ஸ்வீடன் நாட்டில் தற்போது பிரபலமாகி வருகிறது எக் (Egg) காபி. பாரம்பரிய காபியிலிருந்து வேறுபட்டு தனித்துவமான சுவையுடன் கூடிய க்ரீமியான காபி இது. ஸ்வீடன் நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் உள்ள காபி பிரியர்களிடையேயும் பிரபலமடைந்து அனைவராலும் அருந்தப்பட்டு வருகிறது இந்த எக் காபி.
இந்த காபியை தயாரிக்கும் முறை சர்ச் பேஸ்மென்ட் காபி (Church Basement Coffee) என அழைக்கப்படுகிறது. ஸ்கேண்டினேவியாவிலிருந்து இடம் பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறிய மக்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த காபி லூதெர்ன் சர்ச் (Lutheran Church)சில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரசித்தி பெற்றுள்ளது. எக் காபியிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. காபியுடன் ஒரு முட்டை சேர்த்து குடிக்கும்போது முட்டையிலுள்ள தரமான புரோட்டீன் சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் உடலுக்குத் தேவையான வைட்டமின் D, B12 போன்ற சத்துக்கள் அந்த பானத்திலுள்ள ஊட்டச் சத்துக்களின் அளவை கணிசமாக உயர்த்த உதவுகின்றன.
2. உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் முன்பு எக் காபி அருந்துவது அதிக நன்மைகளைத் தரும். காபியிலுள்ள காஃபின் விழிப்புணர்வையும் கூர்நோக்கும் திறனையும் அதிகரிக்க உதவும். முட்டையில் உள்ள புரோட்டீனும் கொழுப்புகளும் உடலுக்கு தொடர்ந்து சக்தி கிடைக்கச் செய்யும்.
3. வழக்கமான காபியுடன் ஒப்பிடும்போது, ஸ்வீடிஷ் எக் காபியில் அமிலத் தன்மை குறைவாகவே உள்ளது. இதற்கான காரணம் முட்டையில் உள்ள புரோட்டீன்கள் அசிடிக் கூட்டுப்பொருட்களுடன் இணைந்திருப்பதேயாகும். இதனால் வயிற்றில் கோளாறு ஏதும் உண்டாகாமல் பாதுகாக்கிறது.
4. காபியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இதனுடன் முட்டை சேரும்போது, ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் அளவில் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் ஊட்டச் சத்துக்களின் அளவு அதிகரிக்கவே செய்யும். இதனால் நீரிழிவு, கேன்சர் போன்ற நாட்பட்ட வியாதிகள் வரும் அபாயம் குறையும் வாய்ப்புண்டு.
5. எக் காபியை காலையில் அல்லது உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் முன்பு அருந்துவது சிறப்பு. அதுவே மனத் தெளிவும் உடலில் சகிப்புத் தன்மையும் உண்டாக உதவும். எக் காபியில் கலோரி அளவு அதிகம் உள்ளதால் இதை அளவோடு அருந்துவதே ஆரோக்கியம்.
6. எக் அலர்ஜி உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் காஃபின் சென்சிட்டிவிட்டி உள்ளவர்கள் ஸ்வீடிஷ் எக் காபியை தவிர்ப்பது நலம். ஏனெனில் இவர்களுக்கு சால்மோனெல்லா (Salmonella) உள்ளிட்ட பல உடல்நலக் கோளாறுகள் வரக்கூடிய வாய்ப்பு உண்டு.