அறுபது வயதைக் கடந்த பிறகும் திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது உங்கள் ஆரோக்கியத்திற்குக் காரணம் என்னவென்று கேட்டால் உடனே, ‘பழையசோறு, கம்மங்களி’ என்ற பதில்தான் வரும். பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல் நலத்துக்கு பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டு வந்த பழக்கம் நம் பாரம்பரியத்துக்கு உண்டு. சமீபத்தில் அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பழைய சோறின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டு இருந்தது.
பழைய சாதம், பழைய சோறு, பழஞ்சோறு, ஏழைகளின் உணவு, ஐஸ் பிரியாணி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த உணவு அமெரிக்கர்களுக்கும் பிற நாட்டினருக்கும் வேண்டுமானால் அதிசயமாக இருக்கலாம். நம் முன்னோர்களுக்கு அன்றாடம் பார்த்து பார்த்து பழகிப்போன இதம் தரும் காலை உணவு. மதியம் வடித்து மீந்துபோன சாதத்தில் நீரூற்றி விடுவார்கள். அடுத்த நாள் அது பழைய சாதம் ஆகிவிடும்.
கிராமங்களில் வெயிலில் வாடி வதங்கி வருபவர்கள் உரிமையோடு கேட்கும் பானம் ‘‘கொஞ்சம் ‘நீச்ச தண்ணி’ இருந்தா குடு தாயி!’’ என்பதுதான். நீச்சத்தண்ணி என்றால் பழைய சோற்று தண்ணீர். நீராகாரம் என்று அர்த்தம். உடல் உஷ்ணத்தை குறைக்கும். குளிர்ச்சியோடு எனர்ஜியையும் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம்தான் நீராகாரம். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு அறிமுகமான காபி நீராகாரத்தை மெல்ல மெல்ல ஓரங்கட்டி விட்டது.
அதோடு, இந்தப் பழைய சோற்றுத் தண்ணீர் மற்ற பானங்கள் போல் அல்ல. பழச்சாறுகள், இளநீர், டீயை போல இதை பாட்டிலில் அடைத்து கையோடு எடுத்துப் போக முடியாது. இதில் சாதம் கலந்திருக்கும் என்பதால் பாட்டில்கள் ஏற்றவை அல்ல. இதுவும் தமிழர்கள் நீராகாரத்தை மறந்துபோக ஒரு காரணம். பழைய சோற்றில் லேசாக புளிப்புச் சுவை ஏற்பட காரணமும் உண்டு. சாதத்தில் உருவாக்கும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியாதான் புளிப்பு சுவையைத் தருகிறது. அதோடு மிக அதிக அளவில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவற்றை அள்ளி அள்ளித் தருகிறது இந்த அட்டகாசமான சாதம்.
உதாரணத்துக்கு ஒரே ஒரு விஷயம் வடித்த சாதத்தில் 3.4 மில்லி கிராம் இரும்பு சத்து இருக்கிறது என்றால் அது பழைய சாதமாகும்போது இரும்பு சத்தின் அளவு 73.91 மில்லி கிராமாக இருக்கும். ஆக, காலையில் சாப்பிட ஏற்ற சத்தான உணவு பழைய சோறு. அதிகபட்சம் பழைய சாதம் ஆக வேண்டும் என்பதற்காக நீரூற்றிய 15 மணி நேரத்திற்குள் சாப்பிட்டு விடுவதுதான் ஆரோக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பழைய சோற்றில் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமாக இருப்பதால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும். உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தை போக்கும். மேலும், இந்த உணவு நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால் மலச்சிக்கலைப் போக்கி, உடல் சோர்வை விரட்டும். முழு நாளைக்கும் ஃப்ரெஷ்ஷாக உணர வைக்கும். வனப்பைத் தரும். இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும். இவ்வளவு நன்மைகள் நிறைந்த பழைய சோறு இருக்கும் இடம் ஆரோக்கியம் குடியிருக்கும் இடமே.