நம் ஒவ்வொருவருக்கும் உடற்பயிற்சி செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. சீரான உடற்பயிற்சி பொருளாதார வசதிகள் தருவதை விட சிறந்த மகிழ்ச்சியை வழங்குவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் யேல் யுனிவர்சிட்டி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள 12 லட்சம் இளைஞர்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவு கண்டறியப்பட்டுள்ளது. வாரம் 3 நாட்கள் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் 15 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்களை விட மனதளவில் மகிழ்ச்சியாக இருந்ததை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
உடற்பயிற்சி இல்லாமல் சத்துள்ள உணவுகளை மட்டும் உண்டு வருவதில் பயன் மிகக்குறைவு. உடற்பயிற்சி உயர் அடர்த்தி லிபோ புரோட்டீன்களை (HDL) அதிகரிக்கும். இதனால் உங்கள் இதயம் பலமடைகிறது. அதோடு உங்கள் தோற்றத்திலும் இளமையைக் கொண்டு வருகிறது. வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தீவிர உடற்பயிற்சி செய்தாலே போதும், 200 வகை நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறையும் என்கிறது அமெரிக்க மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ ஆய்வு.
நமது நீண்ட ஆயுளுக்கு உடலிலுள்ள சில மரபணுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அந்த மரபணுக்கள் ஆரோக்கியமான சூழ்நிலை மற்றும் உடற்பயிற்சி மூலம் மேலும் மெருகு பெறுகின்றன என்கிறார்கள் அமெரிக்காவின் பப்லோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். உடற்பயிற்சி நமது மூளையிலுள்ள ‘டோபமைன்’ அமைப்பிற்கு ஆற்றலைத் தந்து நமது ஆயுளை 16 முதல் 22 சதவீதம் அதிகப்படுத்த உதவுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நீங்கள் எந்தளவுக்கு உடற்பயிற்சி செய்கிறீர்களோ அந்தளவு உங்கள் இரத்தத்தில் வைட்டமின் ‘டி’ இருக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, வைட்டமின் டி எலும்புகள் பலம் பெற மட்டுமல்ல, ஆரோக்கியமான இருதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டிற்கும் அது போதுமான அளவு இருக்க வேண்டும் என்கிறார்கள் வெர்ஜீனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
வழக்கமாக அன்றாடம் செய்யும் உடற்பயிற்சி உங்கள் உணவுகளின் மூலம் பெறப்படும் கொழுப்பை உடலின் கொழுப்பு திசுக்களில் அதிகப்படியாக சேமிக்க உதவுகிறது என்கிறார்கள் மிக்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இதனால் என்ன நன்மை? உடலில் சேரும் கொழுப்புகள் அதன் திசுக்களில் சேர்வதால் எந்தப் பாதிப்பும் இல்லை. மாறாக அது கல்லீரல் மற்றும் இதய நாளங்களில் சேமிக்கப்பட்டால்தான் ஆபத்தானது. அதனை உடற்பயிற்சி தவிர்க்க உதவுகிறது என்கிறார்கள்.
அன்றாடம் உடற்பயிற்சி செய்தால் மனிதர்களுக்கு வரும் 26 வகை கேன்சர்களில் 13 வகையான கேன்சர்களில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள் பின்லாந்து மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக, இரத்த புற்றுநோய், குடல் புற்றுநோய், கழுத்து மற்றும் தலைப்பகுதி கேன்சர்கள், மார்பக புற்றுநோய், இரைப்பை புற்றுநோய். எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஆக்ஸிஜனை உள்ளிழுக்கிறமோ அவ்வளவுக்கு அவ்வளவு புற்றுநோய் தீவிரம் குறைகிறது என்கிறார்கள். தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்பவர்களை இந்நோய் தாக்குவது குறைவு என்கிறார்கள்.
வாரத்தில் பல நாட்கள் தினமும் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது விரைவாக நடக்கும் பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு, குறிப்பாக வயதான பெண்களுக்கு இதய நோய் அபாயம் குறைகிறது என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். பிரசவ காலத்தில் பெண்கள் ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்து வந்தால் மற்ற பெண்களை விட பிரசவ நேரம் குறைகிறது என்பதை மெட்ரிக் டெக்னாலஜி யுனிவர்சிட்டி ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
நிம்மதியான தூக்கத்திற்கு உடற்பயிற்சிதான் சிறந்த மருந்து என்கிறார்கள் ஆய்வாளர்கள். உடற்பயிற்சி செய்யும்போது ‘டிரிப்டோபான்’ என்ற வேதிப்பொருள் மூளையில் சுரக்கிறது. அதுதான் ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகிறது. இந்த வேதிப்பொருள் மனதை அமைதிப்படுத்தும் பணியையும் செய்கிறது.