
தும்மல் (Sneezing) என்பது, மூக்கிற்குள் செல்லும் தூசு அல்லது வேறு வெளிப் பொருட்களால் ஏற்படும் ஒரு தன்னிச்சையான எதிர்வினை ஆகும். நமது மூக்கில் உள்ள ஒரு மென்மையான சவ்வுப் படலம் நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது. நமது மூக்கின் உள்ளே அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்பட்டு, அதிகளவில் நீரைச் சுரக்கிறது. இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை, வாய் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து மூச்சுப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளித் தள்ளுகின்றன. இதைத்தான் தும்மல் என்பர்.
அலர்ஜி, தூசி போன்ற ஒவ்வாமைதான் தும்மலின் முக்கிய அடிப்படைக் காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது, ஒரு சிலருக்கு குளிர்ந்த காற்று, வீட்டு தூசு, ஒட்டடை, பருத்தி, பஞ்சு, சிமெண்ட், உமி, வாகனப் புகை போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டதும் தொடர்ந்து நிற்காமல் தும்மல் வரத் தொடங்கிவிடும்.
சிலருக்கு தும்மல் வந்தால் அது நிற்க வெகு நேரமாகும். சில நேரங்களில் சில நோய்களால் ஏற்படும் சளி மற்றும் எரிச்சலும் தும்மலை வரவைக்கும்.
மங்கள சடங்கு நடைபெறும் இடங்களில் ஒருவர் தும்பினால் அது அபசகுணம் என்ற மூடநம்பிக்கை இன்றும் பலருக்கும் இருக்கிறது. அந்த மாதிரி சமயங்களில் சிலருக்கு தும்மல் வரும் போது அதை அடக்குவதற்காக, மூக்கையும் வாயையும் தன் கைகளால் மூடிக்கொள்வார்கள். அவ்வாறு தும்மல் ஏற்படும் போது மூக்கை மூடி தும்மலின் வேகத்தைத் தடுக்கும்போது, அது தொண்டையில் உள்ள மென்மையான திசுக்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி காயங்களை உண்டாக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதேபோல் தும்மலை அடக்கி வைக்க முயற்சிப்பது நல்லதல்ல. அது இயற்கையாக வெளிப்பட வேண்டும். அதனை கட்டுப்படுத்த முயன்றால் தலை மற்றும் கழுத்து பகுதியில் அதிக அழுத்தத்தை உண்டாக்கும். அதாவது, ஒருவர் தும்மும்போது வாய் மற்றும் மூக்கை மூடினால் மூச்சுக்குழாயின் மேல் பகுதியில் அழுத்தம் 20 மடங்கு அதிகரிக்கும் எனவும், இதன் காரணமாக ஒரு நபரின் செவிப்பறை கிழியும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் ரத்த நாளங்கள் வீங்கி வெடிப்பதற்கு கூட வாய்ப்பிருக்கிறது.
பக்கவாதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் மார்பு எலும்புகள் உடையலாம் அல்லது வேறு சில கடுமையான காயங்கள் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் இத்தகைய சிக்கல்களை தவிர்க்க தும்மலை இயற்கையாக வெளியே விடுவதே சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பொதுவாக தும்மல் அலர்ஜியால் ஏற்படுவதாகும். நீங்கள் இருக்கும் இடங்களை அதாவது, வீடு, அலுவலம் போன்ற இடங்களை சுத்தமாக வைத்து கொள்வதன் மூலம் தும்மல் வராமல் தடுக்கலாம். அதேபோல் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்வதன் மூலமும் தும்மல் வராமல் தடுக்கலாம்.
ஒரு சிலருக்கு சளி தொல்லையால் கூட தும்மல் ஏற்படலாம். இவர்கள் நீராவி பிடிப்பதன் மூலம் தும்மல் வருவதை தடுக்கலாம். மேலும் ஆவி பிடிக்கும் போது அதில் சிறிது மஞ்சள், 4, 5 பூண்டு பல், சிறிது கல் உப்பு போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை ஆவி பிடிப்பதன் மூலம் மூக்கில் உள்ள நோய்கிருமிகள் அழிந்து தும்மல் வருவது தடுக்கப்படும். இவ்வாறு இயற்கையாக முறைகளை மட்டுமே பயன்படுத்தி தும்மல் வருவதை கட்டுப்படுத்துவது நல்லது.
உங்களுக்கு அடிக்கடி தும்மல் வந்தாலே அல்லது தும்மலால் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம்.