ஒருவருடைய இரத்த சர்க்கரை அளவை இனிப்புகள் சாப்பிடுவது, மாத்திரைகள் சாப்பிடாமல் இருப்பது மட்டுமே உயர்த்தாது. நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் அலட்சியமாக இருக்கும் 10 விஷயங்கள் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்யலாம். அவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
1. தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் தூங்காதவர்களுக்கு கார்டிசோல் என்கிற மன அழுத்த ஹார்மோன் அதிகரித்து ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஆகவே தினமும் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை செய்து சரியாக தூங்க முயற்சி செய்யுங்கள்.
2. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது.
நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சிறுநீரகம் அதிகப்படியான குளுக்கோசை வெளியேற்ற முடியாது என்பதால் உடலுக்கு தேவையான தண்ணீரை பருகி உடலை நீரேற்றுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
3. கோடை காலத்திலும் உடற்பயிற்சி செய்யும் போதும் அதிக வியர்வை வெளியேறுவதால் அது போன்ற சமயங்களில் அதிக தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
4. நாம் பிற நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளான ஸ்டீராய்டுகள், டையூரிக் மருந்துகள், பீட்டா பிளாக்கர்ஸ், கருத்தடை மாத்திரைகள் கூட சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என்பதால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இது போன்ற மருந்துகளை பயன்படுத்துதல் கூடாது.
5. காலை உணவை தவிர்ப்பது இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்து ரத்த சர்க்கரை அளவை உயர்த்தலாம் என்பதால் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளுக்கு பதிலாக காலையில் புரதம் நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் .
6. செயற்கை இனிப்பூட்டிகள் சர்க்கரையை உயர்த்தா விட்டாலும் நாளடைவில் குடல் பாக்டீரியாக்களில் சமநிலையை மாற்றி குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மாற்றி ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் என்பதால் இவற்றை தவிர்த்து விட வேண்டும்.
7. புரோட்டின் பார்கள், சாலட் டிரெஸ்ஸிங் என்ற புரோட்டின் பவுடர்கள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கிறதா என தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்.
8. காய்ச்சல், சிறுநீர் பாதை தொற்று போன்ற உடல்நிலை சரியில்லாத சமயங்களில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பதால் அத்தகைய நேரங்களில் ரத்த சர்க்கரை அளவை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
9. மாதவிடாய் காலம், கர்ப்ப காலம், மாதவிடாய் நிறுத்தம் என்ற மெனோபாஸ் போன்ற காலங்களில் பெண்களுக்கு ஹார்மோன்களில் ஏற்படும் சமநிலையால் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பதால் பெண்கள் இது போன்ற சமயங்களில் அடிக்கடி ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
10. மிதமான உடற்பயிற்சிகள் சர்க்கரை அளவை குறைக்க செய்யும். ஆனால் மிகக் கடுமையான உடற்பயிற்சிகள் தற்காலிகமாக ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் என்பதால் கடுமையான உடற்பயிற்சிகள் செய்யும் போது அதிக ஆற்றலுக்காக கூடுதல் குளுக்கோஸ் சாப்பிடுவது மேலும் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச்செய்யும் என்பதால் தீவிரமான உடற்பயிற்சியை விடுத்து மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)