
கோடையில், அதிக வெப்பம், வியர்வை, நீர் இழப்பு, கொசுக்கள் மற்றும் மோசமான சுகாதாரம் காரணமாக வயிற்றுப்போக்கு, டைபாய்டு, நீரிழப்பு, டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சரும அரிப்பு, சிவந்து போகுதல், சிரங்கு, கொப்புளங்கள், அதிக வெயில் காரணமாக பசியின்மை மற்றும் தலைவலி போன்றவை ஏற்படும்.
வைரஸ் நோய்கள்:
a) சின்னம்மை கோடை காலத்தில் வெரிசெல்லா ஜோஸ்டர் வைரசால் ஏற்படும். காய்ச்சல், சரும அரிப்பு, தலைவலி, பசியின்மை ஆகியவற்றுடன் சிறிய சிவப்பு நிற தடிப்புகள் ஏற்பட்டு கொப்புளங்களாக மாறி பின்னர் சருமத்தில் அடையாளங்களை விட்டுச் செல்லும்.
b) தட்டம்மை பாராமிக்சோ வைரசால் ஏற்படுகிறது. இது பொதுவாக தொண்டையின் பின்புறத்தில் உள்ள சளி சுரப்பியை பாதிக்கும். இருமல், தொண்டை வலி, காய்ச்சல், கண்கள் சிவந்து போகுதல், பின்பு உடலில் தட்டம்மை சொறி மற்றும் வெள்ளை புள்ளிகள் தோன்றும்.
c) மஞ்சள் காமாலை நீரினால் பரவும். அசுத்தமான நீர் அல்லது உணவினால் ஹெபடைடிஸ் ஏ வின் விளைவு இது. சரியான மருத்துவ சிகிச்சை இல்லையெனில் கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும்.
d) டைபாய்டு காய்ச்சல் சால்மோனெல்லா டைஃபி என்ற பாக்டீரியாவால் நீர் மூலம் பரவும். அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரால் பரவுகிறது. அதிக காய்ச்சல், வயிற்று வலி, பசியின்மை போன்றவை அறிகுறிகளாகும்.
e) வயிற்றுப்போக்கு, கொசுக்களால் பரவும் நோய்கள், காலரா போன்றவை தண்ணீரால் பரவும். இவற்றினை முறையான சுகாதார நடைமுறைகள் மூலம் தடுக்கலாம். கொதிக்க வைத்த நீரை பருகுவது பல நோய்களை வராமல் தடுக்கும்.
சரும பாதிப்புகள்:
அதிக நேரம் சூரிய ஒளியில் இருந்தால் சருமத்தில் அரிப்பு, வறட்சி, சிவந்து போகுதல் மற்றும் வெடிப்புகள் ஏற்படலாம். வியர்க்குரு வேனல் கட்டிகள் போன்ற சரும பாதிப்புகளும் ஏற்படும். தவிர சன்பர்ன், ரேஷஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஏற்படும்.
சன் ஸ்ட்ரோக்:
வெயில் காரணமாக உடலில் உள்ள நீர்ச்சத்து, உப்புச்சத்து ஆகியவை வெகுவாக குறைந்து விடும்பொழுது மூர்ச்சை ஏற்பட கூடும்.
தீர்வுகள்:
a) இதனை தவிர்க்க நீர் ஏற்றத்துடன் இருக்கவும். நிறைய தண்ணீர், மோர், எலுமிச்சை நீர் குடிப்பதன் மூலம் நம்மை நீரேற்றமுடன் வைத்துக் கொள்ளலாம்.
b) கோடை காலத்தில் கடினமான உடல் உழைப்பை தவிர்க்கவும். அதிக உடற்பயிற்சிகள் சோர்வைத் தரும்.
c) பூஞ்சை தொற்றுக்களை தவிர்க்க குளிர்ந்த நீரில் குளிப்பதும், சருமத்தில் கற்றாழை ஜெல் அல்லது மாய்சரைசரை பயன்படுத்தவும்.
d) சமைக்கப்படாத உணவுகள், தெரு உணவு மற்றும் அதிகம் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். குப்பை உணவுகளுக்கு மாற்றாக புதிய பழங்கள், காய்கறிகள், வெள்ளரிப்பிஞ்சுகள், தர்பூசணி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
e) மதியம் அதிகம் வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ளலாம். கண் எரிச்சல், கண் வலி தொற்று பரவுவதை தவிர்க்க கைகளை சுத்தம் செய்தபின் கண்களை தொடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
f) சரும பிரச்சனைகள் வராதிருக்க வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுது சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம். வெயிலில் வெளியே செல்ல நேர்ந்தால் குடை அல்லது தொப்பியுடன் குளிர் கண்ணாடியும் அணிந்து செல்வது நல்லது.
g) தளர்வான ஆடைகளை அணிவதும், அடர் நிறங்கள் அதிக வெப்பத்தை உறிஞ்சும் என்பதால் வெளிர் நிறங்களை அணிவதும், இறுக்கமாக உடை அணிவதை தவிர்ப்பதும் நல்லது.
h) கோடை காலம் என்பது பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் செழித்து வளரும் காலமாகும். எனவே இந்த சமயத்தில் தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் நல்லது. தட்டம்மை, சளி போன்றவற்றிற்கு எதிரான தடுப்பூசி போடுவதும் சிறப்பு.