
தற்போது உள்ள காலக்கட்டத்தில் செல்போன், டீ.வி, லேப்டாப் என்று டிஜிட்டல் திரையை பார்க்காமல் இருக்க முடிவதில்லை. அதிலும் நம்முடைய வேலைகளும் டிஜிட்டல் பொருட்களை சார்ந்து இருப்பதால், அதை பார்க்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. டிஜிட்டல் திரையை அதிக நேரம் பார்ப்பதால் கண்களில் பாதிப்பு ஏற்படும். தொடர்ந்து டிஜிட்டல் திரையை பார்த்துக் கொண்டிருந்தால் நம்முடைய கண்களே இமைக்க மறந்துவிடும்.
நம்முடைய கண்களை இமைகளே பாதுகிக்கின்றன. ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 20 முறை இமைக்கின்றோம். நம்முடைய கண் நரம்புகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது டிஜிட்டல் திரையை அதிகமாக பார்த்துக் கொண்டிருப்பதும் நம் கண்களை இமைக்க மறக்க செய்யும். நம் கண்களில் உள்ள இமைகளில் சிறிய துவாரங்கள் இருக்கும். இதில் இருந்து சுரக்கும் எண்ணெய் பசை நம் கண்களை பாதுகாத்து ஈரபதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
இதனால் கண்கள் வறண்டு போகாமல் இருக்கும். சில சமயங்களில் நம் ஆர்வமாக வேலை செய்யும் போது இமைக்க மறந்து விடுவோம். இதுப்போல அதிக நேரம் டிஜிட்டல் திரையை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னனென்ன தெரியுமா? இதனால் நம் கண்களில் Digital eye strain என்ற பிரச்னை ஏற்படும். இதனால் கண்களில் வறட்சி ஏற்பட்டு, பார்வை மங்கக்கூடும், கண்களில் கட்டிகள் ஏற்படும், பாக்டீரியா தொற்றுகளும் வரக்கூடும்.
கண்கள் வறட்சி அடைவதால், அதிகமாக கண்ணீர் சுரக்கத் தொடங்கும். இதை சரி செய்ய நல்ல கண் மருத்துவரை அணுகி மருந்துகள் எடுத்துக் கொள்வது இப்பிரச்னையை குணமாக்கும். இதனால் ஏற்படும் இன்னொரு பிரச்னை Exposure keratitis ஆகும். நம் கண்களில் உள்ள கருவிழியில் ஆறு லேயர்கள் உள்ளன. அதில் கருவிழியை பாதுகாப்பது Epithelium layer ஆகும். அதிக நேரம் போன் போன்றவற்றை பார்த்துக் கொண்டிருப்பது இந்த லேயரை வறட்சியாக்கும். இதனால் அரிப்பு போன்ற பிரச்னை ஏற்படும்.
டிஜிட்டல் திரையை பார்த்துக் கொண்டிருப்பது Myopia என்ற கிட்டப்பார்வையை ஏற்படுத்தும். இந்த பிரச்னையை போக்க கண்ணாடி அணிய வேண்டிவரும். இதை சரிசெய்ய முதலில் டிஜிட்டல் திரையை அதிகம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அடுத்து 20-20-20 விதியை பின்பற்ற வேண்டியது அவசியம்.
அதாவது கம்யூட்டர், போன், டீ.வி ஆகியவற்றை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தூரத்தில் உள்ள பொருளை 20 விநாடிகள் பார்ப்பதாகும். இதனால் கண்களில் இமைக்கும் தன்மை மேம்படும், கண்களுக்கு ஓய்வு கிட்டும். தினமும் கட்டாயம் எட்டு மணி நேர தூக்கம், 2 லிட்டர் தண்ணீர் குடிப்பதை அவசியம் வைத்துக்கொள்வது சிறந்தது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)