சர்க்கரை நோயால் உலக அளவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், அதனால் ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ பல வழிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்றுதான் உடற்பயிற்சி செய்வது. உடற்பயிற்சி செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து பல்வேறு நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது.
உடற்பயிற்சி ஏன் முக்கியம்?
சர்க்கரை நோயால் உடலில் இன்சுலின் போதுமான அளவில் இல்லாமல் போகும் அல்லது உடல் செல்கள் இன்சுலினை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத நிலை ஏற்படும். இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் நாம் இதை மாற்றி அமைக்க முடியும்.
சர்க்கரை நோயாளிகளுக்கான உடற்பயிற்சிகள்:
நடைப்பயிற்சி: சர்க்கரை நோயாளிகள் நடைபயிற்சி செய்வது மிகவும் நல்லது. இது எளிதான மற்றும் பயனுள்ள உடற்பயிற்சியாகும். தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் வேகமாக நடப்பது மூலமாக ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.
சைக்கிள் ஓட்டுதல்: சைக்கிள் ஓட்டுதல் கால்கள் மற்றும் இதயத்தை வலுப்படுத்தும் ஒரு சிறந்த உடற்பயிற்சி. இது ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த சர்க்கரையை உறிஞ்சும் தன்மையை குறைக்கிறது.
நீச்சல்: நீச்சல் உடற்பயிற்சி உடலின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்தும் ஒரு முழுமையான உடற்பயிற்சியாகும். இது மூட்டுகளுக்கு ஏற்படும் அழுத்தத்தை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும்.
யோகா: யோகா உடல் மற்றும் மனதை ஒருங்கிணைக்கும் ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். இது உங்கள் உடலின் நெகிழ்ச்சியை அதிகரித்து மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
எதிர்ப்பு பயிற்சிகள்: எதிர்ப்பு பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்வது மூலமாக உங்கள் தசைகள் வலுவாகி, அதன் நிறை அதிகரிக்க உதவும். உடல் தசை அதிகரித்தால், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
மேலே, குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். இவற்றை முயற்சிப்பதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது. உடற்பயிற்சிக்கு முன்பு மோசமான உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உடற்பயிற்சி செய்யும் போது போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வசதியான நன்கு சுவாசிக்கக்கூடிய ஆடைகளை அணியவும். ஒரு வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது தினசரி 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் எந்த அளவுக்கு முயற்சி செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுடைய ரத்த சர்க்கரை அளவை நீங்கள் கட்டுப்படுத்தலாம். இவற்றைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.