

இரவில் தயிர் சாப்பிடுவதால் நேரடியாக சளி பிடிக்காது. சளி மற்றும் இருமல் ஆகியவை வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகளால் மட்டுமே ஏற்படுகின்றன; உணவால் அல்ல. ஆனாலும் சிலருக்கு இரவில் தயிர் சாப்பிட்ட பிறகு தொண்டையில் கரகரப்பு அல்லது சளி அடைத்தது போன்ற உணர்வு ஏற்படலாம். இதற்கான அறிவியல் காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
அறிவியல் என்ன சொல்கிறது?
பால் மற்றும் தயிர் போன்ற பொருட்கள் உடலில் சளியை (Mucus) அதிகப்படுத்துவது இல்லை என்பதை நவீன மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. தயிர் சாப்பிடுவதால் சுவாசத் தொற்றுகள் ஏற்படாது.
தயிரில் உள்ள புரதங்களும் கொழுப்பும் உமிழ்நீருடன் சேர்ந்து தொண்டையில் ஒரு மெல்லிய படலத்தை உருவாக்கும். இது சளி பிடித்தது போன்ற ஒரு தற்காலிக உணர்வைத் தருமே தவிர உண்மையான சளி கிடையாது. தயிரின் அடர்த்தியான தன்மை தொண்டையில் படிவதால், சளி பிடித்தது போன்ற ஒரு தற்காலிக உணர்வு சிலருக்கு ஏற்படலாம்.
குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த உடனேயே குளிர்ச்சியான தயிரைச் சாப்பிடும் போது அது தொண்டையில் எரிச்சலையும் தும்மலையும் ஏற்படுத்தலாம். அறை வெப்பநிலையில் உள்ள தயிரைச் சாப்பிடுவதால் இந்தப் பிரச்சனை ஏற்படுவதில்லை.
தயிரில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் (Probiotics) குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. சுவாசத் தொற்றுகள் வராமல் தடுக்கவும் செய்கின்றன. மேலும் இதில் உள்ள டிரிப்டோபான் (Tryptophan) நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.
யார் தவிர்க்க வேண்டும் தெரியுமா?
ஆயுர்வேத மருத்துவத்தின்படி, தயிர் உடலில் 'கபத்தை' அதிகரிக்கும் தன்மை கொண்டது. எனவே ஏற்கனவே ஆஸ்துமா, சைனஸ், ஒவ்வாமை அல்லது அடிக்கடி சளி பிடிக்கும் தன்மை கொண்டவர்களுக்கு இரவில் தயிர் சாப்பிடுவது அசௌகரியத்தை அதிகரிக்கலாம் என்பதால் இவர்கள் இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
இரவில் தயிர் சாப்பிடுவதற்கான பாதுகாப்பான வழிகள்:
குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்தவுடன் சாப்பிடாமல் அதனை அறை வெப்பநிலைக்கு கொண்டு வந்த பிறகு சாப்பிடலாம்.
அதிகம் புளித்த தயிர் தொண்டையில் கரகரப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே புளித்த தயிர் எடுத்துக் கொள்வதை தவிர்த்து விட வேண்டும்.
இரவில் கெட்டித் தயிருக்கு பதிலாக தண்ணீர் கலந்த மோராக எடுத்துக் கொள்வது நல்லது. அத்துடன் அதில் சிறிது மிளகுத்தூள் அல்லது சீரகத்தூள் சேர்த்துப் பருகுவது எளிதில் ஜீரணமாகுவதற்கு உதவும்.
தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடித்துக் கொள்வதும் செரிமானத்திற்கு உதவும்.
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
பொதுவாக சளி ஒரு வாரத்திற்குள் தானாகவே சரியாகிவிடும். ஆனால் சில அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் மருத்துவரை உடனடியாக பார்ப்பது நல்லது.
102°F (38.9°C) அல்லது அதற்கு மேல் காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அல்லது காய்ச்சல் குறைந்து மீண்டும் வந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம்.
மூச்சுத் திணறல், நெஞ்சு வலி அல்லது சுவாசிக்கும் பொழுது விசில் போன்ற சத்தம் ஏற்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவரை பார்க்க வேண்டும்.
சளி, இருமல் அல்லது தொண்டை வலி ஒரு வாரத்திற்கு மேலாக குறையாமல் இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
காது வலி, கடுமையான தலைவலி இருந்தால். கண்கள், நெற்றி அல்லது கன்னப் பகுதிகளில் கடுமையான வலி மற்றும் அழுத்தம் இருந்தால் அது சைனஸ் தொற்றாக இருக்கலாம். எனவே மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
எச்சில் விழுங்க முடியாத அளவிற்கு கடுமையான தொண்டை வலி அல்லது சளியில் ரத்தம் கலந்து வருவது போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம்.