ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினம் அரைக்கிலோ முதல் முக்கால் கிலோ வரை தனிநபர் ஒருவர் காய் கனி வகைகள் சாப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியமான யோசனைகளை முன் வைக்கின்றனர் நிபுணர்கள்.
தினமும் குறைந்தது ஐந்து வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் தான் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உடல் ஆரோக்கியத்திற்கு மூன்று வேளை உணவை விட, அதில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவு மிக முக்கியம். ஆயுள் காலம் அதிகரிக்க தினமும் இரண்டு பழங்கள் மற்றும் மூன்று காய்கறிகள் சாப்பிடலாம் என்கிறார்கள் அமெரிக்காவின் ஹார்வர்டு ஸ்கூல் ஆப் ஹெல்த் ஆய்வாளர்கள். அதை விட அதிகமாக சாப்பிடுவது பலன் தராது. எல்லா பழங்களும் காய்கறிகளும் சமமானது அல்ல, அதிக இலை பச்சை மற்றும் குறைவான மாவுச்சத்துள்ள காய்கறிகள் நோயின் அபாயத்தை குறைக்க உதவும் .
கீரைகள், முட்டைக்கோஸ் , டர்னிப், கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகள் மற்றும் பழங்களில் சிட்ரஸ் பழங்கள், ஸ்டிராபெர்ரி பழங்கள் நல்லது என்கிறார்கள். உணவில் மூன்றில் ஒரு பங்கு நார்ச்சத்து நிறைந்த மாவுச்சத்துகளாக இருக்க வேண்டும். இவை குறைந்த கலோரியைக் கொண்டவை. உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க, காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
புரதத்தின் நல்ல மூலமான மீனை, வாரத்திற்கு இரு முறையாவது உணவில் சேருங்கள். எண்ணெய் மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்புகள் இதயத்திற்கு நல்லது.
தினமும் 8 முதல் 10 டம்ளர்கள் தண்ணீர் குடிப்பது உங்களது தோல், தசைகள் உள்ளிட்ட பல பாகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்கிறார்கள். உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க போதுமான தண்ணீர் குடிக்கவும்.
அதிகப்படியான கொழுப்பு இதய அபாயத்தை அதிகரிக்கும். ஆண்கள் 30 கிராம், பெண்கள் 20 கிராமுக்கு மேல் நிறைவுற்ற கொழுப்பைத் தவிர்க்கவும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு ஒருவரின் ஆயுளைக் குறைக்கிறது. உரிய அளவுக்கு மேல் உடல் எடை கொண்டவர்கள், வயதான தோற்றத்தை எளிதில் பெற்றுவிடுவார்கள்.
அதிக சர்க்கரை உடல் பருமன் மற்றும் பல் சிதைவுக்கு வழிவகுக்கும். பழங்களில் உள்ள சர்க்கரை நார்ச்சத்து காரணமாக மெதுவாக இரத்தத்தில் கலக்கிறது.
அதிக உப்பு இரத்த அழுத்தத்தை உயர்த்தி, இதய நோய்களுக்கு வழிவகுக்கும். பெரியவர்கள் ஒரு நாளைக்கு 6 கிராமுக்கு மேல் உப்பு சாப்பிடக்கூடாது.
துரித உணவுகள் எனும் ஜங்க்புட் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஜங்க்புட் சாப்பிடுவது உங்களை விரைவில் முதுமை அடையச் செய்யும் என்கிறார்கள் அமெரிக்க ஜர்னல் ஆப் கிளினிக்கல் நியுட்ரிசன் ஆய்வாளர்கள். மற்ற உணவுகளை விட இதில் 14 சதவீதம் கலோரிகள் அதிகம் என்பது தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.
தினமும் காலையில் 15 நிமிடங்களும், மாலையில் 15 நிமிடங்களும் குறைந்தபட்ச உடற்பயிற்சி செய்தால், கிழட்டுத்தன்மை அடைவதில் இருந்து உடலை பாதுகாக்கலாம். இதற்கு உடனடியாக பலன் தெரியாவிட்டாலும், காலப்போக்கில் நல்ல பலன் தெரியும். வழக்கமான உடற்பயிற்சியும் சுறுசுறுப்பும் கடுமையான நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
புகைப்பழக்கம் பல்வேறு வகையான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால் அந்த பழக்கத்தை உடனே கைவிட வேண்டும். புகைப்பழக்கம் சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதை துரிதப்படுத்துகிறது. புகைப்பழக்கத்தால் , தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மையை சருமம் இழக்கிறது.
சுற்றுச்சூழல் காரணமாக எழும் புகை, தூசி ஆகியவை உடலில் 'பிரீரேடிக்கல்சைத்' தோற்றுவிக்கும். அது நாளடைவில் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். அன்றாடம் நம் வீடுகளில் தேங்கும் தூசிகளில் 44 வகையான ரசாயனங்கள் இருக்கிறது என்கிறார்கள். அதில் முக்கியமாக "எண்டோகிரைன் டிஸ்தப்டிங்": எனும் கெமிக்கல் நம் உடலின் நாளமில்லா சுரப்பிகள் மற்றும் ஹார்மோன்களை பாதிக்கும் என்கிறார்கள் அமெரிக்காவின் டியுக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். எனவே வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
மன அழுத்தத்தை தவிருங்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபட தியானமே சிறந்த மருந்து. மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் தியானத்திற்கு உண்டு. மன அழுத்தங்களை குறைப்பதில் ஆழ்ந்த தூக்கம், உடற்பயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் இன்னிசை கேட்பதும் முக்கியமாக கை கொடுத்து காப்பாற்றி வருகிறது என்கிறது ஆய்வுகள்.
மாசு சூழ்ந்த உலகில், உணவுப் பொருட்களில் கவனம் செலுத்தி, உட்கொள்ளும் அளவிலும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு உடற்பயிற்சியை இடைவிடாது தொடர்ந்தால், நீண்ட ஆயுளுடன் நிம்மதியாக ஆரோக்கியமாக வாழ முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.