்களை கட்டாயமாக செய்யுங்கள். இளமையில் செய்து விட்டுப் போன தொழில்களை கையில் எடுங்கள். அதில் மனதை செலுத்துங்கள் அப்பொழுது மனப்பதற்றம் குறையும். மனம் லேசாக இருந்தாலே அந்தந்த நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகள் சிரமப்படாமல் முடிக்க முடியும். இதனால் மனம் லேசாகும். மலச்சிக்கல் எளிதாகும் என்கிறார்.
சுய மருத்துதைத் தவிர்த்தல்:
மலச்சிக்கல் வந்துவிட்டால் அவரவரும் அவரவருக்கு தெரிந்த கை வைத்திய முறைகளை கையாண்டு அதில் தீர்வு வராத பொழுது, மருத்துவரிடம் சென்றால் நேரமும், நிறைய செலவுமாகும் என்று கடைகளில் விற்கும் மலமிளக்கி மருந்துகளை (Over-the-counter laxatives) மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தொடர்ந்து உட்கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். இது குடலின் இயற்கையான இயங்குதிறனைப் பாதித்துவிடும். ஆதலால் எக்காரணத்தை முன்னிட்டும் சுய மருத்துவம் வேண்டவே வேண்டாம் என்கிறார் டாக்டர்.
இந்த எளிய முறைகளை பின்பற்றினால் மலச்சிக்கல் இல்லாமல் உடல் ஆரோக்கியத்தைப் பேணலாம் என்பது டாக்டர் உமா வெங்கட் அவர்களின் அறிவுரை. அதைப் பின்பற்றி நலம் வாழ்வோமாக!