

சோர்வை நீக்கவும் புத்துணர்ச்சி பெறவும் பலரது முதல் தேர்வாக இருப்பது எனர்ஜி டிரிங்க்ஸ் (Energy drinks). ஆனால், தற்காலிக உற்சாகத்திற்காக நீங்கள் குடிக்கும் இந்த பானங்கள், உங்கள் உடலோடு சேர்ந்து கண்களையும் பாதிக்கின்றன.
எனர்ஜி டிரிங்க்ஸில் மிக அதிக அளவில் காஃபின் சேர்க்கப்படுகிறது. ஒரு சராசரி காபியை விட பல மடங்கு அதிக காஃபின் இதில் உள்ளது. இந்த அதிக காஃபின் ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து, ரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது. முக்கியமாக, ஆரோக்கியமான மனிதர்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், ஏற்கனவே குளுக்கோமா பாதிப்பு உள்ளவர்கள் அதிக காஃபின் எடுக்கும்போது பாதிப்பு தீவிரமடைய வாய்ப்புள்ளது.
ஒரு கேன் எனர்ஜி டிரிங்கில் சுமார் 25 முதல் 50 கிராம் வரை சர்க்கரை கலக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அதிக சர்க்கரை உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். இது விழித்திரையைப் பாதிக்கும் 'டயபெடிக் ரெட்டினோபதி' ஏற்பட மிக முக்கிய காரணமாகிறது.
எனர்ஜி டிரிங்க்ஸ் (Energy drinks) ஒரு டையூரிடிக் ஆகச் செயல்படுகின்றன. அதாவது, இவை உடலில் உள்ள நீரை சிறுநீர் வழியாக வெளியேற்றத் தூண்டும். உடல் நீர்ச்சத்தை இழக்கும்போது, கண்களில் உள்ள ஈரப்பதம் குறைகிறது. இதனால் கண்கள் சிவந்து போதல், எரிச்சல் மற்றும் வறண்ட கண் பாதிப்பு உண்டாகிறது. கண்கள் போதுமான அளவு ஈரப்பதமாக இல்லாவிட்டால், கண்ணின் மேலடுக்கு பாதிக்கப்பட்டுத் தொற்று நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
எனர்ஜி பானங்கள் நரம்பு மண்டலத்தை அதீதமாகத் தூண்டுவதால், பலருக்குக் கண்களைச் சுற்றியுள்ள தசைகள் தன்னிச்சையாகத் துடிக்கத் தொடங்கும். இதை நாம் சாதாரணமாகக் கடந்து விடுவோம். ஆனால் இது உங்கள் நரம்பு மண்டலம் அதிகப்படியான அழுத்தத்தில் இருப்பதன் அறிகுறியாகும். தூக்கமின்மையும் இதனுடன் சேரும்போது, கண்களுக்குக் கீழே கரு வளையங்கள் தோன்றுவதுடன், கண்களின் தசைகள் தளர்வடைந்து பார்வைத்திறன் குறையத் தொடங்குகிறது.
ரசாயனங்கள் நிறைந்த எனர்ஜி டிரிங்க்ஸை குடிப்பதால் உடலின் வளர்சிதை மாற்றம் சீர்குலைகிறது. சத்தான உணவுகளுக்குப் பதிலாக எனர்ஜி பானங்களை அதிகம் குடிப்பவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். இதனால், மறைமுகமாக வைட்டமின் A, C, E குறைபாடு ஏற்பட்டு பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது. எனவே, செயற்கை பானங்களைத் தவிர்த்து, இளநீர், பசுமையான காய்கறிகள் மற்றும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதே உங்கள் கண்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவியாகும்.
பெரும்பாலும், எனர்ஜி டிரிங்க்ஸைத் (Energy drinks) தொடர்ந்து மற்றும் அதிகமாக குடிப்பவர்களுக்கே பொருந்தும். அவ்வப்போது ஒருமுறை குடிப்பதால் உடனடி பார்வைப் பறிபோகும் ஆபத்து இல்லை. ஆனால் நீண்ட கால அடிப்படையில் உங்கள் பார்வைக்கு இது நல்லதல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)