6 மாதம் முடிந்த குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய முதல் உணவுகள்!

Baby Eating - குழந்தை உணவுகள்
Baby Eating - குழந்தை உணவுகள்
Updated on: 

ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் குழந்தையின் முக்கிய உணவு. ஆறு மாதங்கள் நிறைவடைந்ததும் குழந்தையின் ஊட்டச்சத்துத் தேவைகள் அதிகரிப்பதால், தாய்ப்பாலுடன் இணைத்து துணை உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் வருகிறது. குழந்தை தலை மற்றும் கழுத்தை நன்றாகக் கட்டுப்படுத்தி உட்கார முடிவது, உணவை வாயில் ஏற்று விழுங்குவது போன்ற தயார்நிலை அறிகுறிகளும் இருக்க வேண்டும். தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்துக்கொண்டே புதிய உணவுகளை மெதுவாக அறிமுகப்படுத்துவதே சரியான அணுகுமுறை.

முதல் உணவு எளிமையாக இருக்கட்டும்!

நமது வீட்டு சமையலறையிலேயே குழந்தையின் முதல் உணவு தயாராகிவிடும். நன்றாக வேகவைத்த அரிசிக் கஞ்சி, அரிசி சாதத்தை நன்றாக மசித்து வழங்குதல், கேழ்வரகு, சோளம், கம்பு போன்ற தானியங்களை நன்றாக வேகவைத்து மென்மையாக்குதல் போன்றவற்றில் தொடங்கலாம். ஆரம்பத்தில் ஒரே ஒரு பொருளைக் கொண்டு சிறிய அளவில் கொடுப்பது குழந்தைக்கு புதிய சுவையைப் பழக்குவதற்கும் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் காரணத்தைக் கண்டறிவதற்கும் உதவும்.

Q

கஞ்சி மட்டும் போதுமா?

A

கஞ்சி ஆரம்பத்திற்கு ஏற்றது. ஆனால் குழந்தையின் உணவு கஞ்சி மட்டுமே என்ற நிலை நீண்ட காலம் தொடரக்கூடாது. பருப்பு, காய்கறி, பழம், முட்டை, மீன், கோழி போன்ற பல்வேறு உணவுகளை படிப்படியாகச் சேர்க்க வேண்டும். சாதத்துடன் பருப்பும் சிறிது காய்கறியும் சேர்த்து மசித்துக் கொடுப்பது நமது பாரம்பரிய உணவு முறையிலும் எளிதான, சத்தான வழியாகும். ஆறு முதல் எட்டு மாதங்களில் தினமும் இரண்டு முதல் மூன்று முறை துணை உணவு வழங்கலாம்.

Q

தண்ணீர், சூப், பழச்சாறு எப்படி?

A

ஆறு மாதங்களுக்குப் பிறகு உணவுடன் சிறிதளவு தண்ணீரை குவளையில் கொடுக்கலாம். காய்கறி அல்லது பருப்பு வேகவைத்த மென்மையான சூப் போன்றவற்றை உணவின் ஒரு பகுதியாகக் கொடுக்கலாம். ஆனால் சூப் மட்டும் உணவாகிவிடக் கூடாது. பழத்தை அரைத்து அல்லது மசித்து கொடுப்பது பழச்சாறு கொடுப்பதைவிடச் சிறந்தது. சர்க்கரை சேர்த்த பழச்சாறு குழந்தைக்குத் தேவையில்லை. குறிப்பாக இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இனிப்பு பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

Q

கிழங்குகளும் பழங்களும் எப்போது?

A

உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற கிழங்குகளை நன்றாக வேகவைத்து மசித்துக் கொடுக்கலாம். வாழைப்பழம், பப்பாளி, பேரிக்காய் போன்ற மென்மையான பழங்களையும் மசித்து வழங்கலாம். குழந்தை ஒரு உணவை நன்றாக ஏற்றுக் கொண்ட பிறகு, படிப்படியாக பல்வேறு உணவுகளின் சுவையை அறிமுகப்படுத்த வேண்டும். நிறம், சுவை, மணம் மாறுபடும் உணவுகள் குழந்தையின் உணவு விருப்பங்களை விரிவுபடுத்துகின்றன.

