குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கிறீர்களா? பெற்றோர்கள் செய்யக்கூடாத ஆபத்தான தவறுகள்!

இருமல் வந்தவுடன் மருந்து வாங்குவது ஏன் தவறு? 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கவனிக்க வேண்டியவை குறித்து விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் க. இராவணன் M.D.
Cough Medicine for Kids | இருமல் மருந்து
Cough Medicine for Kids | இருமல் மருந்து
Dr K. Ravanan M.D, Paediatrics

டாக்டர். க. இராவணன் அவர்கள் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் M.B.B.S. பட்டப்படிப்பினையும் சென்னை மருத்துவக் கல்லூரியில் குழந்தை நல மருத்துவத்தில் M.D (Paed) உயர் பட்டப்படிப்பினையும் படித்தவர். குழந்தைகள் நல மருத்துவத்தில் 28 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். தற்போது அரக்கோணத்தில் Dr. RAV’s Child Clinic என்ற பெயரில் குழந்தைகளுக்கான மருத்துவமனையினை நடத்தி வருகிறார். Indian Medical Association, Indian Academy of Pediatrics & Infectious Disease Chapter IAP முதலான அமைப்புகளின் வாழ்நாள் உறுப்பினராவார். தமிழ் இலக்கியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நடைப்பெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெற்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கரங்களால் முதல் பரிசினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய நூல்கள் ‘குழந்தை நலம்’ மற்றும் 'ஒரு குழந்தை நல மருத்துவரின் டைரி குறிப்புகள்' ஆகும்.

Updated on: 

குழந்தைக்குத் தொடர்ந்து இருமல் வந்தால், உடனே மருந்துக் கடைக்குச் சென்று இருமல் மருந்து வாங்குவது பல குடும்பங்களில் வழக்கமாக உள்ளது. ஆனால் இருமல் என்பது ஒரு நோய் மட்டுமல்ல, சுவாசப் பாதையில் உள்ள சளியையும் எரிச்சலூட்டும் பொருட்களையும் வெளியேற்ற உடல் செய்யும் இயற்கையான பாதுகாப்புச் செயலுமாகும். எனவே இருமலை அடக்குவதற்கு முன், அதன் காரணத்தைப் புரிந்துகொள்வதே முக்கியம்.

Q

எல்லா இருமலுக்கும் மருந்து தேவையா?

A

இல்லை. சாதாரணச் சளியால் ஏற்படும் இருமல் பெரும்பாலும் தானாகவே சில நாட்களில் படிப்படியாகக் குறையும். குழந்தை நன்றாகச் சாப்பிட்டு, விளையாடி, இயல்பாக மூச்சுவிட்டால் ஓய்வு, போதுமான திரவங்கள் போன்றவை உதவலாம். ஆனால் இருமல் தொடர்ந்து நீடித்தால், இரவில் அதிகரித்தால் அல்லது அடிக்கடி மூச்சிரைப்புடன் ஏற்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்வது அவசியம்.

Q

இருமல் மருந்துகள் எத்தனை வகைப்படும்?

A

இருமல் மருந்துகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல.

இருமலை அடக்கும் மருந்துகள்: சில வகை இருமலைக் குறைக்க உதவும். குழந்தைகளுக்கு எல்லா மருந்துகளும் பாதுகாப்பானவை அல்ல.

சளி வெளியேற உதவும் மருந்துகள்: சளியுடன் வரும் இருமலுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் இவை தேவையில்லை.

சளியை இளக்கும் மருந்துகள்: அடர்த்தியான சளியை இளக்க உதவுவதாகப் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

ஒவ்வாமைக்கான மருந்துகள்: தும்மல், மூக்கில் நீர் வடிதல் போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் இருக்கும்போது சிலருக்கு உதவலாம்.

மூக்கடைப்புக்கான மருந்துகள்: மூக்கடைப்பைக் குறைக்கப் பயன்படும். சிறு குழந்தைகளுக்கு இவற்றைத் தாங்களாகவே கொடுக்கக் கூடாது.

Cough Medicine for Kids | இருமல் மருந்து
Cough Medicine for Kids | இருமல் மருந்து
Q

எந்த வயதுக் குழந்தைகளுக்கு அதிக எச்சரிக்கை தேவை?

A

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின்றி இருமல், சளி மருந்துகளைக் கொடுக்க வேண்டாம். நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருந்துக் கடைகளில் தானாக வாங்கும் இருமல் மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். நான்கு முதல் ஆறு வயதுக்குள் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெரிய குழந்தைகளுக்கும் வயது, உடல் எடை, நோயின் காரணம் ஆகியவற்றைப் பொறுத்தே மருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

Q

மருந்து கொடுக்கும்போது செய்யக்கூடாத தவறுகள் என்ன?

A

பெரியவர்களுக்கான மருந்தைக் குறைந்த அளவில் கொடுக்காதீர்கள். ஒரே நேரத்தில் இரண்டு மருந்துகளைக் கொடுக்கும்போது அவற்றில் ஒரே மருந்துப் பொருள் மீண்டும் இடம்பெற்றுள்ளதா எனக் கவனியுங்கள். சமையல் கரண்டியால் அளக்காமல், மருந்துடன் வழங்கப்படும் அளவுக் கருவியைப் பயன்படுத்துங்கள். மருத்துவர் பரிந்துரையின்றி நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைக் கொடுக்காதீர்கள். எல்லா இருமலுக்கும் நுண்ணுயிர்க்கொல்லி தேவையில்லை.

இதையும் படியுங்கள்:
தாய்ப்பால் அதிகமாக சுரக்க என்ன சாப்பிட வேண்டும்? தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
Cough Medicine for Kids | இருமல் மருந்து
Q

வீட்டிலேயே குழந்தைக்கு எப்படி நிவாரணம் அளிக்கலாம்?

A

குழந்தைக்குப் போதுமான திரவ உணவை கொடுங்கள். மூக்கடைப்பு இருந்தால் குழந்தைகளுக்கான உப்புநீர்த் துளி மருந்தை பயன்படுத்தலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சிறிதளவு தேன்கொடுத்தால் இருமல் தொந்தரவைக் குறைக்க உதவும். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுக்கக் கூடாது. சூடான நீராவியை நேரடியாக முகத்தில் பிடிக்காதீர்கள், தீக்காயம் ஏற்படலாம்.

Q

எப்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்?

A

குழந்தைக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டால், நெஞ்சுப் பகுதி உள்வாங்கினால், உதடுகள் நீலமாக மாறினால், குடிக்க முடியாமல் போனால் அல்லது குழந்தை மிகுந்த சோர்வுடன் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது அவசியம். இருமல் தொடர்ந்து நீடித்தாலும், அதிகரித்தாலும் பரிசோதனை அவசியம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டும்போது செய்யக்கூடாத தவறுகள்!
Cough Medicine for Kids | இருமல் மருந்து

பெற்றோர்களே, இருமல் வந்தவுடன் மருந்து கொடுப்பது நல்லதல்ல. குழந்தையின் வயதை அறிந்து, இருமலின் காரணத்தைப் புரிந்து, பாதுகாப்பான மருந்தை தேர்ந்தெடுப்பதே உண்மையான அக்கறை.

logo
Kalki Online
kalkionline.com