சருமத்தில் சிறிய கருப்புப் புள்ளி இருக்கிறதா? உண்ணிக் காய்ச்சல் எச்சரிக்கை!

தொடர் காய்ச்சலை உண்டாக்கும் 'ஸ்க்ரப் டைபஸ்' உண்ணித் தொற்று - பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்!
உண்ணிக் காய்ச்சல் | Scrub Typhus
உண்ணிக் காய்ச்சல் | Scrub Typhus
Updated on

'உண்ணி' காய்ச்சல் எனப்படும் ஸ்க்ரப் டைபஸும், குழந்தைகளும் – காய்ச்சலுக்குப் பின்னால் மறைந்திருக்கும் நோயை பற்றி விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் க. இராவணன் M.D.

Q

ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) என்றால் என்ன?

A

பல நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இருக்கும் குழந்தைகளில் கவனிக்க வேண்டிய முக்கியமான தொற்றுகளில் ஒன்று ஸ்க்ரப் டைபஸ். இது Orientia tsutsugamushi என்ற நுண்ணுயிரியால் ஏற்படும் நோய். இது சிகர் எனப்படும் மிகச்சிறிய உண்ணியின் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது.

Q

குழந்தைக்கு எப்படி தொற்று ஏற்படுகிறது?

A

புதர்கள், நீண்ட புற்கள், காடு சார்ந்த பகுதிகள், வயல்வெளி ஓரங்கள், தோட்டங்கள், பராமரிக்கப்படாத நிலங்கள் போன்ற இடங்களில் இந்த நுண்ணுயிரியைத் தாங்கிய சிறிய உண்ணிகள் காணப்படலாம். அவை கடிக்கும் போது தொற்று ஏற்படுகிறது. எனவே கிராமப்புறங்களில் விளையாடும் குழந்தைகள் மட்டுமல்லாமல், புதர் நிறைந்த பகுதிகளுக்குச் செல்லும் எந்தக் குழந்தைக்கும் இந்த நோய் ஏற்படலாம்.

Q

தொடர்ந்து காய்ச்சல் – மிக முக்கியமான அறிகுறியா?

A

திடீரெனக் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தசைவலி, சோர்வு, குளிர், வாந்தி போன்றவை ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு நிணநீர் சுரப்பிகள் வீங்குதல் மற்றும் சருமத்தில் தடிப்புகளும் காணப்படலாம். ஐந்து நாட்களுக்கும் மேலாகக் காரணம் தெரியாமல் காய்ச்சல் நீடித்தால், குறிப்பாக டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற காரணங்கள் உறுதி செய்யப்படாத நிலையில், ஸ்க்ரப் டைபஸையும் மருத்துவர் பரிசோதிப்பார்.

Q

நோய் தீவிரமானால் என்ன நடக்கும்?

A

சிகிச்சை தாமதமானால் நுரையீரல் அழற்சி, மூளை அழற்சி, இதயத் தசை அழற்சி, சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு மற்றும் பல உறுப்புகள் செயலிழத்தல் போன்ற கடுமையான சிக்கல்கள் ஏற்படலாம். மூச்சுத்திணறல், மயக்கம் அல்லது அதிக தூக்கம், வலிப்பு, சிறுநீர் குறைதல், தொடர்ந்து வாந்தி, இரத்தப்போக்கு, கடுமையான மூச்சுத் தொந்தரவு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை சிகிச்சை தேவை.

Q

இதன் அறிகுறி அல்லது அடையாளம் என்ன?

A

ஸ்க்ரப் டைபஸின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று கடித்த இடத்தில் உருவாகும் கருமையான புண் அல்லது மேலோடு. இதனை ‘எஸ்கார்’ என்று அழைக்கிறோம். இது மார்பு, வயிறு, அக்குள், தொடைப்பகுதி, பிறப்புறுப்புப் பகுதி, கன்னம், காதுமடல் அல்லது பாதத்தின் மேற்பகுதி போன்ற இடங்களில் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு குழந்தையிலும் இந்தக் குறி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

உண்ணிக் காய்ச்சல் | Scrub Typhus
உண்ணிக் காய்ச்சல் | Scrub Typhus
Q

இதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை என்ன?

A

குழந்தையின் அறிகுறிகள், உடல் பரிசோதனை மற்றும் தேவையான இரத்தப் பரிசோதனைகளின் அடிப்படையில் மருத்துவர் நோயை உறுதி செய்வார். சில நேரங்களில் நோயை உறுதி செய்யும் பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பே, மருத்துவ சந்தேகம் அதிகமாக இருந்தால் சிகிச்சையைத் தொடங்க வேண்டியிருக்கும். ஆண்டிபயாடிக் மருந்துகளால் ஸ்க்ரப் டைபஸ் குணப்படுத்த முடியும். மருந்தைத் தேர்ந்தெடுப்பதும், அளவும் குழந்தையின் வயது, எடை மற்றும் நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவர் தீர்மானிப்பார். இந்திய தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மைய வழிகாட்டுதலில் குழந்தைகளுக்கு சிகிச்சை முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் குழந்தைக்கு சளி, காய்ச்சலா? தடுப்பது எப்படி?
உண்ணிக் காய்ச்சல் | Scrub Typhus
Q

தடுப்பூசி இருக்கிறதா?

A

தற்போது தடுப்பூசி இல்லை. எனவே தடுப்பூசியை விட சுற்றுச்சூழல் மற்றும் பூச்சிக்கடி தடுப்பு முக்கியம். புதர், நீண்ட புல் நிறைந்த பகுதிகளுக்குச் செல்லும்போது முழுக்கை சட்டை, நீளமான கால்சட்டை, காலுறை மற்றும் காலணிகளைப் பயன்படுத்துவது நல்லது. வெளியிலிருந்து வந்த பிறகு உடலையும் ஆடைகளையும் நன்றாகச் சுத்தம் செய்வதும் உதவும்.

பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டியவை – சில தவறான நம்பிக்கைகள்

  • கருப்புப் புண் இருந்தால்தான் ஸ்க்ரப் டைபஸ் என்பது தவறு. அந்த அடையாளம் இல்லாமலும் நோய் இருக்கலாம்.

  • ஐந்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் என்றால் டைபாய்டுதான் என்பது தவறு. டெங்கு, மலேரியா, டைபாய்டு மட்டுமல்லாமல் ஸ்க்ரப் டைபஸும் காரணமாக இருக்கலாம்.

  • காய்ச்சல் தானாகக் குறைந்துவிடும்; சிகிச்சை தேவை இல்லை என்று அலட்சியம் கூடாது. சிகிச்சை தாமதமானால் தீவிரமான உறுப்புப் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

இதையும் படியுங்கள்:
எச்1என்1 ஃப்ளூ காய்ச்சல் அறிகுறி முதல் தடுப்பூசி வரை பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டியவை!
உண்ணிக் காய்ச்சல் | Scrub Typhus

பெற்றோருக்கான முக்கிய செய்தி:

பல நாட்கள் நீடிக்கும் காய்ச்சலுடன் குழந்தை இருந்தால், குறிப்பாக புதர் அல்லது புல்வெளிப் பகுதிகளுக்குச் சென்று விளையாடுவது , சருமத்தில் சிறிய கருமையான புண் உள்ளதா என்பதையும் மருத்துவரிடம் தெரிவிப்பது மிகவும் உதவியாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com