Baby & Egg - குழந்தைகளுக்கு முட்டை
Baby & Egg - குழந்தைகளுக்கு முட்டை
Q

முட்டை, மீன், கோழி எப்போது?

A

ஒன்பது மாதம் ஆகும் போது குழந்தைக்கு நன்றாக வேகவைத்த முட்டையை சிறிய அளவில் அறிமுகப்படுத்தலாம். அதேபோல், எலும்புகள் முழுமையாக நீக்கப்பட்ட நன்றாக வேகவைத்த மீன் அல்லது நன்றாக வேகவைத்த கோழியை மென்மையாக மசித்து அல்லது அரைத்து வழங்கலாம். புதிய உணவுகளைச் சிறிய அளவில் அறிமுகப்படுத்தி, குழந்தையின் உடல் எதிர்வினையை கவனிக்க வேண்டும். கடுமையான தோல் ஒவ்வாமை அல்லது ஏற்கெனவே முட்டைக்கு ஒவ்வாமை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையுடன் அடுத்த உணவுகளை அறிமுகப்படுத்துவது நல்லது.

Q

உணவின் பதம் எப்படி மாற வேண்டும்?

A

நீர்த்த கஞ்சியாக ஆரம்பித்து படிப் படியாக திண்மமாக உணவை கெட்டிப் பதத்தில் தர வேண்டும். மசித்த உணவில் தொடர்ந்து, குழந்தையின் திறன் வளர வளர உணவின் பதத்தை படிப்படியாகக் கெட்டியாக்க வேண்டும். எட்டு மாதங்களுக்குள் பல குழந்தைகள் மென்மையான கேரட், ஆப்பிள் போன்ற நீளமான உணவுகளைத் தாங்களே கைகளில் பிடித்துக் கொண்டு கடித்து சாப்பிட கற்றுத் தாருங்கள்.

Q

குழந்தையைத் தானாகச் சாப்பிடப் பழக்கலாமா?

A

நிச்சயமாக! குழந்தை உட்காரும் நிலையில் இருக்கும்போது, மென்மையான சாதம், வேகவைத்த காய்கறி, மென்மையான பழத்துண்டு போன்ற வயதுக்கேற்ற உணவுகளை கையில் பிடித்து வாய்க்குக் கொண்டு செல்லப் பழக்கலாம். முதலில் குழந்தை உணவை சிந்தும். அழுக்கு செய்யும். சில உணவுகள் தரையில் விழும். இது கற்றலின் ஒரு பகுதி. பெற்றோர் அருகில் இருந்து கவனித்து, அவசரப்படுத்தாமல், வற்புறுத்தாமல் ஊக்குவிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பிரசவித்த பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்: உணவியல் நிபுணர் விளக்கம்!
Baby Eating - குழந்தை உணவுகள்
Q

உணவின் மிகப்பெரிய விதி என்ன?

A

குழந்தை 'போதும்' என்று சொல்லும் அறிகுறிகளையும் மதிக்க வேண்டும். பசி இருக்கும் போது உணவு வழங்குதல், மெதுவாக ஊட்டுதல், குழந்தையுடன் கண்களைப் பார்த்துப் பேசுதல், வற்புறுத்தாமல் ஊக்குவித்தல் ஆகியவை சிறந்த உணவூட்டும் முறைகள். சுத்தமான கைகள், பாத்திரங்கள் மற்றும் பாதுகாப்பாகத் தயாரிக்கப்பட்ட உணவு அவசியம். தேன் ஒரு வயதுக்கு முன் கொடுக்கக்கூடாது. முழு கொட்டைகள், பச்சை கேரட் போன்ற மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடிய உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

ஆறு மாதம் என்பது குழந்தைக்கு 'சாப்பிடக் கற்றுக்கொடுக்கும்' காலம். வயிற்றை நிரப்புவது மட்டும் நோக்கமல்ல. சுவை, பதம், நிறம், மணம், தானாகச் சாப்பிடுதல் என உணவின் உலகத்தை மகிழ்ச்சியாக அறிமுகப்படுத்துவதே இந்தப் பருவத்தின் அழகு!

இதையும் படியுங்கள்:
குழந்தை வளர்ப்பில் 10 தவறான மருத்துவ நம்பிக்கைகளை உடனே கைவிடுங்கள்!
Baby Eating - குழந்தை உணவுகள்
logo
Kalki Online
kalkionline.com