

ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மிகவும் முக்கியமான காலகட்டம். உடல் மாற்றம் மற்றும் மனமாற்றத்துடன் புதிதாக 'தாய்மை' என்னும் பதவியில் அந்தப்பெண் பொருந்தி போவது என்பது மிகப் பெரிய சவாலாகவே இருக்கும். அதுவரை எவ்வித பொறுப்புகளும் இன்றி மற்றும் தாயின் அரவணைப்பிலோ அல்லது கணவரின் அன்பிலோ திளைத்திருக்கும் பெண்கள் அதன் பின் முழுக்க முழுக்க தன் குழந்தையின் முழு பொறுப்பையும் ஏற்கும் சூழல் உருவாகும்.
பிரசவத்திற்குப் பிறகு தாயின் உடல் மீண்டு வரவும், தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவும் புரதம், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள், நல்ல கொழுப்பு மற்றும் போதுமான தண்ணீர் முக்கியம்.
எனினும் அந்த நேரத்தில் அவர்கள் முழு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் ஒவ்வாத சில உணவுகளை தவிர்ப்பதும் அவசியம். அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களுக்கு கத்தரிக்காய், பூசணிக்காய் போன்றவற்றை தவிர்க்க சொல்வார்கள். அதேபோல் நன்கு கரைத்த கஞ்சி மற்றும் மூலிகைகள் கலந்த ரசத்தை உணவில் சேர்ப்பார்கள்.
ஆனால் தற்போது எதிலும் கட்டுப்பாடு இல்லாமல் அவரவர் உடல் தேவைக்கு ஏற்றவாறு உணவுகளும் மாறி வருகிறது. இருப்பினும் பிரசவத்திற்கு பிறகு எதை சாப்பிடலாம் எனும் சந்தேகம் இன்னும் இருக்கிறது.
இதோ உங்களுக்காகவே சேலத்தில் கடந்த 30 வருடங்களாக மேயர் நகரில் EAT RIGHT THE எனும் Diet Clinic வைத்து பலருக்கும் உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணரான அபிராமி தந்த ஆலோசனை இங்கு..
Mrs. அபிராமி வடிவேல்குமார் MSc, பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணர் (Registered Dietitian) சேலம்.
பிரசவத்துக்கு பின்னர் உணவுகளில் தனி கவனம் வேண்டுமா?
நிச்சயமாக. பிரசவத்துக்கு பின் உணவு முறை என்பது மிகவும் கவனமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று. காரணம் ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறவி. அதாவது அவளது வாழ்க்கையே மாறும் தருணம். தனக்காக வாழ்ந்த ஒரு பெண் தாயாகவும் தன் குழந்தைக்காக தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறாள் எனும் போது அவளுக்கான முழு சக்தியைத் தருவதில் உணவுகளுக்கும் தனி பங்கு உண்டு.
நமது பாரம்பரிய முறைகள் பற்றி?
இந்த இன்டர்நெட் காலத்தில் பிரசவத்துக்கு பின் என்ன செய்ய வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும்? என்று எல்லா தகவல்களையும் ChatGPT இடம் தான் கேட்கிறார்கள். அதே சமயம் காலகாலமாக நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய சில வழிமுறைகளை தெரிந்து கொள்வது நல்லது.
குழந்தை பிறந்த சில நாட்கள் எப்படி உணவு எடுக்க வேண்டும்? தாய்ப்பால் மற்றும் உணவுக்கு தொடர்பு உண்டா?
கண்டிப்பாக உண்டு. குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு Colostrum என்று சொல்லப்படும் திரவமான பால்தான் சுரக்கும். பிறந்த குழந்தை முதல் நாள் 6 -10 துளிப்பால் உட்கொண்டால் போதுமானது. சில சமயம் 24 மணி நேரம் வரை குழந்தை பால் குடிக்காமல் இருந்தாலும் பயப்பட வேண்டாம். சரியான முறையில் தாய் குழந்தைக்கு பால் புகட்ட ஆரம்பித்தால் 24 லிருந்து 48 மணி நேரத்தில் தாய்க்கு பால் சுரக்கும் தன்மை அதிகரிக்கும். முதல் இரண்டு வாரங்களுக்கு குழந்தை மிகவும் குறைந்த அளவு பால்தான் குடிக்கும்.
அடுத்து குழந்தையின் எடை சிறிது குறைவதும் இயல்புதான். அந்த சமயத்தில் தாய்க்கும் ஜீரண சக்தி சற்று குறைவாகவே இருக்கும். அதனால் பிரசவத்திற்கு பின் முதல் இரண்டு வாரத்துக்கு எளிதாக ஜீரணமாக கூடிய வகையில் உணவுகளை தர வேண்டும். உதாரணமாக கஞ்சி, இட்லி, சாதம், வேக வைத்த காய்கறிகள் , பழங்கள் போன்ற உணவுகளே போதுமானது.
ஏன்? போஷாக்கு தரும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?
முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் குழந்தை நன்கு பால் குடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு தாய்க்கு மிகவும் போஷாக்கான உணவு கொடுத்தால் அதிகமாக பால் சுரந்து மார்பகத்தில் பால் கட்டிக் கொண்டு தாய் அவஸ்தைப்பட நேரிடும். அதனால் முதல் இரண்டு வாரங்களுக்கு அதிக எண்ணெய் மசாலா இல்லாமல் எளிமையான உணவே போதுமானது.
தாய்ப்பால் நன்கு சுரக்க என்ன வகை உணவுகள் அதிகம் தேவை?
பால் சுரப்பை கூட்டுவதற்கு பூண்டு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். முட்டை, பால், பருப்பு, இறைச்சி போன்ற முக்கியமான உணவுகளையும் தினமும் உட்கொள்ள வேண்டும். முருங்கைக்கீரை, சுறா புட்டு போன்ற உணவுகளையும் சேர்த்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
முக்கியமாக ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு லிட்டர் நீராகாரம் அதாவது ஜூஸ், தண்ணீர் போன்றவற்றை பருக வேண்டும்.
இந்த உணவுகள் மட்டும் தான் தர வேண்டுமா?
அப்படி அல்ல. ஒவ்வொருவரின் உடல் நிலையும் மாறுபடும். தாய்ப்பால் கொடுக்கும் பெண் என்பதற்காக குறிப்பிட்ட சில உணவுகளை மட்டும் அதிகமாக சாப்பிட வேண்டிய அவசியமில்லை. பலவகையான, சமநிலையான உணவுதான் சிறந்தது.
என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்? மேலும் டிப்ஸ்?
பால் கொடுக்கும் தாய்மார்கள் மூன்று மாதம் வரை அதிக மசாலா, வாய்வு கொடுக்கும் சுண்டல் மற்றும் கிழங்கு வகைகள் மற்றும் நலன் கெடுக்கும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். இதனால் தாய் சேய் இருவருக்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
எல்லாவற்றுக்கும் மேல் தாயும் சேயும் அமைதியான சூழ்நிலையில் வசிப்பது மிகவும் அவசியம்.
பிரசவித்த பெண்களுக்கு உணவுக்கட்டுப்பாடு என்பது அவர்களின் ஆரோக்கியம் மட்டும் அல்லாமல் குழந்தையின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது என்பதால் அதிக கவனம் தேவை.