லெக்டின்கள் (Lectin) என்பது கார்போஹைட் கலந்த புரதங்கள். இவை பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் தானியங்களில் இருக்கின்றன. ஆனால், இவற்றை குறைவாகவே உண்ண வேண்டும். ஏன் என்பதற்கான காரணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
லெக்டின் உள்ள உணவு வகைகள்:
பருப்பு வகைகள்: கிட்னி பீன்ஸ், கருப்பு பீன்ஸ், சிவப்பு பருப்பு, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, பட்டாணிப் பருப்பு, பச்சைப் பட்டாணி, சோயா பீன்ஸ் மற்றும் டோஃப்பு ஆகியவை.
தானியங்கள்: முழு கோதுமை, பழுப்பு அரிசி, பார்லி, கம்பு, ஓட்ஸ் மற்றும் குயினோவா ஆகியவை.
காய்கறிகள்: நைட் ஷேட் காய்கறிகள் என அழைக்கப்படும் தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், சுரைக்காய் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவை.
பழங்கள்: ஆப்பிள், பழுக்காத வாழைப்பழங்கள், முலாம் பழங்கள் பூசணிக்காய் ஆகியவை.
கொட்டைகள் மற்றும் விதைகள்: வேர்க்கடலை, சோயா பீன்ஸ், சூரியகாந்தி விதைகள் முதலானவை.
பால் பொருள்கள்: தானியம் சார்ந்த உணவை உண்ணும் விலங்குகளில் இருந்து பெறப்படும் பால் பொருட்கள் போன்றவற்றில் லெக்டின் அதிகம் உள்ளது.
லெக்டின் தரும் நன்மைகள்:
1. லெக்டின் உள்ள உணவுகள் ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருக்கின்றன. இவை ஃபிரீரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து உடலின் செல்களை பாதுகாக்க உதவுகின்றன.
2. சில லெக்டின்கள் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
3. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன. நோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படுவதால் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன.
யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?:
1. லெக்டின் சென்சிடிவிடி உள்ள சில நபர்களுக்கு, ஏற்கெனவே செரிமான பிரச்னை உள்ளவர்கள் அல்லது தன்னுடல் தாக்க நோய் உள்ளவர்கள் மிகக் குறைந்த அளவு லெக்டின்களை எடுத்துக்கொள்வது நல்லது.
2. கிட்னி பீன்ஸ் மற்றும் சில பருப்பு வகைகளை சரியாக சமைக்காதபோது, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
3. ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதில் தாமதமாகலாம். மற்றும் குடல் சம்பந்தமான பிரச்னைகளை தரும். கிட்னி பீன்ஸ் எனப்படும் ராஜ்மாவில் அதிக நச்சுத்தன்மை இருக்கிறது. எனவே, அதை கவனமாக சமைத்து உண்ண வேண்டும்.
இவற்றை ஒருபோதும் பச்சையாக உண்ணக்கூடாது. அது எல்லோருக்கும் உடல் நலப் பிரச்னைகளை உண்டாக்கி விடும்.
சமைக்கும் முறை:
கிட்னி பீன்ஸ், கொண்டைக்கடலை, பருப்பு வகைகள் போன்றவற்றை நன்றாக ஊற வைத்து, நன்றாக சமைத்து சாப்பிடுவது நல்லது. மேலும், இவற்றை முளைகட்டி உண்பதும் நல்லது.
சிவப்பு கிட்னி பீன்ஸில் அதிகளவு லெக்டின்கள் உள்ளன. குறைந்தபட்சம் 8 முதல் 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். சமைத்து, லெக்டினை அழிக்க குறைந்தது 30 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதேபோல வேர்க்கடலையையும் முறையாக சமைத்து உண்ண வேண்டும்.
உருளைக்கிழங்கு தோலில் லெக்டின்கள் உள்ளன. தோலுரித்து மென்மையாகும் வரை வேகவைக்கவும். தக்காளியில், லெக்டின் உள்ளடக்கத்தின் பெரும்பகுதி விதைகள் மற்றும் தோலில் காணப்படுகின்றன. அவற்றை அகற்றி விட்டு உண்ணும்போது, உட்கொள்ளும் லெக்டின்களின் அளவைக் குறைகிறது. லெக்டின் எண்ணிக்கையை மேலும் குறைக்க நீண்ட நேரம் வேக வைக்கும் சாஸ்கள் அல்லது சூப்களில் பயன்படுத்தலாம். பச்சையாக உண்பதைத் தவிர்க்கலாம்.