லைகோபீன் ஒரு சக்தி வாய்ந்த பைட்டோ நியூட்ரியன்ட் ஆகும். பைட்டோ நியூட்ரியன்ட் என்பது இயற்கை ரசாயனங்கள் அல்லது தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் கலவைகள் ஆகும். மனிதர்களுக்கு லைகோபீன் சத்து மிகவும் இன்றியமையாததாகும். இது உடலில் உள்ள செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
பல காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களுக்கு காரணமாக லைகோபீன் உள்ளது. லைகோபீன் நிறைந்த காய்கறிகளை சமைத்து உண்ணும்போது உடலுக்கு அதிக சத்து கிடைக்கும். இது தாவர செல் சுவர்களை உடைத்து உடல் சத்துக்களை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது.
லைகோபீன் சத்து ஏன் உடலுக்கு அவசியம்?
இருதய ஆரோக்கியம்: லைகோபீன் எல்டிஎல் என்கிற கெட்ட கொழுப்பை குறைக்கும் சக்தி வாய்ந்தது. அதனால் இது இருதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
புற்றுநோய் தடுப்பு: பல வகையான புற்று நோய்கள் குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை லைகோபீன் குறைக்கிறது. மேலும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. கட்டிகள் பரவுவதைத் தடுக்கிறது.
கண் ஆரோக்கியம்: லைகோபீன் சத்து நிறைந்த காய்கறிகளும் பழங்களும் கண்களுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தருகின்றன. கண் சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுத்து காக்கின்றன. கண்களில் தோன்றும் மாகுலார் சிதைவு போன்ற அபாயங்களில் இருந்து கண்களைக் காக்கின்றன.
சரும பாதுகாப்பு: புற ஊதா கதிர்வீச்சில் இருந்து மனிதர்களின் சருமத்தை பாதுகாக்கிறது. சூரிய ஒளி உடலில் பட்டால் ஏற்படும் தீங்குகளில் இருந்தும் மற்றும் சரும புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது. லைகோபீன் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை மற்றும் இளமைத் தோற்றத்தை பராமரிக்க உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியம்: நமது உடலில் உள்ள எலும்புகள் ஆரோக்கியமாகத் திகழ லைகோபீன் உதவுகிறது. எலும்புகளில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மூட்டு வலி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.
லைகோபீன் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள்:
பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு சிவப்பு, இளம் சிவப்பு போன்ற நிறத்தை கொடுப்பது லைகோபீன். தக்காளி, தர்பூசணி, திராட்சைப்பழம், சிவப்பு மிளகாய், பப்பாளி, கொய்யா, சிவப்பு முட்டைக்கோஸ், அஸ்பேரகஸ், மாம்பழம், கத்தரிக்காய் போன்றவற்றில் லைகோபீன் சத்து நிறைந்துள்ளது.
பொதுவாக, லைகோபீன் நிறைந்த காய்களை பச்சையாக சாப்பிடுவதை விட சமைத்து சாப்பிடும்போதுதான் அந்த சத்து உடலுக்குக் கிடைக்கும். உதாரணமாக, தக்காளியை வைத்து செய்யக்கூடிய சாஸ்கள் மற்றும் சூப்களில் அதிக அளவு லைகோபீன் உள்ளது. சமைத்து உண்ணும்போது லைகோபீன் சத்து உடலுக்கு முழுமையாகக் கிடைக்கும்.