

மனச்சோர்வு?
ஐயோ… அம்மா… அப்பா… ஆண்டவனே…
இது என்ன நோய்…? இவ்வளவு கொடுமையாக உள்ளதே…?
இதுதான் மனச்சோர்வு. மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் அதிகமாக ஆகும்போது ஒருவருக்கு மனச்சோர்வு வருகிறது.
காதல் தோல்வி, கல்யாணம் ஆகாமல் இருப்பது, வேலை இல்லாமல் இருப்பது, அல்லது பெரிய அளவில் பொருளாதாரப் பிரச்னை, வாழ்வில் நாட்டம் இல்லாமை என்று பலவிதமான காரணங்களால் இந்த மனச்சோர்வு நோய் வரும். இதை ஆங்கிலத்தில் டிப்ரஷன் (Depression) என்று சொல்வார்கள்.
இவர்கள் யாரிடமும் சுமுகமாக இருக்கமாட்டார்கள் (Signs of depression), சாப்பிடுவதுகூட விருப்பம் இன்றி சாப்பிடுவார்கள். பெரும்பாலும் தனி அறையில்தான் இருப்பார்கள். உறவுக்காரர்களை மதிக்கமாட்டார்கள். யாருடனும் பேசமாட்டார்கள். தனது அம்மா மற்றும் அப்பாவிடம் கூட வாய் திறந்து பேசமாட்டார்கள்.
அவர்கள் சிறையைவிட மோசமான அறையில் இருப்பதாக உணர்வார்கள்.
தாங்கள் நினைப்பதை யாரிடமும் சொல்லமாட்டார்கள். நட்பு வட்டம் இருக்கவே இருக்காது. அண்ணன், தம்பி, அக்கா மற்றும் தங்கைகூட பேசமாட்டார்கள்.
சதா படுக்கைதான். சதா தனிமை தான். இப்படி ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல. இரண்டு, மூணு மற்றும் 4 மாதங்கள் கழித்து நோய் தீவிரம் ஆகும். எல்லோரிடமும் எரிச்சல், கோபம் காட்டுவார்கள். அடுத்தவர் அவரை நினைத்து கவலைப்படுவார்கள் என்றுகூட யோசிக்க மாட்டார்கள்.
யாராவது அவரை டாக்டரிடம் கூட்டி போகத் தயாராக இருந்தாலும்….
“நான் என்ன பைத்தியமா…?” என்று கோபத்தைக் கக்குவார்கள். வீட்டில் உள்ள பிறருக்கு நாம் தொந்தரவு தருகிறோம் என்றுகூட யோசிக்க மாட்டார்கள்.
இசை, பாடல் மற்றும் சினிமா மேலும் எந்த ஈடுபாடும் இருக்காது. தங்கள் உலகில் மட்டுமே இருப்பவர்கள். அவரை மன நல மருத்துவரைக் காண போகலாம் என்றால்… அவரது கோபம் உச்சிக்குப் போய்விடும். கத்த ஆரம்பித்து விடுவார்கள்.
இவர்களை அப்படியே விட்டால் அவருக்குப் பைத்தியம்கூட பிடிக்கலாம். இது கொடுமையிலும் கொடுமை. அவருக்கு உடனடியாக மன நல மருத்துவரை அணுகி அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும். இதைக் கட்டாயம் செய்ய வேண்டும். தவறினால் மனச்சோர்வு தீவிர மன நோய் ஆகிவிடும்.
1950களில் இந்த நோய்க்கு எந்த மாத்திரையும் இல்லை. அதேபோல் பைத்தியம் குணமாக மருந்துகள் இல்லை. பின்னர் நவீன சிகிச்சை மூலம் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் LSDs. Life Saving Drugs. மனநோய் இப்போது முழுதாக குணப்படுத்த ஏராளமாக (Anti-Depressant) மருந்துகள் வந்துவிட்டன. இப்போது நோய் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதை மாத்திரை மூலம் சரி செய்துவிட முடியும். மாத்திரைகள் தவறவிடக் கூடாது.
மன நல மருத்துவரை அணுகுவதில் புறக்கணிப்பு கூடாது. பிற நோய்களுக்கு சிகிச்சை செய்வதுபோல் மன நோய் உள்ளவர்கள் உடனடியாக மன நல மருத்துவரை அணுக வேண்டும்.
உடல் நலம் போலவே மன நலமும் மிகவும் முக்கியம். மனச்சோர்வு வந்தவர்களை அன்புடன் அணுகி அவர்களுக்கு உதவ வேண்டும்.
மன அழுத்தம், மன உளைச்சல். மனச்சோர்வு…! நம்மைப் பாதிக்காமல் பாதுகாத்துக்கொள்வோம். மனநலம் மகத்தானது...!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)