

தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் (Dengue Fever), அதை தொடர்ந்து உண்ணிக் காய்ச்சல் (Scrub Typhus / Tick Fever) என்ற பாதிப்பு பரவலாக கண்டறியப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் சுமார் 17,000க்கும் அதிகமானோருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு நோய்களும் வெவ்வேறு காரணிகளால் ஏற்படுகின்றன என்றாலும், இவற்றின் ஆரம்ப கால அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
அதேசமயம், இரண்டுமே காய்ச்சல் தான் என்றாலும், அவை பரவும் விதம், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளில் பெரிய வேறுபாடுகள் உள்ளன. பொதுமக்கள் அச்சமடையாமல் விழிப்புடன் செயல்பட, இவ்விரண்டு காய்ச்சல்களின் தன்மையைப்பற்றி அறிந்து கொள்வது அவசியமானதாகும்.
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?
டெங்கு என்பது ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti) வகை பெண் கொசுக்கள் கடிப்பதால் மனிதர்களுக்க பரவும் ஒரு வைரஸ் காய்ச்சலாகும். இந்த காய்ச்சலை ஏற்படுத்தும் வைரசின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலம் பொதுவாக 5 முதல் 6 நாட்களாகும். அந்த சமயத்தில் காய்ச்சலில் வீரியம் அதிகரித்தால் உடலில் ரத்த தட்டணுக்களின் (பிளேட்லெட்டுகள்) எண்ணிக்கை குறைந்து உடல் மிகவும் பலவீனம் அடைந்து விடக்கூடும்.
டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது?
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடிக்கும் ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள், மற்றொருவரை கடிப்பதன் மூலம் நோய் தொற்றை பரப்புகின்றன. இவை முக்கியமாக பகல் நேரங்களில் தான் மனிதர்களை கடிக்கும். வீட்டை சுற்றி தேங்கும் தண்ணீரில் ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடும். எனவே தேங்கிய தண்ணீரை அகற்றுவது முக்கியமானது.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன?
திடீரென ஏற்படும் அதிக காய்ச்சல், தலைவலி, கண்கள் மற்றும் கண் இமைகளுக்குப் பின்னால் கடுமையான வலி, தசை மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி, குமட்டல், வாந்தி, உடல் சோர்வு, தோலில் தடிப்புகள், ரத்த போக்கு, ரத்தத் தட்டணுக்கள் (Platelets) குறைதல் போன்றவை டெங்குவின் பொதுவான அறிகுறிகளாகும்.
தசைகள் மற்றும் மூட்டுளில் ஏற்படும் கடுமையான வலி காரணமாக டெங்கு காய்ச்சல் ‘எலும்பு முறிவு காய்ச்சல்’ என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.
எப்படி பாதுகாத்துகொள்வது?
குடிநீர் மற்றும் சேமித்து வைக்கும் தண்ணீர் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். குழந்தைகள் பகல் நேரத்தில் வெளியே விளையாட செல்லும் போது உடலை மூடும் ஆடைகளை அணிய வேண்டும். பெரியவர்களின் உதவியுடன், வயதுக்கேற்ற கொசு விரட்டி திரவங்கள் அல்லது கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.
உண்ணிக் காய்ச்சல் என்றால் என்ன?
உண்ணிக் காய்ச்சல் என்பது ஒரியண்டியா சுட்சுகாமுஷி (Orientia tsutsugamushi) என்ற பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று நோயாகும். இந்நோய் ஆங்கியலத்தில் ‘Scrub Typhus’ என்று அழைக்கப்படுகிறது. மிக சிறிய உண்ணி போன்ற பூச்சிகள் கடிப்பதன் மூலம் இது மனிதர்களுக்கு பரவுகிறது.
உண்ணிக் காய்ச்சல் எப்படி பரவுகிறது?
மிகச்சிறிய உண்ணி போன்ற பூச்சியான ‘சிகர்’ கடிப்பதன் மூலம் பாக்டீரியா மனித உடலுக்குள் செல்கிறது. இது ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடியாக பரவாது. புல், புதர், வயல்வெளிகளில் மற்றும் செல்லப்பிராணிகளின் உடலில் இருக்கும் நுண் உண்ணிகள் (Chigger Mites) மூலம் பரவுகிறது. இந்த உண்ணிகள் மிகச்சிறியதாக இருப்பதால் கடிக்கும்போது வலி தெரியாது. புதர்செடிகள், புல்வெளிகள் மற்றும் தாவரங்கள் நிறைந்த பகுதிகளில் இத்தகைய பூச்சிகள் காணப்படுவதால் அத்தகைய இடங்களில் நடமாடும்போது கவனம் தேவை.
உண்ணிக் காய்ச்சல் அறிகுறிகள் என்ன?
உடல் வெப்பம் திடீரென அதிகரித்து கடுமையான குளிர் நடுக்கம் ஏற்படும்.
கடுமையான தலைவலி, குறிப்பாக நெற்றி மற்றும் கண்களை சுற்றி வலி ஏற்படும்.
தசைவலி, மூட்டுவலி மற்றும் உடல் சோர்வு.
உண்ணி கடித்த இடத்தில் கரும்புள்ளியாக தழுப்பு உருவாகும். இது உண்ணிக் காய்ச்சலின் முக்கியமான அறிகுறியாகும்.
கழுத்து, கைகள் மற்றும் இடுப்பு பகுதிகளில் உள்ள நிணநீர் கணுக்கள் வீக்கம் அடையலாம்.
எப்படி பாதுகாப்பது?
புதர் மற்றும் அடர்ந்த் தாவரங்கள் நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் போது உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். வனப்பகுதிகளுக்குகோ, புதர் மிகுந்த பகுதிகளுக்கோ சென்று வந்த பின்னர் உடலில் உண்ணிகள் ஏதேனும் ஒட்டியுள்ளதாக என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும். செல்லப்பிராணிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
கவனிக்க வேண்டிய பொதுவான அறிகுறிகள் என்ன?
103°F - 104°F வரை கடுமையான காய்ச்சல்.
உடல் மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி.
வாந்தி, வயிற்று வலி மற்றும் தீவிரமான சோர்வு.
உடலில் சில இடங்களில் தோன்றும் சிவப்பு நிறத் தடிப்புகள்.
வேறுபாடு - சிகிச்சை முறை:
டெங்கு மற்றும் உண்ணிக் காய்ச்சல் இரண்டிற்கும் காய்ச்சல் உள்பட சில அறிகுறிகள் பொதுவாக இருந்தாலும் அவற்றுக்கான காரணமும் பரவும் விதமும் வேறுபட்டவை. காய்ச்சல் ஏற்பட்டவுடன் தாங்களாகவே காரணத்தை முடிவு செய்து மருந்து எடுத்து கொள்ளலாமல் மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
உடல்வலி மற்றும் காய்ச்சலை குறைக்க மருத்துவரின் ஆலோசனைப்படியே மருந்துகளை பயன்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பப்பாளி இலை சாறு பருகலாம்.
காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இளநீர், ஓ.ஆர்.எஸ் (ORS) போன்ற திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
உண்ணிக் காய்ச்சலை பொறுத்தவரை ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றால் விரைவாக குணப்படுத்தி விடலாம். நோய் முற்றிய நிலையில் நுரையீரல் மற்றும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
இந்த நோய்கள் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றாலும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் முழுமையாகக் குணமடைய முடியும்.
Reference: