

இன்றைய டிஜிட்டல் உலகில் நாம் பெரும்பாலும் மொபைல் போன், கம்ப்யூட்டர் போன்ற திரைகளை அருகிலேயே பார்க்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். இந்த திரைகளின் பளிச்சென்ற வெளிச்சம் கண்களை பாதித்து விரைவில் தூக்கம் வராமல் செய்கிறது. தூக்கமின்மை காரணமாக மன அழுத்தம் ஏற்பட தொடங்குகிறது. தற்போது விரைவாக தூங்கவும் மன அழுத்தத்திற்கு ஒரு தீர்வாகவும் 'டார்க் ஷவர்' என்ற முறை பிரபலமாகி கொண்டு வருகிறது.
டார்க் ஷவர் என்றால் என்ன?
டார்க் ஷவர் என்பது அதன் பெயரிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருட்டான ஒரு அறையில் குளிப்பதற்கு பெயர்தான் டார்க் ஷவர். இது முற்றிலும் இருட்டு அறையில் ஒரு தியானம் போல, மிகவும் அமைதியான முறையில் நடைபெறுகிறது. தேவைப்படுபவர்கள் மட்டும் மங்கலான வெளிச்சம் கொண்ட விளக்குகளை பயன்படுத்திக்கொள்ளலாம். டார்க் ஷவர் முறையில் அதிக செலவுகள் எதுவும் கிடையாது. இது அறிவியல் ரீதியானது மற்றும் பாதுகாப்பானது.
இது ஒரு நவீன அறிவியல் போன்று நமக்கு தெரிந்தாலும், இது பாரம்பரிய தியானங்களில் ஒரு பகுதியாக தான் இருக்கிறது. பழங்காலத்தில் சித்தர்கள் மற்றும் முனிவர்கள், பொதுமக்கள் கூட சூரியன் மறைந்த மாலையில், இருள் சூழ்ந்த ஆறுகள் மற்றும் குளங்களில் குளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.
அந்த காலங்களில் விரைவில் படுத்தவுடன் தூங்கி விடுவார்கள். அதற்கு இன்றைய காலம் போல நவீன வசதிகள் இல்லாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம். யோகாவை பொறுத்தவரையில் குளியல் என்பது வெறும் உடலுக்கானது மட்டுமல்ல, அது ஆன்மாவையும் சுத்திகரிக்கும் ஒரு நடைமுறையாக உள்ளது.
அறிவியல் படி இது எவ்வாறு செயல்படுகிறது?
நமது உடல் உறக்கத்திற்கு செல்வதற்கு மெலடோனின் (Melatonin) என்ற ஹார்மோன் சுரப்பது மிகவும் அவசியமாகிறது. மிகவும் பிரகாசமான வெளிச்சம் இந்த ஹார்மோன் சுரப்பதை தடுத்து, தூக்கமின்மையை உருவாக்குகிறது.
இருட்டில் குளிக்கும் போது இயல்பாகவே உடலானது மெலடோனினை சுரக்கத் தொடங்குகிறது. இதனால் மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோல் ஹார்மோன்கள் உற்பத்தி குறைகிறது. வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கும் போது உடலின் வெப்பநிலை உயர்கிறது, குளித்தவுடன் உடலின் வெப்பநிலை வேகமாக குறைய தொடங்குகிறது. இந்த வெப்பநிலை மாற்றம் உடலை தூங்கச் செய்வதற்கு தயாராக்குகிறது.
டார்க் ஷவரின் நன்மைகள்:
குறைவான வெளிச்சத்தில் குளிக்கும் போது மனம் ஒரு வித அமைதியடைகிறது. அந்த அமைதி காது கேட்கும் திறன், சோப்பின் வாசனையை நுகரும் திறன், நீரின் வெப்பம், உடலின் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடு ஆகியவற்றை கூர்மையாக உணர்ந்து, ஒரு தியான நிலையை அடைகிறது. இதனால் ஆழ்ந்த உறக்கத்தை பெற முடிகிறது. அதனால், மனஅழுத்தம் குறைகிறது.
பாதுகாப்பான முறையில் பின்பற்றுவது எப்படி?
உங்கள் குளியலறை வழுக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இருட்டில் குளிப்பது முழுமையான பயனை தரும் என்றாலும் வயதானவர்கள் மற்றும் நடுத்தர வயது கொண்டவர்கள், முழு இருட்டில் குளிக்காமல் சிறிய நைட் லாம்ப் வெளிச்சத்தில் குளிக்கலாம், அல்லது மங்கலான ஒளியில் குளிக்கலாம். தண்ணீர், ஷாம்பு, சோப்பு ஆகியவற்றை கைக்கெட்டும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இருட்டில் பயம் கொண்டவர்கள் இதை தவிர்த்து விடுங்கள்.
ஆழ்ந்த உறக்கத்திற்கு பக்கவிளைவுகள் கொண்ட மருந்துகள் மாத்திரைகள் போன்றவற்றை எடுப்பதற்கு பதில், இது போன்ற பக்க விளைவுகள் அற்ற முறைகளையும் முயற்சித்து பார்க்கலாம். நீண்டகால தூக்கமின்மை பிரச்சினைகள் மற்றும் மன அழுத்த பிரச்சனையில் உள்ளவர்கள், இந்த முறையை பின்பற்றும் முன் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here