

டிராகன் பழத்தின் (Dragon Fruit) பூர்வீகம் தெற்கு மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்கள் மூலம் இப்பழமானது வியட்நாமுக்குக் கொண்டு செல்லப்பட்டது. தற்போது வியட்நாம், சீனா, தாய்லாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல வெப்பமண்டல நாடுகளில் இது பரவலாகப் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் இப்பழம் நன்றாக விளைகிறது.
டிராகன் பழம் மற்ற பழங்களைப் போல் அல்லாமல் தனித்துவமான வடிவத்தைக் கொண்டது. மெக்சிகோ பூர்வகுடி மக்கள் இப்பழத்தை பிடாயா (Pitaya) என்று அழைத்தனர். இத்தாவரம் வெப்பமண்டலத்தில் வளரும் தாவரமாகும். இச்செடியானது பத்து முதல் அதிகபட்சமாக இருபது அடி வரை வளரும்.
டிராகன் செடியானது கள்ளி ரக (Cactus) வகையைச் சேர்ந்தது. இதற்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை என்பது இதன் சிறப்பாகும்.
ஆனால் வேர்ப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வேர்ப்பகுதியில் தண்ணீர் தேங்கினால் டிராகன் செடியானது அழுகிவிடும். இதன் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இச்செடியை பூச்சிகள் தாக்குவதில்லை. இதனால் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்க வேண்டிய அவசியமும் இதற்கு இல்லை.
நான்கு அல்லது ஐந்து வருடம் காய்ந்த டிராகன் செடியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் தண்டானது மீண்டும் நடப்பட்டு சாகுபடி செய்யப்படுகிறது. இத்தகைய தண்டானது நன்றாக பூ பூத்து காய்க்கும் தன்மை உடையதாக இருக்கும். இல்லை என்றால் எத்தனை வருடங்களானாலும் காய்க்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பரந்து விரிந்து வளரும் இத்தாவரமானது மூங்கில் கழி அல்லது கல் தூண்களை நட்டு அதில் பொருத்திக் கட்டி வளர்க்கப்படுகிறது.
நன்கு முதிர்ந்த காய்ந்த செடியிலிருந்து பெறப்பட்ட தண்டை நட்டால் நட்ட ஒரே வருடத்தில் பூ பூத்துக் காய்த்து நல்ல பலன்களைக் கொடுக்கும். இந்த டிராகன் செடியை நீளமாக வளர விடாமல் வெட்டி கவாத்து செய்தால்தான் செடியானது நன்கு பிரிந்து பரந்து விரிந்து பரவி நிறைய பழங்களைக் கொடுக்கும்.
டிராகன் செடியானது வழக்கமாக மே மாதத்தில் காய்க்கத் தொடங்கும். தொடர்ந்து ஆறு மாதங்கள் காய்க்கும். ஒரு பழத்தின் எடை 250 கிராம் அளவிற்கு இருக்கும். இதற்கு மேலும் எடை கொண்ட பழங்களும் காய்க்கின்றன.
டிராகன் பழத்தில் இரண்டு விதங்கள் இருக்கின்றன. ஒரு பழத்தின் சதையானது வெள்ளை நிறத்தில் கரும்புள்ளிகளுடன் காணப்படும். மற்றொரு வகை பழத்தின் சதையானது சிவப்பு நிறத்தில் காணப்படும். இத்தகைய பழமானது இனிப்புச் சுவையுடன் இருக்கும். டிராகன் பழத்தின் மேல் தோலானது இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
டிராகன் பழத்தில் வெள்ளை சதை கொண்ட டிராகன் பழம், சிவப்பு சதை கொண்ட டிராகன் பழம், மஞ்சள் டிராகன் பழம் என மூன்று முக்கிய வகைகள் உள்ளன. மேலும் இளஞ்சிவப்பு அல்லது ஊதா சதை கொண்ட கலப்பின டிராகன் பழம், புளிப்பு வகை டிராகன் பழம் என சில வகைகளும் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான மருத்துவ குணத்தை உள்ளடக்கியதாக உள்ளது.
டிராகன் பழத்தினுள் இருக்கும் சிறிய கறுப்பு நிற விதைகளில் ஒமேகா சத்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
டிராகன் பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இதில் உள்ள நார்சத்தானது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைப் போக்கும். வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். டிராகன் பழத்தில் கொழுப்பு சத்தானது மிகமிகக் குறைவானதாக உள்ளதால் இதயத்தைப் பாதுகாப்பத்தில் டிராகன் பழங்கள் உதவுகின்றன. டிராகன் பழத்தில் சிறிதளவு கால்சியம் சத்தும் உள்ளதால் எலும்பை பலப்படுத்துவதில் உதவுகிறது.
டிராகன் பழத்தில் குறைந்த அளவு கலோரியும் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு இப்பழம் உதவுகிறது. இப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்தானது பசியைக் கட்டுப்படுத்தி அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வைக் குறைக்கிறது.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference