விரதங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் தெரியுமா?

Girl water fasting
Girl water fastinghttps://www.linkedin.com

‘உண்பது வரவேற்கத்தக்கதே, விரதம் மனப்பூர்வமாக வரவேற்கத்தக்கது’ என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. மனிதன் தன் பசியை கட்டுப்படுத்துவதுதான் விரதமாகும். இது ஒரு பழங்கால நடைமுறையாகும். ஆரோக்கியம் மற்றும் ஆன்மிக காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மதங்களிலும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக விரதம் காணப்படுகின்றது.

மூளை ஆரோக்கியம் முதல் எடை இழப்பு வரை விரதம் பல வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது. விரதம் இருப்பதால் அது பல நன்மைகளை தருகிறது. இதனால் சுய கட்டுப்பாடு மற்றும் தெய்வீகத்துடனான தொடர்பு போன்றவற்றை மேம்படுத்தும் ஒருவகையான ஆன்மிக ஒழுக்கத்தின் வடிவமாக விரதம் பார்க்கப்படுகிறது.

இயற்கை மருத்துவத்தில் ஒரு தலைசிறந்த மருந்து விரதம். இது நேரடியாக குணம் பெற வழி செய்யாமல் மறைமுகமாக குணம் பெற உதவுகிறது. உடலில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சத்துகளையும், கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது. மாதத்தில் அல்லது வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்கும் நபர்களுக்கு ஹார்ட் அட்டாக், பக்கவாதம், கேன்சர் போன்ற நோய்கள் வருவது குறைவு. மேலும், அவர்களின் ஆயுளும் கூடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பொதுவாக, விரதம் இருப்பதன் மூலம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்துவதற்கு உதவுகிறது. அதோடு, நீங்கள் விரதமிருக்கும்போது உங்கள் உடல் ஆற்றலுக்கான சேமிக்கப்பட்ட குளுக்கோஸைப் பயன்படுத்துகிறது. மேலும், இன்சுலின் எதிர்ப்பை குறைக்க உதவுகிறது. மேம்படுத்தப்பட்ட இன்சுலின் உணர்திறன் இரண்டாம் வகை நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது.

விரதம் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பை எரிக்க உதவும். சில ஹார்மோன் உற்பத்தியையும் அதிகரிக்கும். இதன் மூலம் தேவையற்ற கொழுப்பை குறைத்து எடை குறைக்க உதவுகிறது. விரதம் இருப்பதால் பல வகையான நோய்கள் குணமாகும் என்பது அறிவியல் ரீதியான உண்மை. ஆம், நம் உடலில் உள்ள அசுத்த இரத்ததை சுத்திகரிக்கிறது.

விரதம் மூளையின் செயல்பாட்டில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதில் மேம்படுத்தப்பட்ட கவனம், செறிவு மற்றும் நினைவுகளும் அடங்கும். இது மூளை செல்களை பாதுகாத்து புதிய நரம்பு செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது காலப்போக்கில் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

விரதம் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும். ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஃபிரிரேடிக்கல் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களுக்கான இடையிலான சமநிலையை ஏற்படுத்துகிறது. அது செல் சேதங்களை குறைத்து நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.

விரதம் இரத்த அழுத்தம் சம்பந்தமான பிரச்னைகளை குறைக்கும். இருதய சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும், கழிவு வெளியேற்றம் சிறப்பாக நடக்கும். அதனால் நமது உடல் தன்னையே குணப்படுத்தும் ஆற்றலை பெறச் செய்யும்.

மாதத்தில் ஒரு நாள் விரதம் இருப்பது மாரடைப்பு ஆபத்தை தடுக்கிறது என்கிறார்கள் இங்கிலாந்தின் குடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இதனை ஐந்தாயிரம் பேர்களை ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர். விரதம் இருப்பதால் இதய இரத்த குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்பு இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விரதத்தின்போது வயிறு மட்டுமின்றி, மற்ற உடல் உறுப்புகளும் ஓய்வு பெறுகின்றன. மந்தமாக இருக்கும் உடல் சுறுசுறுப்பாக மாறும். காம இச்சை குறையும், இருதய நோய், காக்காய் வலிப்பு, ஆஸ்துமா, நீரிழிவு நோய் போன்றவை சரியாகும்.

பட்டினி வேறு, விரதம் வேறு. பசி இருந்தும் உணவு இல்லாமல் இருப்பது பட்டினி. உணவு இருந்தும் உடல் நலம் பேண மேற்கொள்வது விரதம். அந்நாளில் காற்றோட்டம் இருக்கும் இடத்தில் விரதம் இருக்க வேண்டும். விரத நாளில் இரு முறை குளிக்க வேண்டும். சிறிய உடற்பயிற்சி செய்து வியர்வை மற்றும் கழிவுகளை நன்கு வெளியேற்ற வேண்டும். அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டும். அப்போதுதான் உடலிலுள்ள கழிவுகள் வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேறும். வாந்தி வருவது போல் இருந்தால் எலுமிச்சை சாறு பருகலாம்.

இதையும் படியுங்கள்:
சோஷியல் மீடியாவில் உங்கள் தகவல்களைத் திறந்து வைக்காதீர்கள்!
Girl water fasting

விரதம் மேற்கொள்ளும்போது, தொடங்கியது முதலே உண்பதை நிறுத்தி விடக் கூடாது. முதலில் திட உணவை நிறுத்த வேண்டும். பின்னர் கெட்டியான திட உணவை நிறுத்த வேண்டும். பிறகு திரவ உணவை நிறுத்த வேண்டும். விரதத்தின்போது நீர் மட்டுமே பருகலாம். அதேபோல், விரதம் முடிக்கும்போது முதலில் லேசான திரவ உணவு, பின்னர் கெட்டியான திரவ உணவு பிறகு திட உணவை சாப்பிட வேண்டும். விரதத்தில் குறுகிய கால விரதம், நீண்ட கால விரதம் என்று உண்டு. அதனை உங்களது உடல் நிலை மற்றும் நோயின் தன்மையை பொறுத்து மருத்துவர் ஆலோசனை பெற்று கடைப்பிடிக்க வேண்டும்.

இந்து சமயத்தில் விரதம் என்பது உண்ணாமல் இருத்தல் அல்லது உணவைச் சுருக்குதல் எனப்படுகிறது. அவர்கள் அமாவாசை போன்ற நாட்களில் மற்றும் வாரம் ஒரு நாள் என்று விரதம் இருப்பது வழக்கம். நோன்பு, உபவாசம் என்பவை விரதத்துடன் தொடர்புடையதாகும். இந்து மதத்தில் மட்டுமல்லாமல் கிறிஸ்துவம், இஸ்லாமிய மதத்தினரும் பல விரதங்களை கடைப்பிடிக்கின்றனர். ஈஸ்டர் திருநாளுக்கு முன்பிலிருந்து 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பது வழக்கம். இஸ்லாமியர்கள் வழக்கமாக ரம்ஜான் மாதத்தில் விரத நோன்பு இருப்பார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com