

கறிவேப்பிலையை தாளித்து விட்டு, சாப்பிடும்பொழுது அதை அப்படியே தூர எடுத்து வைப்பவர்கள் உண்டு. கறிவேப்பிலையை எல்லாவற்றுக்கும் பயன்படுத்துவதால், 'வேப்பிலை கறிவேப்பிலை அது யாரோ நான் தானோ?' என்ற பாடல் வரிகள் கூட நமக்கு அதை நினைவுபடுத்துவது உண்டு. பூண்டு வாசனை பிடிக்காமல் அதை ஒதுக்கி வைப்பவர்களும் உண்டு. சீரகத்தின் சிறப்புகளை அறிந்தவர்கள் பெருஞ்சீரகத்தின் பெருமையை அறியாமல் இருப்பதும் உண்டு. இவற்றில் அடங்கி இருக்கும் மருத்துவத்தின் மகத்துவத்தை இப்பதிவில் காண்போம்.
பூண்டு:
பூண்டில் சிறிது எலுமிச்சைச் சாறு விட்டு அரைத்து இருவேளை சாப்பிட கீல்வாதம் குணமாகும். அரைக்கீரையோடு சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து புளி சேர்க்காமல் சமையல் செய்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். பூண்டு பல் ஒன்றை சுட்டு சிறிது சர்க்கரை சேர்த்து பாலில் இட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்தால் கபம் நீங்கும். பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து சாற்றை உள்நாக்கில் தடவ உள்நாக்கு வளர்ச்சி குறையும்.
பூண்டுச் சாறையும் இஞ்சிச் சாறையும் சம அளவு கலந்து காலை மாலை மூன்று நாட்கள் சாப்பிட, நெஞ்சுக்குத்து நீங்கும். பூண்டைப் பச்சையாகச் சாப்பிட வாத நோய் நீங்கும். பூண்டை பாலில் வேகவைத்த நசுக்கி முகப்பரு மீது தடவி வந்தால் பருக்கள் குணமாகும்.
பெருஞ்சீரகம்:
பெருஞ்சீரகத்தை சமையலில் சேர்த்தால் உணவில் சுவை அதிகரிக்கும். சாப்பிட்ட பின்பு இதனை வாயில் போட்டு மென்று சுவைத்தால் தனி மணமும் ருசியும் கிடைக்கும். இதனை டீயில் சேர்த்து பருகினால் அதிக சுவை கிடைக்கும். பெருஞ்சீரகத்தை உண்ணுகிறவருக்கு பசி அதிகரிக்கும். உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் சுவைத்தால் கண்பார்வை சக்தியும் அதிகமாகும். வாயுத் தொல்லை நீங்கும். லேசான அளவு சுடும் பாலில் பெருஞ்சீரகத்தை பொடி செய்து கலந்து தூங்கச் செல்வதற்கு முன்பு பருகினால் நினைவு சத்தி அதிகரிக்கும். காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது கொதிக்கும் நீரில் பெருஞ்சீரகத்தை இட்டு காய்ச்சி பருகினால் காய்ச்சலின் வேகம் குறையும்.
கறிவேப்பிலை:
கறிவேப்பிலையில் சாறு பிழிந்து அதனுடன் சம அளவுக்கு தேன் கலந்து தினமும் பருகினால் அஜீரணம் ஏற்படாது. இது மூலநோய் கொண்டவர்களுக்கும் நல்லது. இதனால் மலச்சிக்கல் நீங்கும். உணவின் ருசியும் அதிகரிக்கும். கறிவேப்பில்லையை அரைத்து ஒரு கப் சூடான பாலில் கலந்து குடித்தால் வாத நோய் மட்டுப்படும். உடல் வலி குணமடையும். கறிவேப்பிலை பேனை ஒழிக்கும் மருந்து. இவற்றை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலக்கிக் கொதிக்க வைத்து நுரையடங்கியதும் இறக்கி, அதில் இரண்டு துண்டு கற்பூரம் சேர்த்து தலையில் தேய்த்தால் பொடுகு, பேன், தலையில் ஏற்படும் சொறி, தலை முடி உதிர்வது குறையும். முடி நன்றாக வளரும்.
கறிவேப்பிலையை உணவில் சேர்த்தால் உணவு சீக்கிரமாக ஜீரணித்து விடும். அதோடு உணவில் இருக்கும் விஷத்தன்மையும் அது போக்கும். கறிவேப்பிலையை பாலில் வேக வைத்து அரைத்து கடிபட்ட இடத்தில் கட்ட வேண்டும். கருவேப்பிலை வெந்த பாலை குடிக்க வேண்டும். வயிற்று வலி, வாய்ப்புண் இருந்தால் கருவேப்பிலையை அரைத்து மோரில் கலக்கி குடிக்க வேண்டும். தினந்தோறும் 4 பேரீச்சம்பழத்துடன் சிறிது கருவேப்பிலை இலையையும் சேர்த்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.
இதர குறிப்புகள்:
பொன்னாங்கண்ணி கீரையுடன் துவரம் பருப்பும், மிளகும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் பெருத்த உடல் இளைக்கும்.
வெற்றிலைப் போடுவது வாதத்தைப் போக்கும்; சளியை நீக்கும். எலும்புகளை பலப்படுத்தும். ஜீரணத்தை பெருக்கும். வாய் நாற்றம் இருந்தால் வெற்றிலை பாக்குடன் ரோஜா இதழ்களை சேர்த்து போட்டுக் கொண்டால் நாற்றம் நீங்கி நலம் காணலாம்.
டீயில் சிறிதளவு சுக்குத்தூள், மிளகுத்தூள், ஏலத்தூள் கலந்து பருகினால் அதிக ருசி கிடைக்கும். அஜீரணக் கோளாறும் சீராகும்.
இதுபோல் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் ஆரோக்கியத்தை தெரிந்து கொண்டு அவற்றை முழுமையாக பயன்படுத்தி ஆரோக்கியம் காப்போமாக!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)