

நம் உடலுக்கு உருவம் கொடுத்து, செய்யும் செயல்கள் அனைத்திற்கும் உறுதுணையாய் இருப்பது நம் எலும்புகள் எனலாம். எலும்புகளின் உள்ளிருக்கும் மஜ்ஜை என்ற பொருளின் அடர்த்திக்கு புரோட்டீன், கால்சியம், செலீனியம் மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அவசியம். ஐம்பது வயதிற்கு மேல் எலும்புகள் தேய்மானமடையவும், மஜ்ஜையின் அடர்த்தி குறையவும் வாய்ப்பு உண்டாகும். இக்குறைபாடுகளைத் தவிர்க்க, எலும்புகளின் ஆரோக்கியம் காக்க உதவும் உணவுப் பொருட்களை நம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும்படி ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அவர்கள் பரிந்துரைக்கும் ஓர் உன்னதமான உணவு காட்டேஜ் சீஸ். இதில் வைட்டமின் D, வைட்டமின் K, புரோட்டீன், கால்சியம், செலீனியம் மற்றும் மக்னீசியம் போன்ற அனைத்து சத்துக்களும் அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ஐம்பது வயதைக் கடந்தவர்களின் உடலில், குறிப்பாக மெனோபாஸை கடந்துகொண்டிருக்கும் பெண்களின் உடலில் எலும்புகளின் தேய்மானம் விரைவாக நடைபெறும் செயலாக உள்ளது.
இந்தக் காலக் கட்டத்தில், பெண்களின் எலும்பு மஜ்ஜையின் அடர்த்தி சுமார் இருபது சதவிகிதம் குறைவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் பின்விளைவாக ஆஸ்டியோபீனியா மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகும் அபாயம் உருவாகிறது.
மேலே குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயலாற்றி எலும்புகள் மற்றும் தசைகளின் உருவாக்கத்திற்கும் வலுவிற்கும் உதவி புரிகின்றன. இந்த அத்தியாவசிய சத்துக்கள் அடங்கிய பல வகையான உணவுகளுக்கிடையே காட்டேஜ் சீஸ் தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது. காட்டேஜ் சீஸில் அடங்கியுள்ள அதிகளவு கால்சியம், எலும்புத் திசுக்களை உருவாக்க உதவும் மூலப்பொருளாக செயல்படுகிறது. அதிகளவு புரோட்டீனானது ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள எலும்புகளின் அமைப்பு சேதமடையாமல் பாதுகாப்பதற்கு சிறந்த முறையில் பயன்படுகிறது.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, உடலின் ஒட்டுமொத்த நலனுக்கும் பயன்படக்கூடியது காட்டேஜ் சீஸ். இதிலுள்ள அதிகளவு புரோட்டீன் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவும். சில வகையான காட்டேஜ் சீஸ்களில் ப்ரோபயோட்டிக்குகள் அடங்கி இருப்பதால் அவை இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வயிற்றிலுள்ள வீக்கங்கள் குறையவும், மலச்சிக்கல் பிரச்சைனையை நீங்கவும் உதவி புரிகின்றன. இது குறைந்த அளவு கொழுப்புடன், கலோரி அளவு குறைவானதாகவும் இருப்பதால் எடை குறைப்பிற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
இவ்வாறு பல வகையான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள காட்டேஜ் சீஸை நீங்களும், சாலட், சூப், லசங்கா(Lasagna)போன்ற உங்கள் தினசரி உணவுகளுடன் சேர்த்து உட்கொண்டு பயன் பெறலாமே.