'பூசினாப்ல உடம்பு' இருந்தால் நன்று; பூசணி சைஸில் இருந்தால் நன்றன்று!

ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைத்து, இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ எளிய வழிகள் இதோ!
Weight Loss Healthy Lifestyle | உடல் எடை
Weight Loss Healthy Lifestyle | உடல் எடைAI Image
Updated on

குறைவான எடை, திருப்தியான ஆரோக்கியத்தின் அஸ்திவாரம் . ஆம்... கச்சிதமான உடம்பு இருந்தால் கலகலப்புக்குப் பஞ்சமேயில்லை.. அப்போ என்ன பண்ணலாம்..? யோசிக்கலாம் வாங்க ...

ஸ்லிம்மான உடல் வேணும்ன்னு நெனைக்கிறது தப்பேயில்ல.. அதுக்கு முயற்சியும் வேணும். பொறுமையும் அவசியம். பொதுவாக உடம்பு வெயிட் கூடுதலுக்கு காரணங்கள் இருக்கு.

முதலில் உணவு பழக்கம். குறைச்சு சாப்பிட்டா எடை கூடாது என்ற எண்ணம் சரின்னு சொல்ல முடியாது. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஒரே ஒரு கண்டிஷன். அதற்கேற்ப உடல் உழைப்பு தேவை. நடை பயிற்சி செய்யலாம். வியர்வை வரும் வரை நடக்க வேண்டும். காலையோ, மாலையோ இளம் வெயிலில் கை வீசி நடப்பது நலம்.

பதினைந்து வயது வரை வளரும் பருவம். அப்போ உடல் எடை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. கூடினால் கவலை வேண்டாம். குறைந்தால் மகிழ வேண்டாம். இருபது வயதை கடக்கும் போது உடம்பின் மேல் அக்கறை அவசியம். எது சாப்பிடணும், எப்படி சாப்பிடணும், எப்போது சாப்பிடணும் என்ற விபரம் தெரிந்திருக்க வேண்டும். அந்த விஷய ஞானம் புரிந்து செயல்பட்டால் தேவைக்கு அதிகமான எடை கூடுவதை தவிர்த்து விடும்.

எல்லோருடைய உடல்வாகும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒருவருக்கு ஏற்றுக் கொள்ளும் உணவு, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தாலும் மற்றவருக்கும் ஒத்து வரும்னு முடிவு செய்யக் கூடாது. உடம்பின் தன்மையறிந்து டயட்டை தொடர்ந்தால் ஒல்லியான தேகம் உங்களுடையதாக இருக்கும். அதே சமயம் உறுதியாக இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

மெலிந்த மேனிக்கு எதிரிகளில் மதிய தூக்கமும் ஒன்று. அப்போ மத்தியானம் தூங்கக் கூடாதான்னு கேட்கிறீங்க தானே...? தாராளமா தூங்கலாம். அதற்கும் லிமிட் இருக்கு. பதினைந்து நிமிடங்கள் போதும். சோர்வாக இருந்தால் அரை மணிக்கு மேல் வேண்டாம். எங்க பாட்டி மதியம் சாப்பிட்டவுடன், "காலையிலயிருந்து வேலை ஜாஸ்தியா பார்த்துட்டேன். கொஞ்ச நேரம் குறுக்கு (இடுப்பு) சாய்ச்சிட்டு வர்றேன்"னு சொல்லி, கால் மணிநேரம் ஆழ்ந்த நித்திரைக்குப் பின் விழித்து, சடக்கென எழுந்து விடுவார்கள். அதனால், கடைசி வரை அவர்கள் மட்டுமென்ன நிறைய பாட்டிகள் 50Kg தாஜ்மஹால்களாகவே இருந்தார்கள். இன்றைக்கு என்ன நடக்கிறதென்றால், டயர்டா இருக்கு, பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன்னு சொல்லி, ஏசியை ஆன் பண்ணி இரண்டு மணி நேரம் தூங்குகிறார்கள். மதிய உணவு செரிமானவதில் சிக்கலாகி, அங்கங்கே கொழுப்பு படிந்து உடலின் சுற்றளவு கூடி விடுகிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தை இரவில் மூச்சு விட சிரமப்படுகிறதா? இதோ மருத்துவரின் எச்சரிக்கை!
Weight Loss Healthy Lifestyle | உடல் எடை

எடையை குறைக்கிறேன் பேர்வழின்னு சாப்பிடும் உணவின் அளவை குறைத்து விடாதீர்கள். வயிறு நிறைந்த உணர்வு வரும் வரை சாப்பிடுங்கள். ருசியான உணவாகவே இருந்தாலும், போதும் என்ற எண்ணம் வந்தவுடன் நிறுத்தி விடுங்கள்.

சிக்கன சிகாமணியாக்கும் நான் எனக் கூறிக் கொண்டே, மீந்த உணவுகளை உண்பவர்கள் சிலருண்டு. அதுவும் தவறு. தேவைக்கு தயார் பண்ணுங்கள். மீதம் இரண்டு இட்லி தான் இருக்கு, ஒரு சப்பாத்தி தான் இருக்கு, காலி பண்ணினால் பாத்திரத்தை கழுவி விடலாமே என்ற நல்லெண்ணெத்துடன் இருப்பதாக நினைத்து அதிகமாக சாப்பிடுபவர்களும் உண்டு. அதுவும் உடல் பெருத்திட ஒரு காரணமாகும்.

இதையும் படியுங்கள்:
சோர்வை விரட்டி வலிமை தரும் கோண்ட் கதிரா: முழுமையான வழிகாட்டி!
Weight Loss Healthy Lifestyle | உடல் எடை

சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னரும், சர்ஜரி நடந்தாலும் உடல் எடை கூடும். உதிர இழப்பால் குறைந்த சக்தியை திரும்பப் பெற நெய் அதிகம் சேர்ப்பதால் வெயிட் கூடிட வாய்ப்புகள் அதிகமுண்டு. இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பியதும், தேவையான டயட், உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைக்கலாம்.

முடிக்குமுன் ஒரு விஷயம். பூசினாப்ல உடம்பு இருந்தால் நன்று. பூசணி சைஸில் இருந்தால் நன்றன்று.

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com