

இப்போ இருக்குற கிளைமேட் மாற்றத்தால் நம்ம ஊர்ல வழக்கம்போல டெங்கு காய்ச்சல் அச்சுறுத்த தொடங்கியிருக்கு. இந்த வருஷம் தமிழ்நாட்டில் ஜனவரி முதல் செப்டம்பர் பாதி வரைக்கும் 16,000க்கும் அதிகமான பேருக்கு டெங்கு பாதிப்பு வந்து, 9 பேர் உயிரிழந்திருக்காங்கன்னு அதிகாரப்பூர்வமான ரிப்போர்ட் சொல்லுது.
மழைக் காலம் ஆரம்பிச்சாலே கொசுக்கள் அதிகமா முட்டையிட்டுப் பெருகுறதுனால இந்தத் திடீர் உயர்வு ஏற்படுது. ஆனா, கடந்த வருஷங்களை விட இப்போ பரவல் கட்டுக்குள்ள தான் இருக்கு, மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்னு பொதுச் சுகாதாரத் துறை தெளிவுபடுத்தியிருக்காங்க.
இது தெரிஞ்சு எனக்கே ஒரு டவுட் வந்துருச்சி. ‘நாமே என்னதான் கரெக்டா இருந்தாலும், நம்மள சுத்தி எல்லாம் கரெக்டா இருக்கா?’. ஏன்னா கொஞ்ச நாளா இந்த நியூஸ் வைரலா போகுது, எனவே நாமும் கொஞ்சம் உஷாரா இருக்கணும், கூடுதலாக நம்மள சுத்தி இருக்கிறவங்களையும் உஷார் படுத்தனும் தோணுச்சு. அதுக்குதா சில தேவையான விஷயங்களை தேடி பார்த்து உங்களுக்கு சொல்றே, படிச்சு தெரிஞ்சுக்கோங்க!
டெங்குவோட முக்கிய அறிகுறிகள் என்ன?
திடீரென வர அதிக காய்ச்சல், கண் வலி, கடுமையான சோர்வு, வாந்தி மற்றும் உடம்பில் அலர்ஜி மாதிரி செவப்பா (Rash) ஏற்படுவதுதான் இதோட முதல் அறிகுறிகள். இந்த டெங்கு காய்ச்சலை 'எலும்பை உடைக்கும் காய்ச்சல்' (Break-bone fever) அப்படின்னும் சொல்லுவாங்க. ஏன்னா, இது வந்தா கை, கால் மூட்டுகளில் தாங்க முடியாத அளவுக்கு ஒரு நரக வேதனை கொடுக்கும். சில தீவிரமான கண்டிஷனில் பல் ஈறுகள் அல்லது மூக்கில் ரத்தக்கசிவு கூட வரும்.
சுத்தமான தண்ணிதான் இதோட பிறப்பிடமே!
நம்மில் பலர் சாக்கடைத் தண்ணியில தான் கொசு வளரும்னு நினைப்போம். ஆனா, டெங்குவை பரப்புற 'ஏடிஸ் எகிப்தி' (Aedes aegypti) கொசுக்கள் எப்போதுமே நம்ம வீட்டு பூந்தொட்டிகள், பழைய டயர்கள், மொட்டை மாடி தோட்டத்தில் தேங்கி இருக்குற சுத்தமான தண்ணியில்தான் முட்டையிடும். நாம வீட்டுக்குள்ள எவ்வளவு சுத்தமா வச்சிருந்தாலும், பொது இடங்கள், மார்க்கெட் மற்றும் ஆபீஸ்களில் தேங்குற தண்ணியால இந்தத் தொற்று நமக்கு ஈஸியா பரவிடும்.
பொது இடங்களில் எப்படி பாதுகாப்பா இருக்கிறது?
வெளியே கூட்டமான இடங்களுக்கு போகும்போது DEET அல்லது பிகாரிடின் (Picaridin) இருக்குற ஸ்பெஷல் ‘கொசுவை விரட்டும் கிரீம்களை’ உடம்புல தடவிக்கோங்க.
ஏடிஸ் கொசுக்கள் பொதுவா பகல் நேரங்களில் தான் அதிகம் கடிக்கும். அதனால, பகல்ல வெளியே போகும்போது கை, கால்களை முழுசா மூடுற டிரஸ் போட்டுக்கோங்க.
ஜன்னல்களில் கொசு வலை போடுறது, தூங்கும்போது கொசு வலை பயன்படுத்துறது எப்போதுமே நமக்கு ரொம்ப உதவும்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) என்ன சொல்றாங்க?
இது ஏதோ சும்மா சாதாரண காய்ச்சல் இல்ல. உலக சுகாதார நிறுவனம் தங்களோட அதிகாரப்பூர்வமான அறிக்கையிலே இதைத் தெளிவா சொல்லியிருக்காங்க:
'தற்போது உலகின் பாதி மக்கள் தொகை டெங்கு பாதிப்பு அபாயத்தில் உள்ளது. ஆண்டுதோறும் 100 முதல் 400 மில்லியன் வரையிலான தொற்றுகள் ஏற்படுகின்றன. இதற்கான நோய் தடுப்பு என்பது முழுமையாக கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதையே சார்ந்துள்ளது.'
நம்ம ஊர் சுகாதாரத்துறை அமைச்சர், 'பொதுமக்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து இந்த கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரணும்னு' கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்போதைக்கு 25,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நம்ம தெருக்களில் கொசு மருந்து அடிக்கிற பணியில் தீவிரமா இருக்காங்க. அரசும் மருத்துவர்களும் அவங்க கடமையைச் செஞ்சாலும், நம்ம வீட்டையும் சுற்றியிருக்கிற இடத்தையும் தண்ணி தேங்காம பாதுகாக்கிறது நம்ம கடமை தான். விழிப்புணர்வோடு இருப்போம், டெங்குவை விரட்டுவோம்!
Reference: