

பாதங்களை பத்திரமாக பாதுகாப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் இன்றிமையாதது. சர்க்கரை நோயாளிகளுக்கு பாதங்களில் உணர்ச்சி குறைதல் மற்றும் ரத்த ஓட்டம் குறைவதால் சிறிய காயம் கூட பெரிய புண்ணாக மாற வாய்ப்புள்ளது. நமது உடலின் முழு எடையையும் தாங்கும் பாதங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
தினசரி பாத பராமரிப்பு:
தினமும் பாதங்களின் அடிப்பகுதி, விரல்களுக்கு இடைப்பட்ட பகுதிகளை உற்று நோக்குவது அவசியம். ஏதேனும் சிவந்த நிறம், வீக்கம், கொப்புளங்கள், புண்கள் அல்லது வெடிப்புகள் உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்ளவும்.
தினமும் அதிகமான சூடான நீரை பயன்படுத்தாமல் வெதுவெதுப்பான நீர் மற்றும் மென்மையான சோப்பு கொண்டு பாதங்களைக் கழுவலாம். கால்களை நன்கு கழுவிய பின் மென்மையான துண்டால் பாதங்களைத் துடைக்க வேண்டும். முக்கியமாக விரல்களுக்கு இடையே உள்ள பகுதியை ஈரம் இல்லாமல் உலர வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
பாதங்கள் வறண்டு வெடிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கு மாய்ஸ்சரைசர் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு தடவி வரலாம். ஆனால் விரல்களுக்கு இடையே பயன்படுத்த வேண்டாம்.
தினமும் படுக்க செல்வதற்கு முன்பு பாதத்தின் அடிப்பகுதியை கண்ணாடி உதவியுடன் பார்க்கலாம். ஏதேனும் தடிப்பு, காயம் உள்ளதா என்பதை சரி பார்ப்பதன் மூலம் ஆரம்பத்திலேயே சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.
காலணிகள் மற்றும் சாக்ஸ்:
வீட்டிற்குள்ளும் சரி, வெளியிலும் சரி வெறும் காலுடன் நடப்பதை தவிர்க்க வேண்டும். சிறிய கல் அல்லது முள் குத்தினால் கூட உணர்ச்சி இல்லாததால் அது பெரிய புண்ணிற்கு வழி வகுக்கும். எனவே பாதங்களுக்கு சரியான அளவில், மென்மையான அல்லது அழுத்தமில்லாத காலணிகளை (Diabetic Footwear) அணிய வேண்டும். மிகவும் இறுக்கமான அல்லது மிகவும் தளர்வான காலணிகளை அணிவதை தவிர்க்க வேண்டும். தளர்வான, தையல் இல்லாத பருத்தி சாக்ஸ்களைப் பயன்படுத்துவது நல்லது. வியர்வை தங்கி தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு தினமும் சாக்ஸ்களை மாற்ற மறக்க வேண்டாம்.
செருப்பு அல்லது ஷூக்களை அணிவதற்கு முன்பு அதற்குள் கல், முள் அல்லது பூச்சிகள் ஏதேனும் இருக்கிறதா என்று தட்டிப் பார்த்துவிட்டு போடுவது நல்லது.
நகங்களை வெட்டும் பொழுது ஓரங்களை வளைத்து ஆழமாக வெட்டாமல் நேராக வெட்ட வேண்டும். அத்துடன் ஓரங்களை சீராக தேய்த்து விட வேண்டும். இதனால் நகங்கள் சதைக்குள் வளர்வதைத் தடுக்கலாம். நகங்களை வெட்டும்போது சதைப்பகுதியில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
முக்கியமாக சுயமருத்துவம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
எளிய பாதப் பயிற்சிகள்:
பாதங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சமநிலையை மேம்படுத்தவும் சில எளிய பயிற்சிகளைச் செய்யலாம்.
கெண்டைக்கால் நீட்சி (Calf Raises):
குதிகால்களை மேலே தூக்கி கால் விரல்களால் நிற்பது.
கால் விரல் தூக்குதல் (Toe Lifts):
குதிகாலை தரையில் ஊன்றி, கால் விரல்களை மட்டும் மேலே தூக்குவது.
கணுக்கால் சுழற்சி (Ankle Rotations):
நாற்காலியில் அமர்ந்து கால்களை கடிகாரச் சுற்றிலும், எதிர் திசையிலும் சுழற்றுவது.
நடைப்பயிற்சி:
மருத்துவரின் ஆலோசனைப்படி வாரம் 3 முறை, குறைந்தது 30 நிமிடங்கள் வரை முறையான நடப்பயிற்சி மேற்கொள்வது கால்களின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
ஆண்டுக்கு ஒரு முறை முழு பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் வருடம் ஒருமுறையாவது பாத மருத்துவ நிபுணரிடம் மோனோஃபிலமென்ட் (Monofilament) மற்றும் ரத்த ஓட்டப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
பாதங்களில் ஆறாத புண்கள், வீக்கம் அல்லது நிறமாற்றம் இருந்தால், அவை தீவிர பாதிப்பாக மாறாமல் தடுக்க உடனே மருத்துவரை சந்தித்து பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.