உலக மக்கள் தொகையில் சுமார் கால் பகுதியினர் காசநோய் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இது குணப்படுத்தக் கூடியது மற்றும் தடுக்கக் கூடியது.
காசநோய் என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இது பெரும்பாலும் நுரையீரலை பாதிக்கிறது. காசநோய் உள்ளவர்கள் இருமும் போது தும்மும் போது காற்றின் மூலம் பரவுகிறது
காசநோயின் பொதுவான அறிகுறிகள்:
உடலின் எந்தப் பகுதி காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து மக்களுக்கு ஏற்படும் அறிகுறிகளும் மாறுபடும். பொதுவாக காச நோய் நுரையீரலை பாதிக்கும், அதே வேளையில் சிறுநீரகங்கள், மூளை, முதுகெலும்பு மற்றும் தோலைக் கூட பாதிக்கும்.
எடை இழப்பு:
பொதுவாக ஒருவருடைய உடல் எடை குறைந்து கொண்டே வந்தால் அவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று தான் சந்தேகப்படுவார்கள். ஆனால் உண்மையில் அவருக்கு காசநோய் இருந்தாலும் அது எடை இழப்பை ஏற்படுத்தும்.
பசியின்மை:
காசநோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு பசிக்காது சாப்பிடுவதில் ஆர்வம் குறைந்து போகும்.
தொடர்ச்சியான இருமல்: மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடிக்கும். சளி வெளியேறும் போது ரத்தத்துடன் வெளியேறும்.
மார்பு வலி: சுவாசிக்கும் போதும் இருமும் போதும் மார்பில் வலி உண்டாகும்.
காய்ச்சல் மற்றும் குளிர்: லேசான காய்ச்சல் மற்றும் குளிர் இருக்கும். பெரும்பாலும் இரவில் இந்த நிலை தீவிரமாக இருக்கும்
வியர்வை: தூக்கத்தின் போது அதிகமாக வியர்க்கும்.
சோர்வு மற்றும் பலவீனம்: கடுமையான உடல் செயல்பாடு இல்லாவிட்டாலும் கூட உடல் சோர்வாக, பலகீனமாக உணருவார்கள்.
மூளையில் காச நோய் ஏற்பட்டு இருந்தால் கடுமையான தலைவலி, குழப்பம் கழுத்து விரைப்பு, வாந்தி போன்றவை ஏற்படும்.
சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் சிறுநீரில் ரத்தம் வெளியேறும்.
முதுகெலும்பு: முதுகு வலி மற்றும் முதுகெலும்பில் வலி ஏற்படும். அதனால் நடக்கவும் சிரமமாக இருக்கும்.
மூட்டுகள்: மூட்டுகள் மற்றும் எலும்புகள் பாதிக்கப்படும். மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலி ஏற்படும். இதனால் நடக்கவும் சிரமமாக இருக்கும்.
குழந்தைகளுக்கு காசநோயின் அறிகுறிகள்:
எடை அதிகரிக்காமல் இருத்தல், உணவு உண்ணுதலில் நாட்டமின்மை, வாந்தி, சோம்பல், தலையில் மென்மையான புள்ளிகள் மற்றும் வீக்கம் காணப்படுதல், தொடர்ச்சியான காய்ச்சல், எடை இழப்பு மற்றும் வளர்ச்சி தாமதங்கள், வீங்கிய சுரப்பிகள் போன்றவை அறிகுறிகள் ஆகும்.
காசநோய் தொற்றுப் பரவலைத் தடுக்க வழிமுறைகள்:
1. நீடித்த இருமல், காய்ச்சல் மற்றும் எடை இழப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரின் உதவியை நாட வேண்டும். காச நோய்க்கான ஆரம்ப காலத்தில் எடுக்கும் சிகிச்சை நோய் பரவுவதைத் தடுக்கும். குணமாவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தும். காசநோய் தடுப்பு சிகிச்சை தொற்று நோயாக மாறுவதை தடுக்கிறது.
2. காசநோய் பாதிக்கப்பட்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் வாயை மூடிக் கொண்டு இரும, தும்ம வேண்டும். இதனால் மற்றவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும். மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது.
3. எச். ஐ. வி தொற்று உள்ளவர்கள் கண்டிப்பாக காசநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இவர்களுக்கு காசநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
4. தமிழ்நாட்டில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மூலம் காசநோயை எதிர்த்து போராடுவதற்கு அரசாங்கம் பல உத்திகளை செயல்படுத்தி வருகிறது. ஆரம்பகால கண்டறிதலை எளிதாக்குவதற்காக நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போஷன் யோஜனா திட்டத்தின் படி காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவுக்கான நிதி ஊக்கத்தொகை வழங்குகிறது.