
நாம் அனைவரும் தினசரி பல முறை 'பீ' (ஒண்ணுக்கு) போவதுண்டு. ஒருவர் ஒரு நாளில் எத்தனை முறை ஒண்ணுக்கு போவதற்கு டாய்லெட் செல்கிறார் என்பதை வைத்து அவரின் ஆரோக்கியத்தை கணித்துவிடலாம். முதலில் நாம் யூரினேஷன் என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
மைக்ட்டூரிஷன் (Micturition) எனவும் அழைக்கப்படும் ஒன் பாத்ரூம் செல்லும் செயலானது உடல் இயற்கையாக, உடலிலுள்ள தேவையில்லாத கழிவுகளையும் அதிகப்படியான நீரையும் யூரினாக, சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர்க் குழாய்களின் வழியாக உடலிலிருந்து வெளியேற்றுவதாகும். இரத்தத்திலுள்ள கழிவுகள் மற்றும் அதிகப்படியான நீரை வடிகட்டி, சிறுநீராகப் பிரித்தெடுப்பது கிட்னியின் வேலையாகும்.
பின் சிறுநீரானது சிறுநீர்ப்பைகளில் சேமித்து வைக்கப்படுகிறது. சிறுநீர்ப்பை நிரம்பும்போது மூளைக்கு சிக்னல் அனுப்பப்பட்டு சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.
அப்போது சிறுநீர்ப்பையின் தசைகள் சுருங்கவும், ஸ்ஃபிங்க்டெர் (sphincter) தசைகள் விரியவும் செய்து சிறுநீர் வெளியேற உதவி புரிகின்றன.
ஒருவர் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிக்க டாய்லெட் செல்கிறார், ஒருமுறை சென்று வந்தபின், அடுத்த முறை செல்கையில் இரண்டிற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு நேரம் உள்ளது போன்ற விவரங்களை சேகரித்தால், அவரது உடல் எந்த அளவுக்கு ஆரோக்கியமாய் உள்ளது, உடல் நிலையில் ஏதேனும் கோளாறுகள் உள்ளனவா என்பது போன்ற விவரங்களைக் கண்டுபிடித்துவிடலாம்.
24 மணி நேரத்தில் ஒருவர் சராசரியாக 6-7 முறை யூரின் போவது சாதாரணம். முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் நபர் ஒருவர் 4-10 முறை யூரின் கழிப்பவராயின் அவரது ஆரோக்கியமும் நல்ல நிலையில் உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.
இரவு நேரங்களில் ஒரு முறைக்கு மேல் சிறுநீர் கழிக்க பாத்ரூம் சென்று வருபவரின் ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டியதொன்று என கூறுகின்றனர்.
சில வகை மருந்துகளை எடுத்துக் கொள்வது, ஹார்மோன் உற்பத்தியில் ஏற்படும் மாற்றம், சிறுநீர்ப் பை மீது உண்டாகும் அழுத்தம் போன்றவை, ஒருவரின் சிறுநீர் கழிக்கச் செல்லும் எண்ணிக்கையில் மாற்றத்தை உண்டுபண்ணச் செய்யும் காரணிகளாக அமைவதாகவும் கூறப்படுகிறது.
கர்ப்பிணிப் பெண்களின் கட்டுப்பாடற்ற சிறுநீர்ப்பை பிரச்சனை, பிரசவித்த பின் இரண்டு மாதங்கள் வரை தொடர வாய்ப்புண்டு.
ஒருவரின் வயது, சிறுநீர்ப்பையின் கொள்ளளவு, அருந்தும் நீரின் அளவு, அவர் உட்கொள்ளும் காபி, டீ மற்றும் ஆல்கஹால் போன்றவற்றின் அளவு, அவர் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகள், அவரின் உடல் நிலை (அதாவது அவருக்கு நீரிழிவு மற்றும் சிறுநீர்ப்பாதைத் தொற்று போன்ற பாதிப்புகள் உள்ளதா என்பது) போன்ற பல விஷயங்களும் அவரின் சிறுநீர் கழிக்கச் செல்லும் எண்ணிக்கையில் மாற்றம் உண்டாக்கக் காரணிகளாகின்றன.
யூரினை அடக்க முடியாமல் போவது அல்லது தானாகவே யூரின் வெளியேற ஆரம்பிப்பது, எண்ணிக்கையிலடங்காத முறை மற்றும் அவசர கதியில் யூரின் கழிக்க ஓடுதல், தெளிவற்ற கலங்கிய மாதிரியான யூரின், யூரினில் இரத்தம் வருதல், யூரின் கழிக்கும்போது அல்லது அதற்கு முன்னும் பின்னும் அந்த இடத்தில் வலி ஏற்படுவது, யூரின் வெளியாகும் வேகத்தில் முரண்பாடு, சிறுநீர்ப்பை காலியானவுடன் உண்டாகும் அசௌகரியம் போன்றவை நீங்கள் உடனடியாக ஒரு நல்ல மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டியதற்கான அறிகுறி என்று எடுத்துக் கொள்ளலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)