
காலையில் அரைகுறையாக எழும்போதே, காபி அல்லது டீயை கையில் வாங்கி, குடித்துக் கொண்டே எழுவது பலரது வழக்கமாக உள்ளது. சிலர் அந்த காபி அல்லது டீயில் சில பிஸ்கட்டுகளை முக்கி எடுத்து சாப்பிடுவதும் உண்டு. இன்னும் சிலர் மைதாவில் செய்த பிரட் அல்லது பன்னை, டீ காபியில் நனைத்து சாப்பிட்டு தான் எழுவார்கள். இன்னும் சிலர் தன்னை வெள்ளைக்கார வம்சம் என்று நினைத்துக் கொண்டு , எழுந்து சில வினாடிகள் கழித்து பிரட்டில் இனிப்பு மிகுந்த ஜாம் வைத்து சாப்பிடுகிறார்கள்.
சிலர் காலை எழுந்தவுடன் ஏதேனும் ஒரு இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்; அப்போது தான் அந்த நாள் முழுக்க இனிமையாக இருக்கும் என்று நம்புகிறார்கள் போலும். இந்த இனிப்பு நிறைந்த உணவுகள் அனைத்தும் வெறும் வயிற்றில் உள்ளே செல்கிறது. காலையில் முதல் வேலையாக இரைப்பை வேலை செய்ய துவங்கும் போதே இனிப்புகளுடன் ஆரம்பிக்கிறது.
வெறும் வயிற்றில் இனிப்புகள் உள்ளே செல்லும் போது உடலில் இரத்த சர்க்கரை உடனடியாக அதிகரிக்கிறது. இரத்த சர்க்கரையை உடனடியாக சமாளிக்க கணையம் அதிகளவு இன்சுலினை சுரக்கிறது. தொடர்ச்சியாக கணையம் அதிகப்படியான இன்சுலினை சுரக்கும் போது விரைவில் அதன் திறனை இழக்க ஆரம்பித்து விடும். காலையில் செரிமான அமைப்பு அதிக உணர்திறன் மிகுந்ததாக இருக்கும். அந்த நேரத்தில் இனிப்புகளை தவிர்ப்பது செரிமான அமைப்பின் திறனை பாதிக்காமல் இருக்கும்.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவின்படி , காலையில் வெறும் வயிற்றில் இனிப்புகளை சாப்பிடுவது எதிர்கால இன்சுலின் செயல்திறன் குறைவுக்கு வழி செய்யும். இதனால் வகை 2 நீரழிவு நோய் ஏற்படும் , மேலும் நீரழிவு நோயின் துணை நோய்களான இரத்த அழுத்தம் , இரைப்பை புண் , கெட்ட கொலஸ்ட்ரால் ஆகியவற்றையும் ஏற்படுத்தும். இதனால் உடல் ஆரோக்கியம் மோசமாக கெடும் என்று குறிப்பிட்டுள்ளது.
சிலர் காலையில் வெறும் வயிற்றில் இனிப்புகள் சாப்பிட்டால் அது உடனடி ஆற்றலை தரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இரத்த சர்க்கரை அளவு உடனடியாக ஏறி, வேகமாக இறங்கும் போது தீடிர் சோர்வு, ஆற்றல் தீர்ந்து போன உணர்வினை ஏற்படுத்தும். சிலருக்கு கை கால் நடுக்கம் கூட வரலாம். இந்த நிலையை தீடிர் சர்க்கரை குறைவு அல்லது சுகர் டிராப் என்று அழைக்கிறார்கள். இந்த நிலை சர்க்கரை உடலில் நோய் வந்து விட்டதற்கான அறிகுறியாக இருக்கிறது. இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
வெறும் வயிற்றில் இனிப்புகளை சாப்பிடுவது கிரெலின் எனப்படும் பசியைத் தூண்டும் ஹார்மோனை ஊக்குவிக்கிறது. இதனால் அடிக்கடி பசி ஏற்பட்டு அதிகமாக உணவு சாப்பிட ஆரம்பித்து மொத்த செரிமான மண்டலத்தின் செயல்திறனை பாதிக்க வைக்கும் மேலும் உடல் எடையையும் அதிகரிக்கும். இதனால் மற்ற நோய்களும் வந்து சேரும்.
இனிப்புகளை சரியான விதத்தில் அளவோடு சாப்பிட வேண்டும். காலை உணவை சாப்பிட்ட பின் அல்லது மதிய உணவு பின் அல்லது சாப்பிடும் போது கூட சேர்த்து சாப்பிடலாம். இரவில் சாப்பிடுவதை தவிர்த்து விடலாம். எப்போது இனிப்பு சாப்பிட்டாலும் ஏதேனும் ஒரு பிரதான உணவை சாப்பிடும் போதோ, சாப்பிட்ட பின்போ சாப்பிடுங்கள்.